"குடும்ப உறவுகளை மையமாக கொண்ட படம்"- சற்குணம்!

நேர்காணல்
பட்டத்து அரசன்
பட்டத்து அரசன்

தமிழ் சினிமாவில் இளைய தலைமுறை இயக்குனர்களில் மிக முக்கியமானவர் சற்குணம். தமிழ் சினிமாவின் கதைக்களங்கள் மதுரை, கோவை, நெல்லை என்ற வட்டாரங்களை பிரதிபலித்த போது காவிரி டெல்டா மாவட்டங்களை கதைக்களமாக்கி வெற்றி கண்டவர்.

களவாணியில் தொடங்கிய சற்குணத்தின் பயணம் பட்டத்து அரசன் வரை தொடர்கிறது. விரைவில் வெளிவர இருக்கும் பட்டத்து அரசன் பற்றி கல்கி ஆன்லைனு க்கு சற்குணம் தந்த நேர்காணல்.

1.இது கபடி விளையாட்டை மைய்யமாக கொண்ட படம் போல தெரிகிறதே...?

சற்குணம் : இது குடும்ப உறவுகளை மைய்யமாக கொண்ட படம். இரு தார பங்கையும் தாத்தா -பேரன் அன்பையும் முரண்களையும் அடிப்படையாக கொண்டு உருவான கதை.

2. இந்த கதைக் களம் உருவான சூழல் எது?

சற்குணம் : நான் தஞ்சை மாவட்டத்தில் உள்ள என் ஊருக்கு சென்றிருந்த போது கபடி மேட்ச் நடந்தது. நானும் ஜாலியாக நண்பர்களுடன் மேட்ச் பார்த்துக் கொண்டிருந்தேன். திடீர் என்று ஏழு பேர் கொண்ட குழு ஒன்று வந்து இறங்கியது. பார்ப்பதற்கு இந்த குழு வித்தியாசமாக இருந்தது.

சற்குணம்
சற்குணம்

பொதுவாக கபடி டீமில் இருப்பவர்கள் இளம் வயதினராக இருப்பார்கள்.ஆனால் நான் பார்த்த ஏழு பேர் குழுவில் தாத்தா, பேரன், நடுத்தர வயது மனிதர் என பலர் இருந்தனர். விசாரித்ததில் இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்றார்கள். பட்டத்து அரசனுக்கான கதைக்கரு அங்கேயே கிடைத்து விட்டதாக உணர்ந்தேன். இதன் தொடர்ச்சியாக பல்வேறு கிராமங்களுக்கு சென்றேன்.

3.ராஜ்கிரண், அதர்வா தேர்வு திட்டமிடலா? தற்செயலா?

சற்குணம் : ஒரே குடும்பம், தாத்தா - பேரன் என்று யோசித்த போதே ராஜ் கிரணும், அதர்வாவும் என் மனதுக்குள் வந்து விட்டார்கள். பொத்தாரி என்பவர் தஞ்சை மாவட்டத்தின் புகழ் பெற்ற கபடி வீரர். இவரின் பெயரைத்தான் ராஜ்கிரண் கேரக்டர்க்கு வைத்துள்ளேன்.

பொத்தாரியை பார்க்க அவரது வீட்டிற்கு சென்றேன். அவர் இறந்து விட்டதாக சொன்னார்கள். இவர்தான் பொத்தாரி என்று ஒரு போட்டோவை காட்டினார்கள். பொத்தாரி பார்ப்பதற்கு அச்சு அசல் ராஜ்கிரண் சாரை போலவே இருந்தார். ஒத்த நிகழ்வு (co incident ) என்று சொல்வார்களே அது போலத்தான் இது என்று நினைக்கிறேன். சின்னதுரை என்ற மற்றொரு கபடி வீரரின் பெயரை அதர்வா கேரக்டர்க்கு வைத்திருக்கிறேன்.

4. பட்டத்து அரசன் படத்தில் நீங்கள் குறிப்பிட்ட கபடி வீரர்களின் வாழ்கையை சொல்ல போகிறீர்களா?

சற்குணம் : கபடி வீரர்களின் பெயர்களை மட்டும்தான் எடுத்துள்ளேன். மற்றபடி அவர்களின் வாழ்க்கையை பற்றி எதுவும் சொல்லவில்லை.

5.சிங்கம் புலி இருக்கிறார் நகைச்சுவைக்கு பஞ்சமில்லை என்று சொல்லுங்கள்..... ?

சற்குணம் : இது நகைச்சுவை படமல்ல. இருந்தாலும் அண்ணன் சிங்கம் புலி ஆங்காங்கே நறுக்கு தெறித்தார் போல நகைச்சுவை துணுக்குகளை அள்ளி தெளித்துள்ளார்

ராஜ்கிரண் - அதர்வா
ராஜ்கிரண் - அதர்வா

6. மண்ணின் கதைக்கு கன்னட ஹீரோயின் எதற்கு?

சற்குணம்: புதுமுகமாக ஹீரோயின் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். ஆஷிகா ரங்கநாத் கன்னடத்தில் சில படங்கள் நடித்திருந்தார். இந்த கதைக்கு ஆஷிகா சரியான நபராக இருப்பார் என்று தோன்றியது. படம் வெளியான பின் என் தேர்வு சரியானது என்பதை புரிந்து கொள்வீர்கள்.

7. ஜிப்ரானின் இசை எப்படி வந்துள்ளது?

சற்குணம் : சிறப்பாக வந்துள்ளது. அதே சமயத்தில் நான் நினைத்த கதைக்கு தேவையான பின்னணி இசையை சரியாக தந்துள்ளார் ஜிப்ரான். நான், கவிஞர் விவேகாவும் பாடல்கள் எழுதியுள்ளோம்.

8. தஞ்சை மாவட்டத்துக்காரரான நீங்கள் டெல்டா மாவட்ட விவசாய பிரச்சனைகளை பற்றி படம் எடுப்ப்பீர்களா?...

சற்குணம் : இதற்கான சரியான கதையும், தயாரிப்பாளரும், சூழ்நிலையும் அமைந்தால் கண்டிப்பாக எடுப்பேன்.

9..நீங்கள் முன்பு பார்த்த தஞ்சைக்கும் இப்போது பார்க்கும் தஞ்சைக்கும் என்ன மாற்றங்களை உணர்கிறீர்கள்?

சற்குணம் : எல்லா பகுதிகளிலும் ஏற்பட்டுள்ள மாற்றங்களை போலவே தஞ்சை பகுதியில் மாற்றம் வந்துள்ளது. நான் சிறு வயதில் பார்த்த அண்டை வீட்டினருடன் இருந்த பரஸ்பரம் இப்போது இல்லை என்பது போல் உணருகிறேன்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com