பழைய புத்தகம் வாங்கலையோ.. பேஸ்புக்கில் வாங்கலையோ?

சிவராஜ்
சிவராஜ்

-சுதா ராஜம்.

பழைய தமிழ்ப் புத்தகங்களை ஆன்லைனில் விளம்பரம் செய்து கொண்டு கனஜோராக, உட்கார்ந்து இடத்திலிருந்து மாதம் 25 லிருந்து 30 ஆயிரம் வரை ஒரு தமிழ் இளைஞர் சம்பாதிக்கிறார் என்றால் ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா?!

கோவை ஆவாரம்பாளையத்தில்,வெட்கிரைண்டர் வியாபாரம் செய்து  கொண்டிருந்த. சிவராஜ் என்ற அந்த இளைஞர், இப்போது பேஸ்புக் மூலமாக பழைய தமிழ் புத்தகங்களை விற்க, விற்பனை சக்கைபோடு போடுகிறது. அதிலும் இப்பொழுது வரும் நவீன கால புத்தகங்கள் அல்ல, அவை எல்லாம் 1980-களுக்கும் முந்திய அபூர்வமான ரத்தினப் புதையல்கள்.

இந்தக் கணினி யுகத்தில், கைபேசியில், உலக விவரங்கள் அனைத்தும் உள்ளங்கையில் அடங்கி கிடக்கிற நேரத்தில், பழைய தமிழ் புத்தகங்களை யார் படிப்பார்கள்  என்று நினைக்கிறீர்களா? அந்த நினைப்பு இருந்தால் தயவு செய்து மாற்றிக் கொள்ளுங்கள்… சிவராஜின் பேஸ்புக் பழைய புத்தக கடைக்கென்றே  மிகப்பெரிய ரசிகவட்டம் ஒன்று இருக்கிறது. சிவராஜை ஒரு நிமிடம் கூட விடாமல் வாட்ஸ் அப்பில் தொடர்பு கொண்டு, ‘அந்த புக் கிடைக்குமா.. இந்த புக் கிடைக்குமா?” என்று கேட்டுக் கொண்டிருக்கிறது.

‘’மிகவும் பழமையான 1969 கல்கி மற்றும் ஆனந்த விகடன் தீபாவளி மலர்களை ரூபாய் நாலாயிரத்திற்கும், அபூர்வமான தமிழ் இலக்கியங்கள் சிலவற்றை ரூபாய் பத்தாயிரம் வரைக்கும் இவருக்கு விற்பனை ஆகியுள்ளது. இன்னும் அந்த கால தீபாவளி மலர் புத்தகங்களுக்கு டிமான்ட் கூடிகொண்டே போகிறது’’ என்கிற சிவராஜ், அவற்றை விற்றுக் கொண்டும் இருக்கிறார்.

‘’புலவர் குழந்தை என்கிற பழம்பெரு இலக்கண ஆராய்ச்சியாளர் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். அவர் எழுதிய யாப்பதிகாரம் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் அவர் எழுதிய இராவண காவியம் என்ற அபூர்வமான  நூல் என் வலைதளத்தில்  விற்பனைக்கு உண்டு’’  என்று சிவராஜ் சொல்ல, ஆச்சரியமாகவே இருந்தது. இப்படி தமிழில் அபூர்வமான இலக்கணம் மற்றும் இலக்கிய கதை, கட்டுரைகள் மட்டுமல்ல.. மிக அரிய சில ரஷ்ய மொழிபெயர்ப்பு புத்தகங்கள், பழைய பைண்ட் செய்யப்பட்ட நாவல் புத்தகங்கள் என்று இன்று இவரிடம் ஏராளமாக விற்பனையாகின்றன. அதிலும் 1965-ல் சிறந்த நாவல் என்று கல்கியில் பரிசு பெற்ற   ஆர். சண்முகசுந்தரம் என்பவர் எழுதிய நாவல் ரூபாய் இன்று இவரிடம் கிடைக்கிறது என்றால் பார்த்து கொள்ளுங்கள்.. இவர்‌  எப்படி இந்த புத்தகங்களை எல்லாம் சேகரிக்கிறார்?

‘’கோவை உக்கடம் பகுதியில் உள்ள நான்கு ஐந்து பழைய புத்தகங்கள் விற்கும் கடைகள் என்னுடைய பேவரைட் கடைகள். அங்கு தீவிர வேட்டை நடத்தி, தேவையான புத்தகங்களை அள்ளிகொண்டு வருவேன். மேலும், இதன் மூலம் தமிழ்நாட்டில் எந்த மூலை முடுக்கில் இருந்தாவது பழைய புத்தகங்கள் வந்து சேர்ந்து விடுகின்றன. முதன்முதலில் 2018-ல் தொடங்கிய சிறு பொறி  இந்த முயற்சி. இப்போது பிரமான்டமாக வள்ர்ந்திருக்கிறது’’ என்ற சிவராஜ் தொடர்ந்தார்.

வாட்ஸ்அப்
வாட்ஸ்அப்

‘’சிறு வயதிலிருந்தே புத்தகம் படிக்கும் வழக்கம், அதை சேகரிக்கும் வழக்கம் மிகவும் இருந்தது. ஆனால்  ஒரு கட்டத்தில் வீட்டில் அதிகளவு புத்தகங்கள் சேர்ந்துவிட, என் அம்மா 'தயவு செய்து வீட்டில் இடம் போதவில்லை.. இவைகளை எடைக்கு கொடுத்து விட்டு காசாக்கி விடு ' என்று வற்புறுத்தினார். அதை எடைக்கு போட மனது கேட்காமல், ‘சரி என்னதான் ஆகிறது என்று பார்ப்போமே?!”  என்று முகநூலில் முதலில் அறிவிப்பு செய்தேன்.  

எழுத்தாளர் கௌதம நீலாம்பரனின் ஒரு சரித்திர கதையை விற்பதாக அறிவித்தார். அது தான் ஆரம்பம்! உடனே ஒரு ரசிகர் ‘அது அபூர்வ புத்தகமாச்சே.. கிடைப்பதே அரிது’ என்று அதை வாங்க முன்வந்தார். அதற்குப் பிறகு இந்த முகநூல் வட்டம் பெருகவே வாட்ஸப்பிலும் ஒரு குழு தொடங்கினேன். பின்னர் கோவையில் இருக்கும்  பழைய புத்தக வியாபாரிகள் மூலம் தேவையான புத்தகங்களை வாங்கி சேகரித்துக் கொள்கிறேன்’’ என்றார்.

அதில் தனது கமிஷனையும் சேர்த்து வைத்து விற்பனை செய்கிறார். ரசிகர்களின் நாடி‌ புரிந்து  அவர்கள் கேட்கும் புத்தகத்தை தேடி வாங்கிக் கொடுக்கிறார். இவரிடம் உள்ள புத்தகங்களின் அட்டைப் படத்தை புகைப்படம் எடுத்து வாட்ஸ் அப்பில் அனுப்பி  சந்தைப் படுத்தி  பொருளீட்டிக் கொண்டிருக்கிறார்.


இப்பொழுது இவரது ரசிகர்கள் 15 வயது இளைஞர்கள் முதல் 80 வயது முதியவர் வரை இவரை, ஒரு நிமிடம் கூட தூங்க விடாமல் வாட்ஸ் அப்பில் புத்தகங்கள் கேட்ட வண்ணமே இருக்கின்றனர். கணக்கில் அடங்காப் பழைய தமிழ் புத்தகங்களை விரும்பி வாங்கும் ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள் என்று இவரது வாடிக்கையாளர் பட்டியல் நீள்கிறது.

‘’கைபேசியை மட்டுமே எந்நேரமும் பார்த்துக் கொண்டு  இருப்பது கண்ணுக்கு கெடுதல். அதை உணர்ந்து  புத்தகங்களை கையில் எடுத்து வாசிக்கும் பழக்கம் திரும்பவும் தமிழ் அன்பர்களிடம் மெதுவாக சூடு பிடித்துக் கொண்டிருக்கிறது என்பதே உண்மை’’ என்கிறார் சிவராஜ்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com