கந்த சஷ்டி பெருவிழா!

செந்தூர் முருகன்
செந்தூர் முருகன்
Published on

ருடந்தோறும் ஐப்பசி மாத அமாவசையை அடுத்த பிரதமை திதியன்று கந்த சஷ்டி பெருவிழா ஆரம்பிக்கிறது. இந்த நாள் முதல் ஆறு நாட்கள் வரை கந்த சஷ்டி விரதம் அனுசரிக்கப்படும். ஆறு நாட்கள் கழித்து சஷ்டி திதியன்று சூர சம்ஹாரம் நடைபெறும். அசுரன் சூரபத்மனை முருகக் கடவுள் சம்ஹாரம் செய்யும் சம்பவமே கந்த சஷ்டி விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இந்த கந்த சஷ்டி திருவிழா ஆறு நாட்களில் முருக பக்தர்கள் பல்வேறு வகையில் விரதமிருந்து இறைவனை சரணடைந்து பல்வேறு கோரிக்கைகளை மனதில் வைத்து வழிபடுவார்கள். முருகக் கடவுளின் ஆறுபடை வீடுகளிலும் கந்த சஷ்டி கொண்டாடப்பட்டாலும், திருச்செந்தூரில், அது சூரசம்ஹாரம் நடந்த இடம் என்பதால், கந்த சஷ்டி விழா மிக விமரிசையாக வருடந்தோறும் கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் அக்டோபர் 25ஆம் தேதி ஆரம்பிக்கும் கந்த சஷ்டி விழாவில் சூரசம்ஹாரம் சஷ்டி திதியான 30ஆம் தேதி நடைபெறுகிறது.

பிரம்மதேவனின் மகனான காசிபன் கடுந்தவம் புரிந்து சிவனிடமிருந்து மேலான சக்தியைப் பெற்றான். ஆனால், ஒரு நாள் அசுரர் குருவான சுக்ராச்சாரியாரால் ஏவப்பட்ட ‘மாயை’ என்னும் அரக்கப் பெண்ணிடம் மயங்கி தான் பெற்ற தவ வலிமை எல்லாவற்றையும் இழந்தான். காசிபனுக்கும் மாயைக்கும் மனித உருவத்தில் சூரபத்மனும், சிங்க முகம் கொண்ட சிங்காசுரனும், யானை முகம் கொண்ட தாரகாசுரனும், ஆட்டின் முகம் கொண்ட அசமுகி என்னும் அசுர குணம் கொண்ட பிள்ளைகள் பிறந்தனர். இவர்களுள் சூரபத்மன் சர்வ லோகங்களையும் அரசாளும் சர்வ வல்லமை பெற எண்ணி சிவபெருமானை நோக்கிக் கடுந்தவம் புரிந்து 108 யுகங்கள் உயிர் வாழவும், 1008 அண்டங்களையும் அரசாளும் வரத்தையும், பெண்ணால் பிறக்காத ஒருவராலன்றி வேறு ஒரு சக்தியாலும் தன்னை மாய்க்க முடியாது என்னும் வரத்தையும் பெற்றான்.

சூரபத்மன் தான் பெற்ற வரத்தால் ஆணவம் மிகுந்து அதர்ம வழியில் ஆட்சி புரிந்து இந்திரனின் மகனை சிறையில் அடைத்து தேவர்களையெல்லாம் துன்புறுத்தினான். உலகிலுள்ள எல்லா நல்லுயிர்களையுமே துன்பப்படுத்தினான். தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர். தேவர்களைக் காக்கத் திருவுளம் கொண்ட சிவபெருமான் தனது மூன்றாவது கண்ணான நெற்றிக் கண்ணிலிருந்து ஆறு நெருப்புப் பொறிகளை உண்டாக்கினார். அதனை வாயு பகவான் சரவணப் பொய்கையில் சேர்த்தார். அவை ஆறு குழந்தைகளாக கார்த்திகைப் பெண்டிரிடம் வளர்ந்தனர். பார்வதி அவர்கள் ஆறு பேரையும் ஒருசேரத் தழுவியபோது அவர்கள் ஒரே குழந்தையாக ஆறு தலை பன்னிரெண்டு கரங்களுடன் சண்முகன் ஆனான்.

சூரசம்ஹாரம்
சூரசம்ஹாரம்Picasa 3.0

சிக்கல் என்னும் ஊரில் பார்வதியிடமிருந்து சக்தி வேலைப் பெற்ற சிங்காரவேலன் சூரபத்மனைப் போரில் அழித்தான். ’சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சம்ஹாரம்’ என்று இதைச் சொல்கின்றனர். கந்த சஷ்டியின் ஐந்தாம் நாள் சிக்கலில் வேல் வாங்கும் நிகழ்வு நடைபெறுகிறது. முதலில் மாயையே உருவான யானைமுகனையும், பின்னர் சிங்கமுகாசுரனையும் தொடர்ந்து ஆணவமே உருவான சூரபத்மனையும் சுவாமி ஜெயந்திநாதர் வேல் கொண்டு அடுத்தடுத்து வதம் செய்கிறார். இறுதியாக மாமரமும், சேவலுமாக உருமாறி வரும் சூரபத்மனை சேவலும் மயிலுமாக மாற்றி சுவாமி ஆட்கொள்கிறார். மயிலை தனது வாகனமாகவும், சேவலை தனது கொடியாகவும் சுவாமி வைத்துக் கொள்கிறார். இந்தப் போரில் வீரபாகு உள்ளிட்ட வீரர்கள் முருகனுக்கு உதவியாக இருந்தனர்.  முருகப்பெருமான் சூரபத்மனை அழித்த நாள்தான் வருடத்தில் ஒருமுறை
சூரசம்ஹாரத் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. இந்தப் போர் மூன்று இடங்களில், தரை வழிப்போராக திருப்பரங்குன்றத்திலும், விண்வழிப் போராக திருப்போரூரிலும் மற்றும் கடல் வழிப்போராக திருச்செந்தூரிலும் நடைபெற்றதாம்.

தமிழகம் மட்டுமின்றி, இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை போன்ற நாடுகளிலிருந்தும் சூரசம்ஹாரத்தைக் காண ஆண்டுதோறும் லட்சக் கணக்கில் மக்கள் திருச்செந்தூர் வருகின்றனர். திருச்செந்தூரில் சூரசம்ஹாரத்தன்று அதிகாலையில் 1 மணிக்கு நடை திறக்கப்படும். 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம். 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், நடுப்பகல் ஒரு மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் நடைபெறும். மாலை 4.30 மணிக்கு மேல் கடற்கரையில் சுவாமி ஜெயந்திநாதர் சூரனை வதம் செய்கிறார். தொடர்ந்து சந்தோஷ மண்டபத்தில் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெறுகிறது. அதன்பின் சுவாமியும் அம்பாளும் புஷ்ப சப்பரத்தில் எழுந்தருளி திருவீதி வலம் வந்து மகாதேவர் சன்னிதி முன்பு சாயாபிஷேகம் நடைபெறும்.

ஸ்ரீ ஜெயந்திநாதர்
ஸ்ரீ ஜெயந்திநாதர்

ந்த சஷ்டி விரதத்தை முருக பக்தர்கள் இரண்டு விதமாக மேற்கொள்கிறார்கள். ஒன்று முருகன் கோயிலிலேயே தங்கி அங்கே கொடுக்கப்படும் பிரசாதத்தை மட்டுமே உண்டு விரதம் இருப்பார்கள். இரண்டு வீட்டிலேயே விரதம் மேற்கொள்பவர்கள், காலையில் குளித்து விட்டு முருகன் திருவுருவப்படத்திற்கு பூ அலங்காரம் செய்து பூஜை செய்யலாம். முருகனை வணங்கி கந்த சஷ்டி, திருப்புகழ் உள்ளிட்ட முருகன் சிறப்புகளை உணர்த்தும் பாடல்களைப் பாடலாம். வெறும் பால், பழம் மட்டுமே அதுவும் ஒரு வேளை மட்டுமே உட்கொண்டு விரதம் இருக்கலாம். கந்த சஷ்டி ஆறு நாட்களும் விரதம் இருக்க முடியாதவர்கள் கடைசி நாளான சஷ்டி தினத்தன்று மட்டுமாவது விரதம் இருந்து முருகனை வணங்கினால் தீராத நோய்கள் தீரும். திருமண பாக்கியம் கைகூடி வரும். குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது காலம் காலமாக இருந்து வரும் நம்பிக்கை.

கந்த சஷ்டி விழாவும் சூரசம்ஹார நிகழ்வும் முருகனின் படைவீடுகளில் மிகக் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். ஆனால், முருகனின் ஐந்தாவது படை வீடான திருத்தணியில் மட்டும் இந்த சூரசம்ஹார விழா நடைபெறுவதில்லை.  முருகப்பெருமான் சினம் தணிந்து வள்ளியை மணம் புரிந்து அமைதியாகக் காட்சி தரும் திருத்தலம்தான் திருத்தணிகை. கந்த சஷ்டி திருவிழாவையொட்டி இந்தக் கோயிலில் வள்ளி திருக்கல்யாண நிகழ்வு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.  இதைக் காண்பவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும் என்று நம்பப்படுகிறது.

அனைத்து முருகன் தலங்களிலும் வருடத்திற்கொரு முறை கந்தசஷ்டி பெருவிழா கோலாகலமாக ஆறு நாட்கள் கொண்டாடப்படுகிறது. நாமும் பக்தியோடு கந்த சஷ்டி விரதம் இருந்து அருகிலுள்ள முருகன் கோயிலுக்குச் சென்று கருணைக் கடவுளாம் முருகப்பெருமானை வழிபட்டு வாழ்வில் எல்லா பயன்களையும் அடைவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com