சின்னத்திரையின் லேடி சூப்பர் ஸ்டார் பெப்ஸி உமா... மலரும் நினைவுகள்!

சின்னத்திரையின் லேடி சூப்பர் ஸ்டார் பெப்ஸி உமா... மலரும் நினைவுகள்!
Published on

சமீபத்தில் பிஹைண்ட் வுட்ஸ் கோல்டு ஐகான் விருது பெப்சி உமாவுக்கு வழங்கப் பட்டிருக்கிறது.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விருதைப் பெற்று, மேடையேறிப் பேசிய பெப்சி உமாவுக்கு ஏகப்பட்ட அப்ளாஸ்கள்.

பெப்சி உமாவுக்கான ரசிகர்கள் அப்போதும்,இப்போதும்... எப்போதுமே அவரை ரசித்துக் கொண்டே தான் இருக்கிறார்கள். 15 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சின்னத்திரையில் வரவிருப்பதாக அவர் ஒரு ஹிண்ட் கொடுத்திருக்கிறார். வரட்டுமே!

90ஸ் கிட்ஸ்கள் மிகச்சரியாக நினைவு கூர வேண்டுமென்றால், அவர்களுக்கு லேடி சூப்பர் ஸ்டார் பெப்சி உமா தான். இல்லையா பின்னே!

இதை நான் சொல்லவில்லை. நிகழ்ச்சியில் பெப்சி உமாவுக்கு விருது அளித்து கெளரவித்த செய்தி வாசிப்பாளர் ரத்னா மற்றும் “நீங்கள் கேட்டவை” விஜயசாரதி இருவருமே குறிப்பிட்டது தான் அது.

அவர்கள் சொன்னதை நிராகரிக்க ஏதுமில்லை. ஏனெனில், சாதாரணமாக ஃபேன் ஃபாலோயிங் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் , அதெல்லாம் தாண்டி பெப்சி உமாவுக்கு பிரமாதமான வகையில் ஸ்டார் ஃபாலோயிங் இருந்தது அந்தக் காலத்தில். பெரிய பெரிய ஹீரோக்கள் முதல் சின்னக் குழந்தைகள் வரை அவருக்கு ரசிகர்கள் இருந்தார்கள். புதிதாக யாரேனும் நிகழ்ச்சித் தொகுப்பாளர்களாக அறிமுகமாகி கொஞ்சம் கெத்துக் காட்டினால் போதும் அவர்களைக் கலாய்க்க, நீ என்ன பெரிய பெப்சி உமான்னு நினைப்பா!? என்பார்கள். அந்த அளவுக்கு அவருக்கு ரசிகர்களிடம் ரீச் இருந்தது.

ஆரம்பத்தில் சன் டிவி தமிழ்மாலை நிகழ்ச்சியை மாலை 6 மணிக்கு மேல் தான் ஒளிபரப்பிக் கொண்டிருந்தார்கள். அப்போதெல்லாம் கேபிள் டிவிக்கள் தான் கோலோச்சிக் கொண்டிருந்தன. எங்கள் ஊரில் கேபிள் டி.வி என்றால். ஆபரேட்டர் தன்னுடைய இடத்தில் ஒரு வீடியோ டெக் வைத்துக் கொண்டு ஊர் முழுக்க யாரெல்லாம் பணம் கொடுத்து இணைந்திருக்கிறார்களோ அவர்களது டிவிக்களில் ஒயர் இணைப்புக் கொடுத்து அனைத்து வீடுகளுக்கும் மாலையில் ஏதாவது ஒரு நடுவாந்திர பழைய தமிழ் திரைப்படத்தை ஒளிபரப்புவார். அவை, பெரும்பாலும் நகரத்தின் முன்னணித் திரையரங்குகளில் வெளியாகி ஓய்ந்து போன திரைப்படங்களாகவே இருக்கும். உதாரணத்திற்கு இது தான்டா போலீஸ், நீதிக்குத் தண்டனை, கேப்டன் பிரபாகரன், புலன் விசாரணை, கரகாட்டக்காரன், பொங்கி வரும் காவேரி, மருது பாண்டி, அம்மா பிள்ளை, சோலைக்குயில் வகையறா படங்கள், அந்தப் படங்கள் தான் அன்றைக்கு கிராமங்களில் இருப்பவர்களுக்கு கேபிள் டிவி உபயத்தில் பார்க்கக் கிடைத்த திரைப்படங்கள்.

பிறகு ஸ்மால் டவுன்களில் முதன்முதலாக சன் டிவியின் தமிழ்மாலை ஒளிபரப்புத் தொடங்கியது. வேலை, படிப்பு நிமித்தம் அங்கு இடம்பெயர்ந்தவர்களுக்கு அது ஒரு மிகச்சிறந்த பொழுதுபோக்கு அம்சமாக இருந்தது நிஜம். மாலை 6 மணிக்குள் சமையலை முடித்து , வீட்டுப்பாடங்களை முடித்து டிவி முன் ஆஜராக வேண்டும். எங்கள் எல்லோருக்கும் அது ஒரு நித்திய அஜெண்டாவாக இருந்தது அன்றைக்கு.

அப்போது எங்கள் வாழ்வில் புத்தம் புதிதாக அறிமுகமாகி தென்றல் வீசச் செய்தார்கள் சிலர். அவர்களுக்குப் பெயர் நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள். அவர்களில் முதன்முதலில் மனம்கவர்ந்தவர் சன் டிவி யின் E.மாலா அவரைத் தொடர்ந்து வந்தார்கள் ரபி பெர்னாட், ஆனந்த கீதன், ரெகோ, ஸ்ரீலேகா, உமா பத்மநாபன், ஜேம்ஸ் வசந்தன், விஜய் ஆதிராஜ், சாகுல் ஹமீது, விஜய சாரதி, விஷ்வா... அர்ச்சனா, சொர்ணமால்யா, காயத்ரி ஜெயராம், என் நினைவிற்கு எட்டியவரை இவர்களை முதலாம் அலைவரிசை நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் எனலாம். அதன் பிறகு ராஜ் டிவி வந்தது, விஜய் டிவி வந்தது பிறகு அது ஸ்டார் விஜய் ஆயிற்று. பிறகு சொல்லவே வேண்டாம் 90 களுக்குப் பிறகு ஏகப்பட்ட சேனல்கள் ஏகப்பட்ட தொகுப்பாளர்கள். அப்போதிருந்து இப்போது இந்த 2023 வரை மீள் நினைவுகளை அசைபோட்டால் அடேயப்பா எத்தனை எத்தனை தொகுப்பாளர்கள் கடந்து போயிருக்கிறார்கள்.

அவர்களில் சிலரது பெயரைக்கூட நாம் இப்போது மறந்து விட்டிருப்போம். ஆனால், என்றுமே மறக்க முடியாத நபர்களென நீடித்திருப்பவர்கள் தான் மேலே குறிப்பிடப்பட்டவர்கள்.

இதில் பெப்சி உமா பற்றிச் சொல்ல ஒரு சுவாரஸ்யமான விஷயம் இருக்கிறது.

தமிழ் புத்தாண்டா, தைப்பொங்கலா, அல்லது தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிக்காகவா என்று தெளிவாக நினைவில் இல்லை. அப்படிப்பட்ட ஏதோ ஒரு கொண்டாட்ட தினம்... அது மட்டும் நினைவில் இருக்கிறது.

அன்று சன் டிவி ஒரு போட்டியை அறிவித்திருந்தது. தங்களது தொலைக்காட்சியின் நிகழ்ச்சித் தொகுப்பாளர்களில் மக்களின் மனம் கவர்ந்த தொகுப்பாளர் யார் என்று அறியும் போட்டி அது. அதுவரையிலும் எங்களுக்கெல்லாம் சன் டிவி என்றாலே அதன் சிறந்த தொகுப்பாளர் E.மாலா தான். அவர் அணிந்து வரும் அழகழகான சுரிதார்கள், புடவைகளோடு அவரது தூய தமிழ் வர்ணனைகளுக்கு என்றே அப்போது ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்தார்கள். எனவே அந்தப் போட்டியில் அவர் தான் வெல்வார் என்று நாங்கள் உறுதியாக நினைத்திருந்தோம். பெப்சி உமா அப்போது தான் சன் டிவியில் அறிமுகமாகியிருந்தார். அவரும் போட்டியில் இருந்தார். அப்போது அவர் கல்லூரி மாணவியாக இருந்திருக்கக் கூடும். விஜய் ஆதிராஜ், சாகுல் ஹமீது, விஜயசாரதி, என்று பலர் லிஸ்ட்டில் இருந்த அந்தப் போட்டியில் சீனியர்கள் அனைவரையும் ஓரம்கட்டி முதலிடம் பிடித்தது யார் தெரியுமா?

ரசிகர்கள் டிரெடிஷனலாக இருந்த மாலாவைக் காட்டிலும் அன்றைய தேதிக்கு அல்ட்ரா மாடர்ன் என்று கருதப்பட்ட பெப்சி உமாவுக்கு அதிக ஓட்டுக்களை இட்டு அவரை வின்னர் ஆக்கியிருந்தார்கள். இதை அப்போது பெப்சி உமாவே எதிர்பார்த்திருக்க மாட்டார். அறிமுகமான சில நிகழ்ச்சிகளிலேயே அவருக்கு ஃபேன் ஃபாலோயிங் கற்பனைக்கு எட்டாத வகையில் இருந்தது. அதை அப்போது வார இதழ் ஒன்றுக்கு அளித்த நேர்காணலொன்றில் அவரே பகிர்ந்திருந்தார். இப்போது அவருக்கு அதெல்லாம் நினைவிருக்குமா என்று தெரியவில்லை.

“நாமெல்லாம் எங்க ஜெயிக்கப் போறோம். ஃபேன்ஸ் ஓட்டுல மாலா தான் ஜெயிப்பாங்கன்னு நினைச்சேன்.” என்று அவர் கூறி இருந்தார்.

ஆனால், ரசிகர்களின் மனம் கவர்ந்த நிகழ்ச்சித் தொகுப்பாளராக வெற்றி பெற்ற பெப்சி உமாவின் புரஃபெஷனல் வாழ்வில் பிறகு நடந்ததெல்லாம் ஹிஸ்டரி. இன்றும் கூட எந்த நிகழ்ச்சித் தொகுப்பாளரைக் கேட்டாலும், ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெறும் விஷயத்தில் அவர்கள் அடைய நினைக்கும் இலக்கானது பெப்சி உமா முன்னதாக அடைந்து காட்டிய இலக்காகவே இருக்கக் கூடும்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு சின்னத்திரைக்கு வரவிருக்கிறார் என்று தகவல். 15 ஆண்டுகள் என்றார்கள். அதனாலென்ன 25 ஆண்டுகள் கழித்துப் பார்த்தாலும் கூட அவர் அப்படியே தான் இருப்பாரோ என்னவோ!

ஹாட்ஸ் ஆஃப் டு யூ பெப்சி உமா!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com