சர்வம் கிருஷ்ணார்ப்பணம்!

சர்வம் கிருஷ்ணார்ப்பணம்!

ஜெயஸ்ரீ ஆனந்த். 

 ‘’வராத்திரிக்கு இன்னும் கொஞ்ச நாள்தான் இருக்கு. அதுக்குள்ளே புதுசா கிருஷ்ணன் பொம்மை வாங்கினா தேவலை.. கோகுலாஷ்டமிக்கே இந்த பழைய விக்கிரகத்தை வெச்சு ஒப்பேத்தியாச்சு..’’ 

- சாரதா தனது ஆற்றாமையை வெளிப்படுத்தினாள்.

சாரதாவுக்கு எப்பவும் இந்த கோபாலனை விட , அந்த மாயக்கண்ணன் மேல் ப்ரியம் ஜாஸ்தி,  தினமும் பூஜையிலிருக்கும் கண்ணன் விக்ரஹத்தை அலங்கரித்து அழகு பார்ப்பாள். இப்போது அந்த விக்ரஹம் பின்னமானதால் தான் என்னிடம்  இந்த சம்பாஷணை .

"உங்கள நான் என்ன கேட்டேன்?  ஒரே ஒரு கண்ணன் விக்ரஹம். இத நானும் ஒரு மாசமா தினமும் கேட்டுண்டே இருக்கேன். நீங்களும், இதோ ஆச்சு , அதோ ஆச்சுன்னு சொல்றேளே ஒழிய இன்னும் ஆத்துக்கு விக்ரஹம் வந்தபாடில்லை. "என்றாள்.

"என்னம்மா பண்றது? நானும் வாங்கலாம்னு கிட்ட போனா சாதாரண குட்டி மண் விக்ரஹமே ஐநூறு, ஆயிரம்னு சொல்றான். பைசா கொறச்சுக்க மாட்டேங்கறான். கொஞ்சம் பொறுத்துக்கோ. எப்படியும் வாங்கிடலாம். " என்றேன்.

கோபாலன் ஆகிய நான் சங்கர ஸாஸ்திரிகளிடம் சேர்ந்து வைதீக கார்யங்கள்  பார்க்கிறே. அதில் வரும் நூறு இருநூறு  சொற்ப சம்பாத்தியத்தில் தான் எங்களின் காலட்சேபம்.  இதில் ஆசைப்பட்டதை வாங்க அவகாசம் வேண்டாமா?

"ஏய், .கோபாலா... நாளைக்கு மயிலாப்பூர் முக்தி ஸ்தலத்திற்கு வந்துடு, நாளைக்கு ராஜுவோட அப்பாவுக்கு  10-ம் நாள் காரியம் நடக்கறது.. மறந்துடாத ." என்று சுறுக்கமாக பேசிவிட்டு வைத்து விட்டார் சங்கர சாஸ்திரிகள்.

"நாளைக்கு நான் மைலாபூர் தான் போக வேண்டி இருக்கு. நீ கேட்ட விக்ரஹம் அங்க கிடைக்கிறதான்னு பார்கறேன்" என்றேன், சாரதாவிடம்!

 யிலாப்பூர் எங்கும்  கிருஷ்ண ஜயந்திகளை கட்டியிருந்தது. சிறிதும் பெரிதுமாக கிருஷ்ண பொம்மைகள்.  மாவிலை , தோரணங்கள், மண் பானைகள் புல்லாங்குழல்கள் கோலாட்டங்கள் என்று விதவிதமான கலைநயமிக்க பொருட்கள் சந்தைபடுத்தபட்டிருந்தது.

அங்கு வியாபித்திருந்த சூழ்நிலை, நாம்  ஒரு கணம்  கோகுலத்தில் தான் இருக்கிறோமா? என்ற உணர்வை நம்முள் நிச்சயம் எழுப்பி விடக் கூடும்.

நான் தயங்கியபடி ஒவ்வொரு கடையாக சென்று ஒவ்வொரு கிருஷ்ண பொம்மைகளாக எடுத்து, எடுத்து பார்த்தேன். எதுவுமே என் மனதுக்கு நெருக்கமாகவும் இல்லை. தீர்க்கமாகவும் இல்லை.

"டேய் கோபாலா, இங்க பார் .. உனக்காக தான் நான் காத்துண்டு நிற்கிறேன்" என்று சொல்வது போல் இடுப்பில் கைகளை வைத்துக் கொண்டு புல்லாங்குழலுடன் நின்ற கோலத்தில்   இருந்த கண்ணனை பார்த்தேன் .

"அடடா... என்ன அழகு.. முகத்தில்தான் என்ன ஒரு தீர்க்கம் ."  கைகளால் அந்த கண்ணனை அள்ளினேன். "கோபாலா, என்னைய உங்காத்துக்கு கூட்டிண்டு போ..  சாரதாவுக்கு என்னை ரொம்ப பிடிக்கும் " என்றது போல இருந்தது அந்த கண்ணனின் பார்வையும் புன்சிரிப்பும்.

"இது விலை என்னப்பா?" என்றேன்.

"ரெண்டாயிரம் சாமி " என்றான்.

அடேயப்பா.. அதற்குமேல் யோசிக்கவில்லை. கண்ணனை கீழே வைத்து விட்டு நகர்ந்து விட்டேன்.

" பின்னாடி கோபாலா.. கோபாலா ... என்னை கூட்டிண்டு போடா... "என்ற கண்ணனின் குரல் எனக்கு மட்டுமே கேட்டது போல் இருந்தது. காதில் வாங்காமல் வேக வேகமாக முக்தி ஸ்தலம் வந்து சேர்ந்தேன்.

முக்தி ஸ்தலத்தில் ராஜூவின் சொந்தபந்தங்கள் அழுது, அரண்டு புரண்டு அவரது அப்பாவிற்கு பத்து காரியங்கள் செய்து கொண்டிருந்தனர்.  எனக்கு பக்கத்தில் ஒடிசலாய் விலா எலும்புகள் வெளியில் தெரிய நின்றிருந்த  வெங்கட், என்னிடம் ரகசியமாக சொன்னான்..

"கோபாலா.. நாம இன்னிக்கு நரி முகத்துல தான் முழிச்சுருக்கோம் ... அதோ பாரு மஞ்சள் கலர்ல மடிசார் கட்டிண்டு நிக்கறாளே ஒரு மாமி, அவதான் செத்து போனவருடைய ஒரே பொண்ணு, அமெரிக்கால இருக்காளாம்.

தாராளமா எல்லாருக்கும் சம்பாவணையும், தானமும் பண்ணப்போறாளாம். கேள்வி பட்டேன். இன்னிக்கு நம்ம எல்லோருக்கும் எப்படியும் ஒரு ரெண்டாயிரம் தேறிடும்னு நெனக்கிறேன்" என்றான். காவி பற்கள் தெரிய சிரித்தபடி!

ரெண்டாயிரம் என்றதும் எனக்கு அந்த கிருஷ்ண விக்ரஹம் தான் நினைவுக்கு வந்தது.

"ஆகட்டும் பார்க்கலாம்" என்றேன்.

சங்கர வாத்தியார் வெகு ஸ்ரத்தையோடு மந்திரங்கள் சொல்ல சொல்ல ராஜூவும் அவருடைய தர்மபத்தினியும் முறையாக தானங்கள் கொடுத்தனர். நானும் தானம் பெறுவதற்கு கூட்டத்தோடு கூட்டமா நின்று கொண்டிருந்தேன்.

"கிருஷ்ணா , எனக்கு தங்கம் , வெள்ளி தானமா கெடச்சா நன்னாயிருக்கும், " என்று வேண்டிக் கொண்டு தானம் பெற கூட்டத்தில் காத்துக் கொண்டிருந்தேன்.

சங்கர ஸாஸ்திரிகள் ,  ஒவ்வொரு  தானங்களாக பெற்றுக் கொள்ள எங்கள் ஒவ்வெருத்தரையும்  கை நீட்டி அழைத்துக் கொண்டிருந்தார்.

 இதுவும் ஒரு லாட்டரி சீட் மாதிரி தான்! யாருக்கு எது தானம் கிடைக்கும் என்பது தெரியாது. அதனால், நானும் அவர் கண்ணில் படும்படி தேரே நின்று கொண்டிருந்தேன். தங்கம் என்ன? வெள்ளி என்ன?.. நான் எதிர்பார்த்த எந்த பொருளுமே எனக்கு தானமாக கிடைக்கவில்லை. கடைசியாக  ஒரு கிலோ ரேஷன் பச்சரிசியும் இரண்டு வாழைக்காயும் தான் எனக்குக் கிடைத்தது. "சர்வம் கிருஷ்ணார்ப்பணம் "  என்று நினைத்து வாங்கிக் கொண்டேன்.

கொண்டு வந்திருந்த அங்கவஸ்திரத்தில் அரிசியையும் வாழைக்காயையும்  மூட்டையாக கட்டி தோளில் போட்டுக் கொண்டு. தட்சணையாக கிடைத்த ஐநூறு ரூபாயில் சங்கர ஸாஸ்திரியிடம் இருநூறை கொடுத்து விட்டு மீதத்தை எடுத்துக் கொண்டு அகத்தை பார்க்க நடந்தேன்.

"ஏய் சாமி ...."குரல் வந்த திக்கை திரும்பி பார்த்தேன் அதே பொம்மை வியாபாரி தான்.

"என்னப்பா ... " என்றேன்.

" பொம்மை கேட்டியே? " என்றான். இப்பொழுது அவன் கடையில் எண்ணி இரண்டு பொம்மைகள்தான் இருந்தது. அதில் ஒன்று - நான் விரும்பிய அந்த கண்ணன்.

"என்னிடம் அவ்வளவு பணம் இல்லையப்பா" என்றேன்.

என்னை ஒரு முறை ஏற இறங்க பார்த்தான். "சரி சாமி .. உன்னால முடிஞ்சத கொடுத்துட்டு இத எடுத்துட்டு போ, இது ஒன்றுதான் ஒரு மாசமா விக்காமயே கெடக்கு... இந்த மட்டும்  தெனைக்கும் தூக்கிட்டு போயி தூக்கிட்டு வரேன். இன்னிக்கு இத்த நீ தூக்கிட்டு போ..." என்றவன் சிரித்தபடி  நான் தந்த முந்நூறில் இருநூறை எடுத்துக் கொண்டு நூறை என் கையில் தந்தான்.

‘’சர்வம் க்ருஷ்ணார்ப்பணம்’’ என்று குசேலனாக கண்ணனுடன் நான் பேசிக் கொண்டே நடந்தேன்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com