விநாயக சதுர்த்தி: ரெடிமேட் குளம் ரெடி!

விநாயக சதுர்த்தி: ரெடிமேட் குளம் ரெடி!

-ஜி.எஸ்.எஸ்.

விநாயக சதுர்த்தி நெருங்கும்போது பிள்ளையார் பக்தர்களுக்கு உற்சாகம் பெருக்கெடுக்கும். வீட்டிலே சிறிய அளவில் பிள்ளையார் பொம்மையை வாங்கி, அதனருகே களிமண்ணில் ஒரு சிறிய குடையை செருகி வைத்து கணபதி பூஜை செய்வார்கள். அதேசமயம் சாலைகளில் பிரம்மாண்டமான அளவு விநாயகரின் உருவங்கள் ஆங்காங்கே காட்சிதரும்.

ஆனால் விநாயக சதுர்த்தி நெருங்கும்போது சுற்றுப்புற ஆர்வலர்களுக்கு கவலை பெருக்கெடுக்கும். பலவித சாயங்களைப் பயன்படுத்தி அந்த பிரம்மாண்ட விநாயகர் உருவங்களை உருவாக்கியிருப்பார்கள். பிளாஸ்டர் ஆஃப் பாரிசில் செய்யப்பட்ட உருவங்களாக அவை இருக்க வாய்ப்பு அதிகம். இவை எளிதில் தண்ணீரில் கரைவதில்லை என்பதுடன் நீர்நிலைகளை அடைத்துக் கொள்ளும் வாய்ப்பு அதிகம். விநாயக சதுர்த்தி முடிந்த சில நாட்களில் இந்த உருவங்களை ஏரியிலோ குளத்திலோ கடலிலோ ​மூழ்கடிக்கும்போது அது சுற்றுப்புற சூழலுக்கு பெரும் கேடாக அமைந்துவிட வாய்ப்பு உண்டு.

தவிர இந்த பிரம்மாண்ட உருவங்களின் மீது விஷத்தன்மை கொண்ட பெயிண்ட்கள் பூசப்படுகின்றன. ஈயம், பாதரசம் போன்ற உலோகங்கள்  அடங்கிய பூச்சுக்களாக இவை இருக்க வாய்ப்பு அதிகம் (அப்போதுதான் பளபளப்பாக அவை தோற்றமளிக்கும்). விநாயகர் உருவத்தைக் கடலில் மூழ்க வைக்கும் போது இந்த நச்சுப் பொருள்கள் நீரில் கலக்கின்றன. நீரின் அமிலத்தன்மை அதிகரிக்கிறது. இது கடல்வாழ் உயிரினங்களுக்கு உயிர் சேதத்தை விளைவிக்கின்றன. அங்கு குளிக்கும் மனிதர்களுக்கும் கடும் தோல் வியாதியை உண்டுபண்ணுகிறது.

போதாக்குறைக்கு அந்த விநாயகர் மீது சாற்றியிருக்கும் பூ மாலைகளும் சேர்த்து நீரில் கரைக்கப்படுகின்றன. பொதுவாக மலர்கள் என்பவை மக்கக் கூடியவைதான்.  ஆனால் பலவித உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தி அந்த மலர்ச் செடிகள்  உருவாக்கப் பட்டிருந்தால் அந்த வேதியல் பொருள்கள் நீரைப் பாழ்படுத்தும்.

காவல்துறை பலமுறை எச்சரித்து பார்த்தும் ஆக்ரோஷமான பிள்ளையார் பக்தர்கள் அடங்குவதாகத் தெரிவதில்லை. இந்த நிலையில் ஹைதராபாத் நகராட்சி ஒரு புதிய தீர்வை முன் வைத்திருக்கிறது. அது பிரம்மாண்டமான, நகர்த்தி வைக்கக்கூடிய தண்ணீர் தொட்டிகள்!

சென்ற ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட ஒரு வழக்கில் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸில் உருவான விநாயகர் உருவங்களை ஹைதராபாதில் உள்ள உசேன் சாகர் ஏரியில் மூழ்கடிக்கக் கூடாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்பை நடைமுறைப்படுத்தும் வகையில்தான் மேலே உள்ள பிரம்மாண்ட தண்ணீர் தொட்டிகள் உருவாக்கம். அதாவது இந்த செயற்கைத் தொட்டிகளில் விநாயகர் உருவங்களை அமிழ்த்திவிட்டால் உசேன் சாகர் ஏரி பாழ்படுவது தவிர்க்கப்படும்.

இப்படி நகரும் பிரம்மாண்ட தொட்டிகளை உருவாக்க மூன்று கோடி ரூபாய் செலவாகுமாம். இதுபோன்ற தொட்டிகள் ஹைதராபாத் நகரில் 24 பகுதிகளில் வைக்கப்பட்டிருக்கும். விநாயக சதுர்த்தி முடிந்த பிறகு இந்த நகரும் தொட்டிகளை பல பாகங்களாகப் பிரித்து எடுத்து பல்வேறு காரணங்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது கூடுதல் விசேஷம்.

தவிர கணேசர் உருவங்களை கரைப்பதற்கு என்று ஹைதராபாத்தில் சில குளங்களை வெட்டப் போகிறார்களாம். ஆறு அடியை விட அதிக உயரம் கொண்ட விநாயகர் உருவங்களைக் கரைக்க இவை ஏதுவாக இருக்கும்.

இது ஒருபுறமிருக்க 'கைரதாபாத் கணேஷ் உத்சவ் சமிதி' என்ற அமைப்பை காவல்துறையினரும் அந்தப் பகுதி நகராட்சியும் விழுந்து விழுந்து பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.  காரணம் தாங்கள் எழுப்பும் பிரம்மாண்டமான கணபதியின் உருவம் முழுக்க முழுக்க களிமண்ணால் மட்டுமே செய்யப்பட்டிருக்கும் என்றும் அதன்மீது ஆர்கானிக் எனப்படும் இயற்கை வண்ணங்களை மட்டுமே பயன்படுத்த இருப்பதாகவும் அவர்கள் கூறியிருப்பதுதான்.  சுற்றுப்புற சூழலை மாசுபடுத்தாமல் அதேசமயம் கணேசர் குறித்த கொண்டாட்டங்களையும்  குறைத்துக் கொள்ளாமல்  இருக்க இது போன்ற முயற்சிகள்தான் இப்போதைய உடனடித் தேவை

இதற்கு பதில் உதவியாக அந்த பிரம்மாண்ட களிமண் விநாயகர் அருகே பக்தர்கள் வரிசையில் வந்து தரிசிப்பதற்கான தடுப்புகளை அமைத்துத் தருவதற்கும் அந்தப் பகுதியில் போதிய விளக்குகளை எரிய வைப்பதற்கும் காவல்துறை உதவி செய்யும் என்று போலீஸ் கமிஷனர் கூறியிருக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com