வெற்றிக்குத் தேவை புதிய சிந்தனை!

வெற்றிக்குத் தேவை புதிய சிந்தனை!

Published on

“ஒரு தொழிலின் வெற்றிக்கு ஆண் பெண் பேதமோ மொழியோ படிப்போ அந்தஸ்தோ பணபலமோ தடையில்லை... தேவை தொடர் உழைப்புடன் கூடிய முயற்சி, காலத்திற்கு ஏற்ற புதிய சிந்தனை, செய்யும் தொழில் மீதான நேசம்.  இவ்வளவுதான்..” சொல்கிறார் உலகிலேயே முதன்முதலில் குழந்தைகளுக்கான ரெடிமேட் பட்டுப்பாவாடை சட்டை தாவணியை அறிமுகப்படுத்திய சேலம் ரதி சில்க்ஸ் அண்ட் சாரீஸ் நிறுவனர் சாந்தி ரகுநாதன்.   

      “ஆச்சு கல்யாண தேதி நெருங்கிடுச்சு ..இன்னும் உனக்கு முகூர்த்தப் பட்டு சேலை எடுக்கணும். அதுக்கு பிளவுஸ் வேற தைக்கணும். உன்னை திருப்திப்படுத்தறதுக்குள் எனக்கு கண்ணக் கட்டப் போகுது.”

        “அதெல்லாம் ஒண்ணும் கவலைப்படாதீங்கம்மா, நான் மாப்பிள்ளை வீட்டுல சொல்லிட்டேன். சேலம் ரதி சில்க்ஸ்லதான் புடவை எடுக்கணும்னு. அது மட்டுமில்லாம அங்கேயே அந்த புடவைக்கேற்ற ஜாக்கெட்டை நம்ம விருப்பப்படி தைத்தும் தராங்க அதனால நீங்க நிம்மதியா இருங்க”

       இப்படித்தான் முப்பத்தைந்து வருடத்திற்கும் மேல் கல்யாணப் பெண்களின் நம்பிக்கையைப் பெற்று வருகிறது  சேலத்தின் பட்டு விற்பனை நிறுவனங்களில் முன்னணியில் உள்ள பாரம்பர்யமிக்க “ரதி சில்க் அண்ட் சாரீஸ்” நிறுவனம். இதன் நிறுவனரான சாந்தி ரகுநாதன் ஹோல் சேல் விற்பனையின் முடிசூடா ராணியாகத் திகழ்கிறார். ஆம் ஆண்கள் மட்டுமே கோலோச்சிக் கொண்டிருக்கும் துறையில் ஒரு பெண் ஜெயிப்பது என்றால் அவர் எவ்வளவு உழைப்பைத் தந்து இருப்பார் என்ற ஆச்சர்யத்துடன் சாந்தியை சந்தித்தோம்.

     தன் எதிரிலிருந்த பட்டுப்பாவாடையின் டிசைன்களை ஆராய்ந்து அதன் நிறை குறைகளை தன் பணியாளர் களிடம் கலந்து ஆலோசித்து மேலும் அவற்றுக்கு புதுமையைப் புகுத்தி திருப்தியடைந்தவராக அவர்களை அனுப்பிவிட்டு புன்னகை மாறா முகத்துடன் நம்மிடம் திரும்பி கேளுங்கள் என்ற பார்வையை வீசினார் சாந்தி. அவரது சுறுசுறுப்பு நம்மையும் தொற்றிக் கொள்ள நமது கேள்விக்கணைகளை தயக்கமின்றி வீசினோம்.இனி அவரின் பதில்கள்.

சாந்தி ரகுநாதன்
சாந்தி ரகுநாதன்

உங்களைப் பற்றி சில வார்த்தைகள் ?.    

    ராசிபுரம்தான் என் சொந்த ஊர். என் தந்தை துளசிராமன். தாய் லட்சுமிபாய். தந்தையின் தொழில் கைத்தறி ஜவுளிகளை விற்பனை செய்வதுதான்.. நான் அன்றைய எஸ் எஸ் எல் சி மட்டுமே முடித்தேன். பதினாறு வயதில் திருமணம். கணவர் ரகுநாதன் சேலம் இரும்பாலையில் பணிபுரிந்தார். என் மாமனார் ராமன். மாமியார் சரஸ்வதி. இப்போது இவர்கள் கடவுளின் திருவடிகளை அடைந்து விட்டாலும் இவர்களின் ஆசிகள் என்றும் என்னை வழிநடத்திக்கொண்டு உள்ளதை அறிவேன்.

     எங்கள் குடும்பம் கூட்டுக் குடும்பம் என்பதால் நானும் ஏதெனும் தொழில் செய்து வருமானத்தை ஈட்டலாம் என்று எண்ணியபோது  என் தந்தை 2000 ரூபாய்க்கு அவரின் நண்பரிடமிருந்து கடனாக துணிகளை வாங்கி என்னிடம் தந்தார். அவற்றை வீட்டிலேயே வைத்து சில்லறை விற்பனையில் இறங்கினேன். ஆர்வத்துடன் அதை செய்ததால் விற்பனை நன்றாகப் போயிற்று. அது மட்டும் போதுமா வேறு என்ன செய்யலாம் என்று யோசித்து பட்டுப்புடவைகளில் என் சொந்தக் கற்பனையில் வந்த டிசைன்களை வடிவமைத்துத் தந்தேன். அதற்கு நல்ல வரவேற்பு இருந்தது.

ரதி சில்க் அண்ட் சாரீஸ் தோன்றியது எப்படி ?

       நான் வடிவமைத்த டிசைன்களுக்கு வரவேற்பு இருந்ததைக் கண்டு, நாமே சொந்தமாக ஒரு நிறுவனத்தை ஆரம்பித்தால் என்ன என்று நினைத்ததின் துவக்கம்தான் இது தோன்றக்காரணம். ஹோல்சேல் மற்றும் ரீடெய்ல் விற்பனைகளில் படிப்படியாக உயர ஆரம்பித்தோம்.

     தொழிலின் வளர்ச்சி கண்ட என் கணவர் இரும்பாலை வேலையை விட்டுவிட்டு முழு நேரம் என்னுடன் இருந்து உதவினார். அவரின் மறைவுக்குப் பின் என் மகன், மருமகன்,  அக்காவின் கணவர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பலர் இந்தத் தொழிலில் ஆதரவாக இருந்து வருகிறார்கள்.  அது மட்டுமல்ல நிறுவனத்தை தாங்கும் ஊழியர்கள் தரும் உழைப்பையும் சொல்ல வேண்டும் .எங்களது தயாரிப்புகள் பல்வேறு முன்னணி நிறுவனங்களுக்கு அனுப்பப்படுகிறது.  ரீடெய்ல் விற்பனைகளில் இருந்தாலும் ஹோல்சேலில் தான் அதிகம் எங்கள் நிறுவனம் கவனம் கொள்கிறது .

     தற்போது எங்கள் தயாரிப்புகள் இந்தியா மட்டுமின்றி சிங்கப்பூர், மலேசியா, துபாய், அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் உள்ள முன்னணி ஆடை விற்பனை மற்றும் மால்களிலும் குறிப்பாக விமானநிலையங்களில் உள்ள பெரிய கடைகளிலும் இருப்பதுதான் எங்கள் உழைப்பிற்கும் எங்கள் தயாரிப்புகளின் தரத்திற்கும் கிடைத்திருக்கும் சான்று.

எப்படி வாடிக்கையாளர்கள் கவனத்தை ஈர்த்தீர்கள் ?     

       ந்த ஒரு தொழிலுமே மற்றவர்களிடமிருந்து வித்தியாசமாக இருந்தால்தான் மக்களின் கவனத்தைப் பெறும். எனக்கு ஓவியங்களின் மீது உள்ள ஆர்வத்தினால் பட்டுத்துணிகளில்  நுணுக்கமான வேலைப்பாடுகளை தந்தேன். ஆனால் இன்னும் புதுமையாக என்றும் நிலைத்து நிற்கும்படி என்ன செய்யலாம் என்று யோசித்தபோதுதான் பெண் குழந்தைகளுக்கு ரெடிமேட் பட்டுப்பாவாடைகளை தயாரித்து மார்க்கெட்டிற்கு அறிமுகப்படுத்தினோம்.

       பொதுவாகவே பட்டுப்பாவாடை என்பது நமது பாரம்பர்யத்தின் அடையாளம் என்பதால் அனைவரும் விரும்புவார்கள் .அதிலும் குழந்தைகள் அதை அணிந்து வலம் வருவது கண்கொள்ளாக்காட்சியாக இருக்கும். ஆனால் விலை அதிகம் என்பதாலும் பெண் குழந்தைகள் சட்டென்று வளர்ந்து விடுவதாலும் தவிர்ப்பதுண்டு. மேலும் வசதியுள்ளவர்களே வாங்கும் நிலையை உடைத்து அனைவரும் வாங்கும் விலையிலும் குழந்தையின் வளர்ச்சிக்கேற்ப பிரித்து விட்டுக் கொள்ளும் வசதியுடன் அவர்களுக்கு உறுத்தாத வகையில் பருத்தித்துணியில் லைனிங் தந்து சந்தையில் அறிமுகப்படுத்தி இன்று வரை உலகிலேயே முதல் முறையாக என்ற பெருமையுடன் வலம் வந்து கொண்டுள்ளது .மேலும் நம் வீடுகளில் அம்மாவின் சேலையை சுற்றிக்கொண்டு அழகு காட்டும் குழந்தைகளுக்கு நிஜமாகவே அணிவித்து அழகு பார்க்க ரெடிமேட் பட்டுச்சேலையும் உலகில் முதன் முதல் அறிமுகப்படுத்தியதும் நாங்கள்தான். இப்படி எங்களின் புதிய கண்டுபிடிப்புகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது. தரத்துடன் கூடிய தகுந்த விலையும்  அவர்கள் விரும்புவதை கண் முன் நிறைவேற்றி மனதிற்கு பிடித்தமான டிசைன்களைத் தருவதும்தான் எங்கள் நிறுவனத்தின்  வெற்றி.

என்ன என்ன ரகங்கள் தயாரிக்கப்படுகின்றன? அதன் சிறப்புகள்?

    சல் தங்கக்காசுகளை புடவையில் பதித்து வேலைப்பாடுகள் செய்த அக்சயாப் பட்டை பத்து வருடங்கள் முன் அறிமுகப்படுத்தினோம் .தற்போது மணப்பெண்களின் விருப்பதிற்குத் தகுந்தவாறு பட்டுப் புடவைகளுக்கான பிளவுஸ்களை எம்பிராய்டரி, ஜர்தோஷி, ஆரி வேலைப்பாடுகளுடன் வடிவமைத்துத் தருகிறோம். ரெடிமேடு பிளவுஸ்களும் மிகுந்த வரவேற்பை பெற்று வருகின்றன. தகுந்த விலையில்,  அவர்கள் விரும்புவதை கண் முன் நிறைவேற்றி மனதிற்கு பிடித்தமான டிசைன்களை வடிவமைத்துத் தருவதுதான் எங்கள் நிறுவனத்தின்  வெற்றி.

    மூன்றுமாதக் குழந்தை முதல் பதினெட்டு வயது டீன் ஏஜ் பெண்கள் வரை பட்டு கவுன், பட்டுப்பாவாடை சட்டைகள், பேபி சாரீஸ்  இவைகளுடன் இன்றைய இளம்பெண்களின் சாய்சான வேலைப்பாடுகள் நிறைந்த லெகங்கா எனப்படும் நீள் கவுன்களும் , பட்டு எம்போஸ் ஸ்டோன் முத்துப் போன்றவைகள் பதித்த டிசைனர் சாரீஸ் , வித் அவுட் ஜரி, கட்வோர்க் சேலைகள், அதிக கனமில்லாத சாப்ட் சில்க் சேலைகள் என நம் இந்தியப் பாரம்பரியதிற்கு ஏற்ற அனைத்து பட்டுத் தயாரிப்புகளும் உள்ளன. திருமணம் மட்டுமில்லாமல் எல்லாவித சீசனுக்குத் தகுந்தவாறு எங்கும் இல்லாத டிசைன்களை உருவாக்குவதே எங்கள் ஸ்பெசல்.

      பெண்கள் இங்கு வந்தால் அவர்களின் பட்ஜெட்டில் விரும்பும் அளவில் ரெடிமேட் பிளவுஸ்களை உடனே தேர்வு செய்து அணிந்து மகிழலாம். குறிப்பாக தற்போது சிரமமின்றி அப்படியே அணியக்கூடிய ரெடிமேட் புடவைகள் பெண்களிடையே எங்களுக்குப் பாராட்டைப் பெற்றுத்தருகிறது.

     மணமகன்களையும்  விட்டு விடாமல் அவர்களின் பட்டு வேஷ்டியையும் மணப்பெண்ணின் உடைக்குத் தகுந்தவாறு மேட்சிங்காக வடிவமைத்துத் தருகிறோம்..சிறுவர்களுக்கும் ரெடிமேட் பட்டு வேட்டி சட்டை பல வண்ணங்களில் உள்ளது.பரதநாட்டிய உடைகளையும் தைத்துத் தருகிறோம்.

உங்கள் நிறுவனத்தின் பணியாளர்கள் பற்றி ..?

     வர்கள்தான் எங்கள் நிறுவனத்தின் தூண்கள் அல்லது முதுகெலும்பு என சொல்லலாம். தொழிலில் முதலாளி தொழிலாளி ஆண் பெண் என்ற  பாகுபாடெல்லாம் வரக்கூடாது. எங்களுக்காக நாங்கள் தரும் டிசைன்களை உருவாக்கித் தர ஆந்திரா கர்நாடகா சேலம் காஞ்சிபுரம் போன்ற ஊர்களில் 1000 நெசவாளர்களும் எங்கள் யூனிட்டுகளில் சுமார் 200க்கும் மேல் தையல்கலை நிபுணர்களும் 500 பேர் கொண்ட குழு நுண்ணிய கலை வேலைப்பாடுகளையும் செய்து வருகின்றனர்.

        என்னைப் பொறுத்தவரை திறமைதான் பேச வேண்டும். அது எங்கிருந்தாலும் யாரிடமிருந்தாலும் கொண்டாடுவேன். அதேபோல் ஆண் பெண் பாகு பாடெல்லாம் இங்கு இல்லை. இன்னும் சொல்லப் போனால் எங்கள் நிறுவனத்தில் அதிக சம்பளம் பெறுபவர் பெண்களே. யாராக இருந்தாலும் அவர்களுக்கு உரிய மதிப்பை வழங்கினால்தான் எந்த நிறுவனமும் வளர்ச்சி பெறும். பணியாளர்களின் மலர்ச்சியே எங்கள் நிறுவனத்தின் மகிழ்ச்சி.

இன்றைய இளம் தொழில் முனைவோருக்கு நீங்கள் தரும் ஆலோசனை?

     முதலில் சொன்னதுதான். தொழிலுக்கு ஆண் பெண் பேதம் பார்க்காதீர்கள். திறமை எங்கிருந்தாலும் அதை வரவேற்று பயனடைவதுதான் புத்திசாலித்தனம் .நிச்சயம் நான் எனும் ஈகோ கூடாது. மொழியோ பணமோ எதுவும் தடையாகாது. இடையறாத முயற்சி, உழைப்பு, சரியான திட்டமிடல், காலத்திற்கேற்ற புதுமை அதாவது ட்ரெண்டிங் அப்டேட் இவைகளுடன் குடும்பத்தினரின் ஆதரவு. இவைகள் இருந்தாலே ஒரு தொழில் கண்டிப்பாக வெற்றியைப் பெறும் என்பதில் சந்தேகமில்லை.

         அழகாகவும் அதே சமயம் உறுதியுடனும் பேசுகிறார் சாந்தி. இவரின் நிறுவனத்தில் பணியில் இருப்பவர்களில் 80 சதவிகிதம் பேர் பெண்களே என்பது பெருமைக்குறிய விஷயம்.

logo
Kalki Online
kalkionline.com