

ஐரேப்பாவின் குளிர் பிராந்தியமான நார்வேயில் இருந்து கொண்டு, நம் பாரத தேசத்தின் பாரம்பரிய நுண்கலைகளை மற்ற ஜரோப்பிய நாடுகளுக்கு எடுத்து செல்கிறார், சென்னையிலிருந்து குடியேறிய விதூஷி உமா ரங்கநாதன்.
அது மட்டுமல்ல, அங்கிருக்கும் கலைஞர்களுடன் இணைந்து பயிற்சி முகாம், கலை நிகழ்ச்சிகள், விரிவுரைகள், சிறப்பு வகுப்புகள், இசைப்பட்டறை, இசை மூலமாக தேக, மன ஆரோக்கியத்தை மேம்படுத்துதல் போன்ற பலவித நிகழ்ச்சிகளைத் திறம்பட நடத்திக் கொண்டிருக்கிறார். தனது Art to Heart ஸ்தாபனத்தின் மூலமாக. பிரபல இசைக் கலைஞர்களான காயத்ரி வெங்கட்ராகவன், ஈரோடு நாகராஜ் ஆகியோரிடம் இசையும், நடனக் கலைஞர் ஜெயலக்ஷ்மி ஈஸ்வரிடமிருந்து பரத நாட்டியமும் கற்றவர்.
இவர் சமீபத்தில் நார்வே நாட்டில் தொடர்ந்து மூன்றாவது வருடமாக RagaRhythm Fest -2026 என்ற கலை விழாவை வெற்றிகரமாக நடத்தியுள்ளார். மூன்று நாட்கள், மூன்று பொருள் சார்ந்த இசை நிகழ்ச்சிகள் 1.Young in Action 2.Eternal Tunes of Saint Tyagaraja 3.Nordic Morning".
முதல் நிகழ்வான "Young in Action" Varmesentralen, Fornebu என்ற இடத்தில் நடந்தது. இவரால் இயக்கப்பட்ட இசை நிகழ்ச்சியில் பல்வேறு நாட்டைச் சேர்ந்த ஒன்பது இளம் கலைஞர்கள் பங்கேற்றனர். இந்திய சாஸ்திரிய மரபுகளையும் பிற இசை கலாச்சாரங்களின் தாக்கங்களையும் இணைத்து வழங்கினர். ஒவ்வொரு பாடலும் உலக அமைதி, ஒற்றுமை மற்றும் உள்ளார்ந்த சிந்தனை போன்ற சமூகச் செய்திகளை எடுத்துரைத்தது.
சுமார் 100 பேர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சி, அதன் படைப்பாற்றலுக்காக மட்டுமன்றி, இந்நிகழ்வு மூலம் சொல்லப்பட்ட கருத்துக்காகவும் பாராட்டப்பட்டது. இசை பல்வேறு பண்பாடுகளையும் இசை வகைகளையும் இணைக்கும் சக்திவாய்ந்த ஊடகமாக இருப்பதை இந்த நிகழ்ச்சி தெளிவாகக் காட்டியது என பார்வையாளர்கள் கருத்துத் தெரிவித்தனர். இளம் கலைஞர்களின் இந்தக் கூட்டு முயற்சி எல்லைகள் கடந்த சங்கீதத்தை அரங்கேற்றியது. இது பாரம்பரியத்தை புதுமையுடன் இணைக்கும் ஒரு பாலமாகவே அமைந்தது.
இரண்டாவது நிகழ்ச்சி ஸங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் ஆராதனை விழா. அவருடைய பஞ்ச ரத்ன கீர்த்தனைகளை கொண்டாடும் விதமாக நடைபெற்றது (Eternal Tunes of Saint Tyagaraja). இடம்: Varmesentralen, Fornebu.
பக்தியும் பாரம்பரியத்தையும் ப்ரதானமாக கொண்ட இந்த நிகழ்ச்சியில் நார்வே, ஸ்வீடன் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து 30-க்கும் மேற்பட்ட அனுபவம் மிக்க இசை கலைஞர்கள் கலந்து கொண்டு, வளமான, ஆழமான இசை அனுபவத்தை பார்வையாளர்களுக்கு வழங்கினர். ஸங்கீத ப்ரேமிகளுக்கு இது ஒரு அரிய ஆன்மீக அனுபவமாக அமைந்தது.
மூன்றாவது மற்றும் நிறைவு நிகழ்ச்சி Nordic Morning, Høvik-ல் நடைபெற்றது. இது இசையை அனுபவிக்க சொல்லித்தரும் புதுமையான முயற்சியாக அமைந்தது. சுமார் 35 பேர் கலந்துகொண்டு இந்த நிகழ்ச்சி நடைப்பயணத்துடன் (trail walk) ஆரம்பித்தது. நடைப்பயணத்தின்போது தாள கதி, வேகம், ஒலியை கவனிக்க சிறிய பயிற்சிகள் கொடுக்கப்பட்டது.
இதற்குப் பிறகு, இந்திய சாஸ்திரிய இசையை மையமாக கொண்ட ஒரு கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட செவிமடுக்கும் அமர்வு (Curated Lstening Session) நடைபெற்றது. இதில் ராகம், தாளம், இசை அமைப்பு மற்றும் கலைஞர்களின் பரஸ்பர பரிமாற்றம் போன்ற பல பரிமாணங்கள் விளக்கப்பட்டன. கலை ரசனையை அதிகரிக்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்ட இந்த அனுபவம், இசையை கேட்பதற்கு மட்டுமல்லாமல், அதை ஆழமாக உணரவும் பங்கேற்பாளர்களை ஊக்குவித்தது.
மொத்தத்தில், இந்த மூன்று நிகழ்ச்சிகளும் பல்வேறு சமூகங்களை சேர்ந்த கலைஞர்கள், ரசிகர்களை இனைக்கும் பாலமாகவும் அர்த்தமுள்ள தொடர்புகளை உருவாக்கவும், கலை ரசனையை வளர்க்கவும், பெரிதும் துனைபுரிந்தன.