நவராத்திரி வந்தாச்சு.. வருடா வருடம் கோலாகலமாக கொலு வைத்து விட்டு இப்போது வைக்க முடியவில்லையே என்று யோசிக்கிறீர்களா?!
கவலையை விடுங்கள்!
உங்களுக்காகவே வீடு தேடி வருகிறது றெடிமேட் கொலு!
ஆர்டர் கொடுத்தால் போதும்.கொலு படிக்கட்டுகளுடன் பொம்மைகளை கொண்டு வந்து, உங்கள் வீட்டில் கொலு வைத்துக் கொடுத்து விட்டுப் போகிறார்கள். நவராத்திரி கொலு ஆரம்பிக்கும் முதல் நாளில் தொடங்கி, கொலு முடியும் நாள் வரை உங்கள் வீட்டிலேயே இந்த கொலு இருக்கும். பிறகு அவர்களே வந்து திரும்ப எடுத்துப் போவார்கள்.
ஆஹா! எவ்வளவு எளிமையாக ஆகி விட்டது கொலு வைப்பது?! யாரையாவது கெஞ்சி கெஞ்சி பரணிலிருந்து பொம்மைகளை இறக்க வேண்டாம். பிறகு அவற்றை எடுத்து தூசி தட்டி துடைத்து சுத்தம் செய்ய வேண்டாம். கொலுப்படி 'ரெடிமேடி' ஆக இல்லாதவர்கள் எந்த எந்தப் பெட்டிகளை அடுக்கி வைத்து கொலுப்படி உருவாக்கலாம்னு தலையை பிச்சிக்க வேண்டாம். ஒவ்வொரு படிக்கும் விரிக்க வெள்ளை வேஷ்டிகளை தேட வேண்டாம்.
இவ்வளவு 'வேண்டாம்'கள் எப்படி சாத்தியம் என்று தானே கேட்கிறீர்கள்? இதை நமக்கு சாத்தியம் ஆக்கியவர் திரு.சிவராமன் என்பவர். இவர் 18 வருஷங்களாக 'ஃபுட் ஆன் வீல்ஸ்' என்று ஒரு அமைப்பை நடத்தி வருகிறார். உணவு ஆர்டர் செய்பவர்களுக்கு அவர்கள் இருக்கும் இடங்களுக்கே சென்று உணவை கொடுத்து வருகிறார். இவருடைய முக்கியமான வாடிக்கையாளர்கள் முதியோர்கள்தானாம். அதிக உப்பு, காரம் இல்லாமல் சாத்வீகமாக இவர் கொடுக்கும் உணவுக்கு வாடிக்கையாளர்கள் ஆயிரக்கணக்கில்!
சரி.. ரெடிமேடாக உணவு கொடுத்தவருக்கு, ரெடிமேட் கொலு ஐடியா தோன்றியது எப்படி?
‘’ஒருமுறை உணவு கொடுக்கச் சென்றபோது ஒரு மாமி ரொம்ப ஆதங்கப்பட்டுக் கொண்டார். ‘என் மகள், மருமகள் எல்லாம் இருந்தப்போ வீட்டில கோலாகலமா கொலு வைத்து எல்லோரையும் கூப்பிடுவோம்.
இப்போ எல்லோரும் வெளிநாட்டில இருக்காங்க. இங்கே நானும் இவரும்தான். எங்களுக்கும் வயதானதால், பரணிலிருந்து கொலு பொம்மை இறக்குவதை நினைத்துப் பார்த்தாலே ஆயாசமா இருக்கு. இதனால போன வருஷம் சும்மா சுவாமி அறை ஷெல்பிலேயே சின்னதா நாலு பொம்மைகள் வைத்து ஒப்பேத்திட்டோம்.
நாங்க முறையா கொலு வச்சப்போ எல்லாம் இந்த ஹாலே கண்கொள்ளா காட்சியா இருக்கும்’ என்று ஆதங்கப் பட்டுக் கொண்டார். அப்பதான் எனக்கு பொறி தட்டியது" என்று சொல்லத் தொடங்கினார் சிவராமன்.
‘’நாமே ஏன் இவர்களுக்கு கொலு வைத்து தரக் கூடாது என்று யோசனை வந்தது. உடனே செயலில் இறங்கிட்டேன்’’ என்கிறார் புன்சிரிப்புடன்!
நவராத்திரி ஆரம்பித்த நாளிலிருந்து - கொலு முடியும் நாள் வரை கொலுப்படியுடன் பொம்மைகளை யார் கேட்கிறார்களோ அவர்கள் வீட்டுக்குக் கொண்டு வந்து வைத்து கொடுக்கிறார்கள், லீஸ் அடிப்படையில் வாடகைக்கு இந்த சேவையை அவர் செய்கிறார்.
இதற்கு வாடகை 3000 ரூபாய். அதுதவிர போக்குவரத்து செலவு தனி. கொலுப்படிகள் 3,5 மற்றும் 7 என்று மாடல்களில் தகுந்த பொம்மைகளுடன் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப கொண்டு வந்து வைக்கிறார்கள்.
பெரிய நகரங்களில் சூப்பர் மார்க்கெட்களில் இவருடைய 'கொலு' டிஸ்ப்ளே செய்யப்பட்டு விளம்பரப் படுத்தப்படுகிறது. இதுவரை சென்னை, மதுரை, டில்லி, மும்பை, கொல்கத்தா, அஹமத்நகர் போன்ற நகரங்களில் வீடுகளில் இவர் கொலு வைத்துக் கொடுத்திருக்கிறாராம்.
‘’இந்த வருடம் 'டிமாண்ட்' அதிகரித்துள்ளது. முக்கியமாக பெங்களூரு, சென்னை போன்ற நகரங்களில்தான் அதிக ஆர்வமாக கொலு வைத்துத் தரும்படி கேட்கிறார்கள். இதை செயல்படுத்துவதில் என் சகோதரர்கள் மிகுந்த ஒத்துழைப்புத் தருவதால் சுலபமாக செய்ய முடிகிறது’’ என்று பெருமிதமாகச் சொன்னார், திரு.சிவராமன்.
‘எங்கள் வீட்டில் கொலு வைத்துத் தருகிறீர்களா?’ என்று மாற்றி மாற்றி இவர் அலைபேசிகளில் வரும் அழைப்புக்கிடையே நமக்காக இந்த தகவல்களை பகிர்ந்து கொண்டார் திரு சிவராமன்.