ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்த திருநாளான இன்று நாடு முழுவதும் ஸ்ரீ கிருஷ்ண ஜயந்தி விழா கோலாகலமாக் கொண்டாடப் படுகிறது.
அந்த வகையில் குழந்தை கிருஷ்ணன் கொலுவிருக்கும் ஸ்ரீ குருவாயூர் கோயிலிலும் கிருஷ்ண ஜயந்தி விழா விமரிசையாகக் கொண்டாடப் படுகிறது.
ஸ்ரீ குருவாயூரப்பனுக்கு அபிஷேகம், ஆராதனைகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, பல ஊர்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து வந்துள்ள பக்தர்கள் துலாபாரம் நேர்த்திக் கடன் கொடுக்க, வரிசை கட்டி நின்றுள்ளனர்.
கேரளா மாநிலம் மட்டுமல்லாமல் வெளியூர்களிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்து இன்று குருவாயூர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர் குழந்தைகள் கிருஷ்ணர் மற்றும் ராதை வேடம் அணிந்து ஊர்வலமாக வந்தனர்.
குருவாயூர் கோவில் அருகே உள்ள மம்மியூர் சிவன் கோவிலில் இருந்து ஊர்வலமாக வந்து குருவாயூர் கோவிலில் கிழக்கு நடையில் ஆடல் பாடல் என களை கட்டியது.
தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கிருஷ்ண ஜெயந்தி இன்று கொண்டாடப்படும் நிலையில் குருவாயூர் கோவிலில் நேற்று மாலை முதலே கிருஷ்ண ஜெயந்தி விழா களைக்கட்டி உள்ளது.
கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு குருவாயூர் கோவிலில் மூலவர் கிருஷ்ணனுக்கு வழக்கமாக நடைபெறும் பூஜைகள் மட்டுமே நடைபெற்றது மற்றபடி கோவிலுக்கு வெளியே கிருஷ்ண ஜெயந்தி விழா பக்தர்களால் விமர்சையாக கொண்டாடப்பட்டது.