கார்கி புரட்சி பெண்ணா? 

கார்கி புரட்சி பெண்ணா? 

-தனுஜா ஜெயராமன்  

(இது திரை விமர்சனமல்ல)

மீபத்தில் தியேட்டரில் வெளியாகி நிறைய பேரின் பாராட்டுதல்களை பெற்ற திரைப்படம் கார்கி.  தற்போது சோனி லைவ் OTT யிலும் வெளியாகியுள்ளது. பெண் குழந்தைகள் மீதான வன்கொடுமை மற்றும் பாலியல் துன்புறுத்தல் குறித்து பேசுகிறது இத்திரைப்படம் என்கிறார்கள்.

பலருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தக் கூடிய நல்ல கருத்துள்ள படம் தான்.ஆனால் கதை குறித்துசில சந்தேகங்கள் எழுவதை தவிர்க்க இயலவில்லை.முதலில் கார்கி பாலியல் குற்றத்திற்கு ஆளான தனது தந்தையை விடுவிக்க போராடுகிறார்.

அவருக்கு ஆதரவாக யாருமே வழக்கை எடுக்க தயங்குகையில் கார்கி மேல் இரக்கங்கொண்டு மனமுவந்து வழக்கை நடத்த தயாராகிறார் காளி வெங்கட்.ஆனால் கார்கி அவரை தனது வீட்டு வேலையாள் போல அதட்டுவதும் மிரட்டுவது ஏன் ?

காளி வெங்கட் தனது வழக்கின் ஒரு பாகமாக குற்றஞ்சாட்டபட்டவரின் மனைவியை அதாவது கார்கியின் அம்மாவை உங்கள் கணவர் ஏன் அடிக்கடி வேலையை விடுகிறார் என சாதாரணமாக விசாரிக்க…"இப்படி ஒரு சிந்தனையே உங்களுக்கு வரக்கூடாது" என கார்கியால் மிரட்டபடுவார் காளி வெங்கட்.

கோர்டில் அரசு தரப்பு வக்கிலாக வரும் கிருஷ்ணன் திருநங்கை நீதிபதியை நேரிடையாகவே பார்த்து..சாதாரண ஜட்ஜாக இருந்திருந்தால் வழக்கு இந்நேரம் முடிந்திருக்கும் என குற்றஞ்சாட்டுகிறார். இதற்கு திருநங்கை நீதிபதி ஆணின் திமிரையும் பெண்ணின் வலியையும் ஒருங்கே உணர தன்னால் முடியும் என பதிலடி தந்திருந்தாலும்.. கோர்டில் ஜட்ஜை அதுவும் மூன்றாம்பாலினத்தவரை ஒரு அரசுதரப்பு வழக்கறிஞர் அவமானபடுத்துவது சரியான செயலா? தண்டனைக்குரியதா?


பாதிக்கப்பட்ட குழந்தையை குற்றஞ்சாட்டபட்ட நபருக்காக எத்தனை முறை அடையாள அணிவகுப்பு நடைபெறும் இடத்திற்கு அழைத்து வந்து நிர்பந்தபடுத்துவார்கள் என்பதில் ஏதும் வரைமுறையேயில்லை.

இரண்டு பெண்குழந்தைகளுக்கு தந்தை என்ற ஒரே காரணத்திற்காகவே தனது தந்தை குற்றமற்றவர் நினைக்கிறார் கார்கி. அவர் தவறே செய்திருக்க வாய்ப்பில்லைஎன எதை வைத்து முடிவு செய்கிறார் என்பதிலும் தெளிவில்லை.

குழந்தை வண்புணர்வு காட்சிகளை இவ்வளவு விளக்கமாக எடுக்க தேவையில்லைஆட்சேபம் தெரிவிக்க வேண்டிய மற்றும் வன்மையாக கண்டிக்க வேண்டிய காட்சியமைப்பு அது.

தனது தந்தை குற்றவாளி என நேரில் பார்த்த லிவிங்ஸ்டன் சொல்வதை நம்பினாலும் கூட குற்றஞ்சாட்டபட்ட தந்தையை ஏதும் கேட்காமல் பாதிக்கப்பட்ட பெண் குழந்தையை சந்தித்து போட்டோவில் அடையாளங்காட்ட நிர்பந்தபடுத்துவது மிகவும் நெருடலான காட்சி.

கிளைமாக்ஸில் கார்கியே குழந்தையை அழைத்துவந்து அடையாள அணிவகுப்பில் மறுபடியும் அடையாளங் காட்ட சொல்கிறார். கிளிஷேவான காட்டியமைப்பு.

கடைசிவரை குற்றஞ்செய்த தந்தையை ஒருவார்த்தை கூட நறுக்கென கேட்கவேமாட்டார் கார்கி. தனது வீட்டை பொறுத்தவரை கண்ணியம் கடைபிடிப்பார்.

கடைசி காட்சியில் பாலியல் குற்றங்கள் மலிந்து கிடக்கும் காலகட்டத்தில் தனது சிறுவயது தங்கைக்கு மஞ்சள் நீராட்டுவிழாவை சிறப்பாக நடத்தி மகிழ்வார் கார்கி. அதுவும் இத்தகைய சங்கடமான சூழலில்.

ஆரம்பத்தில் குற்றஞ்சாட்டபட்ட நபரின் குடும்பத்திற்கு இழைக்கப்படும் கோப நடவடிக்கைகளையதார்த்தமாக காட்டிய காட்சியமைப்புகள் குற்றம் நிரூபிக்கபட்டதும் மறைந்து மாயமாகி விடுவது ஏன்? குற்றம் நிருபிக்கபட்டவுடன் அனைவராலும் அந்த குடும்பத்தை சாதாரணமாக ஏற்று கொள்ள முடிகிற காட்சியமைப்புகள் நாடகத்தன்மை நிறைந்தவை.

தனது வாழ்வை பணயம் வைத்து வாதாடி தோற்றுபோகும் வக்கீல் காளி வெங்கட்டிற்கு குறைந்தபட்சம் ஒரு மன்னிப்பு கூட கேட்காத கார்கி சுயநலமிகுந்தவளா?

லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்தனது மகளை கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்த காமூகன் ஒருவன் வீட்டு விழாவிற்கு அதுவும் மஞ்சள் நீராட்டு விழாவிற்கு பாதிக்கப்பட்ட குழந்தையுடன்வாழ்த்தி பரிசளிக்க அழைத்து வரும் பாசமிகு தந்தையான சரவணனின் காட்சிகள் முற்றிலும் முரண்பாடானவை..  இதன்மூலம் என்ன சொல்ல வருகிறார் இயக்குனர் என்றே புரியவில்லை.

இந்த திரைப்படம் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் குறித்து பேசுவது மட்டுமே போதுமானது என நினைத்திருக்கிறார்.அதை காட்சியமைப்பு செய்யக்கூடிய நுணுக்கங்களையும் தரவுகளையும் கவனமாக தவறவிட்டதாகவே தோன்றுகிறது. பாலியல் ரீதியிலானஅதுவும் குழந்தைகளுக்கான கதைகளத்தை எப்படி கையாளவதென அவருக்கே புரியவில்லை போலும். ரொம்பவும் லைட் வெயினாக கையாண்டது போல தெரிகிறது.

குறிப்பாக குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் துன்புறுத்தல்கள் என அனைத்துமே அவர்களது குடும்பத்திற்கு நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களால் நடைபெறுவதே அதிகம் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அந்த குற்றவாளிகள் எல்லாருக்குமே குடும்பங்கள் குழந்தைகள் அதுவும் பெண்குழந்தைகள் உண்டு என்பது பல வழக்குகளில் விளக்கப்பட்ட கசப்பான உண்மையே

இந்த குற்றவாளிகளும் அம்மா, மனைவி,  சகோதரிகள், குழந்தைகள் என பெண்களால் சூழப்படவர்களே. பாலியல் குற்றவாளிகள் வானத்திலிருந்து குதித்து வந்த ஏலியன்கள் இல்லையே.

கார்கிகள் அவர்களை காப்பாற்றுவதற்கு போராடுமுன் சற்று யோசிக்கலாமே? கார்கி ஒன்றும் குற்றவாளியை பிடித்து தர போராடவில்லை. தன்னால் காப்பாற்றபட இருந்த குற்றவாளியை தான் பிடித்து தருகிறாள்.

எனவே கார்கி ஒன்றும் புரட்சி பெண் இல்லைசுயநலமிக்க உணர்ச்சிகளுக்கு அடிமையான அறிவை அடகு வைத்த சராசரி பெண் என்பதில் சந்தேகமில்லை தானே!!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com