வீராங்கனைகளை வீழ்த்தும் பாலியல் வன்முறை

வீராங்கனைகளை வீழ்த்தும் பாலியல் வன்முறை

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது இந்திய நட்சத்திர மல்யுத்த வீரர் வினேஷ் போகட், சாக்ஷி மாலிக் மற்றும் பஜ்ரங் பூனியா உள்ளிட்ட ஏராளமான மல்யுத்த வீரர்கள் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளைச் சுமத்தியுள்ளனர். பிரிஜ் பூஷன் சரண்  சிங் பெண் மல்யுத்த வீரர்களைப் பல ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக உள்ள பிரிஜ் பூஷன் சரண் சிங்கால் பாலியல் வன்கொடுமைக்குக் குறைந்தது 20 மல்யுத்த வீராங்கனைகள் ஆளாக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர்களில் 18 வயதிற்கு குறைவான சிறுமிகள் பற்றி தனக்குத் தெரியும் என்று வினேஷ் போகட் கூறினார். மல்யுத்த வீராங்கனை மீதான பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராகப் பேச முயன்றதாகவும், ஆனால் நிலைமை என்றாவது ஒருநாள் சரியாகிவிடும் எனக் கருதி அமைதியாக இருந்ததாகவும் மல்யுத்த வீரர்கள் கூறியுள்ளனர்.

மல்யுத்த வீரர்கள் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தது மட்டுமல்லாமல் தேசிய மல்யுத்த முகாம்களில் பணியமர்த்தப்பட்ட பயிற்சியாளர்களும் பெண் வீராங்கனைகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாக அவர்கள் கூறியுள்ளனர். பெண் மல்யுத்த வீராங்கனைகள் மீதான பாலியல் வன்முறை ஒருபக்கம் என்றால், டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பஜ்ரங் புனியாவும், மல்யுத்த வீரர்களை சிங் அடிக்கடி அறைவதும், அனைவர் முன்னிலையில் அவமானப்படுத்துவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

ஒலிம்பிக், காமன்வெல்த் உள்ளிட்ட சர்வதேச போட்டிகளில் இந்திய மல்யுத்த வீரர்கள் பதக்கம் வென்று நாட்டிற்குப் பெருமைச் சேர்ந்திருந்தனர்.  தேசியக் கொடியைப் போர்த்தியபடி பதக்கங்களுடன் நின்றிருந்த இந்திய வீரர்களைப்  பார்க்கும்போதே நாட்டு மக்களே அந்த விருதை வென்றது போன்ற உணர்வைப்  பெற்றிருந்தனர். அவ்வாறு தங்களது கடின முயற்சியால் பதக்கம் வென்ற வீரர்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் வன்முறைக்கு ஆளாகியுள்ளனர் என்பது தற்போது சர்வதேச அளவில் பெரும் கவனம் ஈர்த்துள்ளது. குறிப்பாகப் பெண் வீராங்கனைகள் மீதான பாலியல் வன்முறை நாட்டையே உலுக்கி உள்ளது.

சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பெண் மல்யுத்த வீராங்கனைகள் வைத்துள்ள பாலியல் குற்றச்சாட்டு, இதற்கு முன்பு கிட்டதட்ட 33 ஆண்டுகளுக்கு முன்பு, 1990ம் ஆண்டு டென்னிஸ் வீராங்கனை ருசிகா கிர்ஹோத்ராவின் வழக்குடன் ஒற்றுமை கொண்டுள்ளதாக உள்ளது.

யார் இந்த ருச்சிகா கிர்ஹோத்ரா?

1990ம் ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதி 14 வயதான இளம் மற்றும் நம்பிக்கைக்குரிய டென்னிஸ் தடகள வீராங்கனையான ருச்சிகா கிர்ஹோத்ரா, ஹரியானா ஐபிஎஸ் அதிகாரியும் ஹரியானா லான் டென்னிஸ் தலைவருமான எஸ்பிஎஸ் ரத்தோரால் பஞ்ச்குலாவில் உள்ள அவரது அலுவலக அறையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். தன் மீதான பாலியல் வன்முறை குறித்து வாய்மூடி இருக்காமல் இதனை குடும்பத்தாரின் துணையோடு வெளியே தைரியமாகச் சொன்னார் ருச்சிகா. ஆனால், இன்றைக்கு பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டு தர்ணாவில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீராங்கனைகளுக்குத் தைரியம் சொல்ல அரசியல் கட்சிகளும், சக விளையாட்டு வீரர்களும் முன்வந்திருப்பதுபோல் அப்போது, சிறுமி ருச்சிகாவின் குடும்பத்திற்கு ஆதரவாக யாரும் முன்வரவில்லை என்பது கவனிக்கத்தக்கது. சில மாதர் அமைப்புகளும், வழக்கறிஞர் மது பிரகாஷ் போன்ற சிலர் மட்டும் ருச்சிகாவுக்காக ஆதரவாக இருந்தனர்.

ருச்சிகா கிர்ஹோத்ரா
ருச்சிகா கிர்ஹோத்ரா

ருச்சிகாவின் குடும்பத்தினர் ரத்தோர் மீது அப்போது ஹரியானாவின்  முதல்வராக இருந்த ஹுகாம் சிங் மற்றும் உள்துறைச் செயலரிடம் புகார் அளித்தனர். இதுதொடர்பாக விசாரணை  மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டது. ஆனால், 1991ல் ஹரியானாவில் ஆட்சி மாறியது. பஜன் லால் சிங் தலைமையிலான  காங்கிரஸ் அரசாங்கம் ரத்தோருக்கு எதிரான விசாரணையை ஆமை வேகத்தில் மேற்கொண்டது. பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருந்த ரத்தோர் அதேகாலகட்டத்தில் காவல் துறையில் டிஜிபியாக பதவி உயர்வு வழங்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தன்னிடம் இருந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி ருச்சிகாவின் குடும்பத்தைத் துன்புறுத்த ஆரம்பித்தார் ரத்தோர். இதன் தொடக்கமாக பாலியல் வன்முறைக்கு ஆளான சிறுமி ருச்சிகா பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டார், அவரது சகோதரர் ஆஷூ மீது குறைந்தது ஆறு கார் திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இரண்டு மாதங்கள் காவலில் வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டார். கடைசிவரை போராட்டத்தை முன்னெடுத்த ருச்சிகாவின் தந்தை அரசுப் பணியிலிருந்து பலமுறை இடமாற்றம் செய்யப்பட்டார்.

ருச்சிகாவின் குடும்பம் மட்டுமல்லாமல் இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக இருந்த அவரது தோழி ஆராதனாவும் பலமுறை நீதிமன்றத்தில் அலைக்கழிக்கப்பட்டார். இறுதியில், அவமானம் மற்றும் சித்திரவதைகளால் சோர்வடைந்த ருச்சிகா விஷம் அருந்தி 1993ம் ஆண்டு டிசம்பர் 29ம் தேதி தற்கொலை செய்துகொண்டார்.  ருச்சிகாவின் மரணத்திற்குப் பிறகு அவரது சகோதரர் விடுவிக்கப்பட்டார். ஆனால், தன் மகளின் தற்கொலைக்கு நியாயம் கேட்டு அவரின் தந்தை உறுதியாக இந்த வழக்கை எதிர்கொண்டார்.

ஆனால், குற்றம்சாட்டப்பட்ட ரத்தோர் காவல் துறையில் பல உயர் பதவிகளை வகித்தத்தொடங்கினார். ஆனால், மாதர் அமைப்புகளும், வழக்கறிஞர் மது பிரகாஷ் போன்றோர் உறுதியாக ருச்சிகாவுக்கு நீதி வேண்டி நீண்டதொரு சட்டப் போராட்டத்தை மேற்கொண்டனர். இந்நிலையில்தான், பல நாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்பதுபோல் 2000ம் ஆண்டுக்குப் பிறகு ருசிகா கிர்ஹோத்ரா வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. அதுவரை, வழக்கிலிருந்த அதிகார பலத்தினால் தப்பித்துவந்த ரத்தோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதன்பிறகு ரத்தோர் ஹரியானா டிஜிபி பதவியிலிருந்து நீக்கப்பட்டு விடுப்பில் அனுப்பப்பட்டார். ஆனால் இந்த வழக்கின் விசாரணை ஏறக்குறைய பத்தாண்டுகளாக நடந்து, இறுதியாக 2009ம் ஆண்டு டிசம்பர் 21ம் தேதியன்று சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தால் ரத்தோர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். பாலியல் குற்றச்சாட்டின் பேரில் மட்டுமே நீதிமன்றம் அவரை விசாரித்ததால் அவருக்கு ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

ரத்தோர்
ரத்தோர்

தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்த ரத்தோருக்கு உயர் நீதிமன்றம் தண்டனை காலத்தை 6 மாதத்தில் இருந்து 18 மாதங்களாக நீட்டித்து தன்னால் முடிந்த நீதியை நிலைநாட்டியது. இதன்பின்னர் கைது செய்யப்பட்ட ரத்தோர் சிறைக்கு அழைத்துச் செல்லும் வழியில் ருசிகா கிர்ஹோத்ராவின் நண்பர் ஒருவரால் கடுமையாகத் தாக்கப்பட்டார். அந்த தாக்குதலை ரத்தோர் என்றைக்குமே மறந்திருக்க மாட்டார்.

தமிழ்நாட்டின் நிலை என்ன?

இதேபோல் கடந்த காலங்களில் தமிழ்நாட்டில் பெண் விளையாட்டு வீராங்கனைகளுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். குறிப்பாக, பிரபல தடகள பயிற்சியாளரான நாகராஜன் மீது பாலியல் புகார் எழுந்தபோது அவர் உடனடியாக குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். பயிற்சியாளர் நாகராஜன் மீதான பாலியல் புகார் அடுத்தடுத்து எழுந்தபோது தமிழக அரசின் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவின் துணை ஆணையர், எண்ணிற்கு (9444772222)  தொடர்பு கொண்டு புகாரளிக்கலாம் என்றும், புகார் கொடுப்பவர்களின் விவரங்கள் வெளியே தெரியாமல்,  ரகசியமாக பாதுகாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இது பாதிக்கப்பட்ட வீராங்கனைகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியது.

பயிற்சியாளர் நாகராஜன்
பயிற்சியாளர் நாகராஜன்

அதேபோல், பெரம்பலூரில் அரசு விளையாட்டு விடுதியில் தங்கி பயலும் மாணவிகளுக்குப் பயிற்சியாளர் தர்மராஜன் மற்றும் விளையாட்டு அலுவலர் சுரேஷ் ஆகியோர் பாலியல் தொல்லை கொடுப்பதாகப் புகார் எழுந்தபோது, இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதுபோன்ற செய்திகள் சொல்வதெல்லாம் ஒன்றுதான். பெண்கள் மீதான பாலியல் வன்முறைக்கு எதிராக மௌனத்தை கலைத்து தைரியமாகக் குரல் கொடுக்கவேண்டும் என்பதுதான். 

கிட்டதட்ட 19 ஆண்டுகள் நடைபெற்ற ருச்சிகா கிர்ஹோத்ரா வழக்கு இந்திய நீதித்துறையில் பாலியல் குற்றச்சம்பவங்கள் தொடர்பான வழக்கில் ஒரு முக்கிய வழக்காகப் பார்க்கப்படுகிறது. ருச்சிகாவுக்கான  நீதி மிகத் தாமதமாக வழங்கப்பட்டாலும் என்றாவது ஒருநாள் சட்டம் தன் கடமையை நிறைவேற்றும் என்பதற்கு உதாரணமாக அமைந்துள்ளது. அதனால்தான் இந்தியாவின் நீதித்துறை மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்ட மல்யுத்த வீராங்கனைகள், பாலியல் வழக்குப்பதிவுச் செய்யப்பட்டுள்ள தேசிய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷண் சிங்கை வரும் 21ம் தேதிக்குள் கைது செய்யப்படாவிட்டால், தங்களின் போராட்டம் தீவிரமடையும் என எச்சரித்துள்ளனர். அதற்கு ஏற்றாற்போல் அரசியல் கட்சிகள், விவசாயிகள், மாணவர்கள் என அனைத்து தரப்பிலிருந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வீரர்களுக்கு ஆதரவாகக் களத்தில் குதித்துள்ளனர்.

ருச்சிகா கிர்ஹோத்ரா, வினேஷ் போகத், சாக்ஷி மாலிக் என விளையாட்டுத் துறை மட்டுமல்லாது தங்களுக்கு எதிரான பாலியல் வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுத்த ஒவ்வொரு பெண்ணும்  இன்றைய தலைமுறையினருக்குச் சொல்வது எல்லாம் ஒன்றுதான். பாலியல் வன்முறையால் அவமானப்படவேண்டியது பாதிக்கப்பட்டவர்கள் அல்ல... அந்த குற்றத்தை செய்தவர்களே என்பதுதான் உண்மை. So Lets SpeakUp...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com