அண்ணாதுரையின் சமயோசிதம்: வெளிநாட்டில் ஒரு சமயம் விருந்து ஒன்றுக்கு அறிஞர் அண்ணா சென்றிருந்தார். அந்த விருந்து அளித்தவர் மிகப்பெரும் செல்வந்தர். உணவு மேஜையில் பல தட்டுகள் இருந்தன. பீங்கான், வெள்ளி மட்டுமல்லாது, தங்கத்திலும் தட்டுகள் இருந்தன. தன்னுடைய படோடோபத்தையும் தனது நாட்டின் பெருமையை கூற வேண்டும் என்ற எண்ணத்தில், ‘‘நான் தினம் ஒரு தட்டு விதம் முப்பது நாளைக்கு முப்பது தட்டுகளில் சாப்பிடுவேன்’’ என்றார் அந்த செல்வந்தர்.
இதைக் கேட்டு அண்ணா, ‘‘எங்கள் நாட்டில் சிறு கிராமத்தில் இருக்கும் ஏழை கூட ஒரு வேளை சாப்பிட்ட தட்டில் மறுமுறை சாப்பிட மாட்டான்’’ என்றார். அங்கிருந்த அனைவரும் ’‘அப்படியா’’ என்று கேட்டனர்.
‘‘ஆமாம், அது வாழை இலை’’ என்றார் அறிஞர் அண்ணா.
அண்ணாதுரையின் எளிமை: 1959ல் புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் நடந்த தமிழ் மன்ற விழாவிற்கு அறிஞர் அண்ணா சிறப்புரை ஆற்ற அழைக்கப்பட்டிருந்தார். விழாவிற்கு முன்னர் ஒரு லாட்ஜில் தங்க வைக்கப்பட்டிருந்தார். விழா நேரத்திற்கு முன் அவரை அழைத்து வரச் சென்ற விழா பொறுப்பாளர் ஒருவர் அண்ணாதுரையிடம் சில குறைகளைக் கண்டார். குறைகள் என்றால் பெரிதாக இல்லை. எல்லாம் அவரது தோற்றம் குறித்தவையே.
சேவிங் செய்து இரு நாட்களான தோற்றத்தில் அவரது தாடி, போட்டிருந்த சட்டையை மடித்து தலையணையில் வைத்து படுத்து அதையே அணிந்திருந்தார். இதனால் சட்டை கசங்கி இருந்தது. அண்ணாவிடம், ‘அண்ணா அந்தச் சட்டையை தாருங்கள் பெட்டி போட்டு எடுத்து வருகிறேன். அப்படியே நாவிதரையும் அழைத்து வருகின்றேன். சவரம் செய்து கொள்ளுங்கள்’ என்றார். ‘‘என்னை நீ தமிழ் மன்றத்தில் பேச அழைத்துச் செல்கிறாயா? இல்லை சுயம்வரத்திற்கு அழைத்துச் செல்கிறாயா? எந்த ஜோடிப்பும் வேண்டாம். நான் இப்படியே பேசி விட்டுச் செல்கிறேன்” என்றார் அண்ணா. அந்த எளிமையான தோற்றத்திலேயே பேசி விட்டுச் சென்றார் அண்ணா.
அண்ணாவின் நகைச்சுவை உணர்வு: கவியரசர் கண்ணதாசன் திமுகவில் இருந்த காலத்தில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இத்திருமணம் முடிந்த சில நாட்கள் கழித்து அண்ணாவின் வீட்டிற்கு சென்றார் கவியரசர். திருமணம் பற்றி கவியரசரும் அண்ணாவிடம் எதுவும் கூறவில்லை. இதை எப்படிச் சொல்வது? சொன்னால் ஏதாவது திட்டுவாரோ என இருந்து விட்டார். பிறகு தம் வீட்டிலேயே சாப்பிட்டு போகச் சொன்னார் அண்ணா. இருவருக்கும் இலை போடப்பட்டது. கவிஞருக்கு போடப்பட்ட இலை மிகவும் சிறியதாக இருந்தது. எனவே கவிஞர் இன்னொரு இலையை எடுத்து முன்பு வைக்கப்பட்ட இலையுடன் சேர்த்து பெரிதாகிக் கொண்டார்.
இதை கவனித்த அண்ணா, “உனக்கு எதுலையும் இரண்டுதான் தேவைப்படுகிறது போலிருக்கிறது’‘ என்றார். அண்ணா எதைக் குறித்து சொன்னார் என உணர்ந்த கவிஞர் சிரித்துக் கொண்டார்.
ஆடம்பரத்தை விரும்பாத அண்ணா: அண்ணாதுரை முதல்வராக இருந்தபோது அவருக்கே தெரியாமல் அவருடைய நுங்கம்பாக்கம் வீட்டை மரவேலைப்பாடுகளுடன் கூடிய பர்னிச்சர்களைக் கொண்டு அழகுபடுத்திவிட்டார் அவர் மீது அன்பு கொண்ட ஒருவர். வீட்டுக்கு வந்த அண்ணா பர்னிச்சர்களைப் பார்த்து கடும் கோபம் கொண்டார். முன்பிருந்த வசதி போதாதா? முதலமைச்சர் பதவி என்பது கிரீடம் அல்ல. அது ஒரு வேலை. அதனை ஒழுங்காக மக்கள் என்ற எஜமானருக்கு கட்டுப்பட்டு செய்ய வேண்டும். இதுபோன்ற வீண் ஆடம்பரங்கள் இந்த வேலைக்குத் தேவையில்லை. உடனடியாக இவற்றை எல்லாம் அப்புறப்படுத்துங்கள்” என்று கூறி அப்புறப்படுத்த வைத்தார் அண்ணா.
அண்ணாவின் படிப்பார்வம்: அண்ணா புத்தகம் படிப்பதில் தீவிர ஆர்வம் கொண்டவர். ஒரு சமயம் அவர் டெல்லி சென்று விட்டு சென்னைக்கு திரும்புமுன் டெல்லியில் உள்ள ஒரு பிளாட்பார கடையில் வரலாற்று நூல் ஒன்றை வாங்கினார். பின்னர் தனது உதவியாளிடம், “நாம் சென்னை திருப்புவதற்கு என்ன ஏற்பாடு செய்தீர்கள்?” என்று கேட்டார். விமான டிக்கெட் வாங்கி விட்டேன்” என்றார் உதவியாளர்.
உடனே அண்ணா, “அந்த விமான டிக்கெட்டை ரத்து செய்து விடு. நாம் ரயிலில்தான் போகிறோம். இந்த நூலை நான் படித்து முடிக்க வேண்டும். அதற்கு ரயில் பயணம்தான் சிறந்தது. இரண்டு இரவுகள் கிடைத்தால் இந்த நூலை படித்து முடித்து விடுவேன்” என்றாராம். அண்ணாவின் படிப்பார்வத்திற்கு எல்லையே இல்லை.