கவியரசர் கண்ணதாசனைப் பற்றிய சில நினைவுகள்!

ஜீன் – 24 கவிஞர் கண்ணதாசன் பிறந்தநாள்!
கவியரசர் கண்ணதாசனைப் பற்றிய சில நினைவுகள்!
Published on

லேட் கண்ணதாசன்

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஒரு விழாவுக்கு கவிஞர் கண்ணதாசன் தாமதமாக வந்தார். மாணவர்கள் எல்லோரும்   லேட் கண்ணதாசன் என்று கை தட்டியவாறு ஆரவாரம் செய்தார்கள் இதைக் கேட்ட கவிஞர் சிரித்துக் கொண்டே மேடையில் அமர்ந்தார்.

கவிஞர் பேசும்போது நான் எவ்வளவு பெரிய பாக்கியம் செய்தவன் தெரியுமா நான் ரொம்ப புண்ணியம் பண்ணியவன் என்றார்.

எல்லோரும் விழித்தார்கள்…

உடனே கவிஞர் என்ன எல்லோருக்கும் என்னவென்று தெரியவில்லையா? நான் இங்கு தாமதமாக வந்தபோது லேட் கண்ணதாசன்னு சொல்றதை நான் செத்த பிறகு கேட்க முடியுமா? அந்த விஷயத்தில் நான் கொடுத்து வச்சவன் இல்லையா என்று சொல்ல மாணவர்களே எல்லோரும் ஓ வென்று சிரித்தார்கள் .

அங்கே நிற்க முடியாதுப்பா 

முன்னாள் முதல்வர் கலைஞர் மு கருணாநிதி அவர்கள் நகைச்சுவையாய் பேசுவதில் வல்லவர் என்பது அனைவரும் அறிந்ததே.

கவிஞர் கண்ணதாசன் வாழ்ந்த காலத்தில் நடந்த நிகழ்வு இது.

தேர்தல் நெருங்கிக் கொண்டிருந்தது. எந்தெந்த தொகுதியில் யார் யாரை நிறுத்துவது என பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருந்தது கண்ணதாசனும் தேர்தலில் நிற்பதற்கு ஆயத்தமாகி கொண்டிருந்தாராம்.

அப்போது ஒருநாள் இரவு கலைஞர் அவர்களுக்கு தொலைபேசி அழைப்பு வந்தது தொலைபேசியில் பேசியவர் கலைஞர் அன்பு நண்பர் கவியரசு கண்ணதாசன் அவர்கள்.

என்னப்பா செய்தி? என்று கலைஞர் அவர்கள் கேட்க,

நான் தேர்தலில் நிற்பது என்று முடிவு எடுத்துவிட்டேன். நான் பாண்டிச்சேரியில் நிற்கப் போகிறேன் என்று சொன்னாராம்.

கலைஞர் சட்டென்று கவிஞரே, பாண்டிச்சேரியில் நிற்கப் போகிறேன் என்று சொல்கிறீர்களே அங்கு உங்களால் நிற்க முடியாதே (கவிஞர் மது அருந்தும் பழக்கமுள்ளவர்) என்று வேறு ஒன்றை மனதில் வைத்துக்கொண்டு வேடிக்கையாக பேச தொலைபேசியிலேயே கவிஞர் கடகடவென்று சிரித்தாராம்.

கண்ணதாசனின் குறும்பு

கவிஞர் கண்ணதாசன் ஒருநாள் அவரது நண்பர் வீட்டிற்கு சென்றிருந்தார். நண்பர் வீட்டின் கதவு தாளிடப் பட்டிருந்தது கதவை திறக்க வேண்டி கவிஞர் கதவை வேகமாக தட்டினார்

கவிஞரின் நண்பர் வீட்டின் உள்ளே இருந்து யாரது என்று குரல் கொடுத்த உடனே கண்ணதாசன் An outstanding poet is standing outside (ஒரு தலை சிறந்த கவிஞர் வெளியே நின்று கொண்டிருக்கிறார்) என்று குறும்பாக ஆங்கிலத்தில் சொன்னார். கதவை திறந்து பார்த்த நண்பர் கவிஞரைக் கண்டதும் சிரித்துக் கொண்டே அவரை உள்ளே வரவேற்றுள்ளார்.

கண்ணதாசன் செய்த குறும்பு

கவிஞர் கண்ணதாசன் மலேசியா சென்றிருந்தபோது நடந்த சம்பவம் இது. மலேசியாவில் பினாங்கு நகரத்தில் கண்ணதாசன் கலந்துகொள்ள இருந்த விழா அது. கோலாலம்பூரில் இருந்து பினாங்கு நகரத்திற்கு குறித்த நேரத்தில் சென்று சேர வேண்டிய கட்டாயத்தில் இருந்தார் கவிஞர் கண்ணதாசன்.

ஓட்டுனர் வண்டியை விரைவாக செலுத்துகின்றார் மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் கார் பறக்கிறது. கவிஞருக்கு கார் போகும் வேகத்தை கண்டு சற்று பயம் தொற்றிக் கொண்டு விட்டது. ஓட்டுனரிடம் கவிஞர் சற்று மெதுவாக போப்பா என்று சொல்கிறார். ஓட்டுனர் கேட்பதாக இல்லை. வேகத்தை மேலும் மேலும் கூட்டிக்கொண்டே போகிறார்.

கவிஞர் சற்று கடிந்து கொண்டே மெதுவாக போவென்று  சொன்னேனில்லே என்று மீண்டும் சொல்கின்றார்.

இல்லீங்கய்யா இந்த வேகத்தில் போனால்தான் விழாவுக்கு குறித்த நேரத்தில் சென்று சேர முடியும் என்று ஓட்டுனர் பதில் தருகிறார்.

உடனே கவிஞர் பத்து நிமிஷம் தாமதமா போனால் பரவாயில்ல. ஆனால் பத்து வருஷம் முன்னாடியே போய்விடக்கூடாதல்லவா அது தான் சொல்கிறேன் என்று குறும்பாக சொன்னதும் ஓட்டுநர் சிரித்தே விட்டார்.

(பிரபலங்கள் செய்த குறும்புகள் என்ற நூலிலிருந்து படித்ததில் பிடித்தது)

-ஆர் ஜெயலட்சுமி

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com