வாடகைத் தாய் வரமா, சாபமா?

வாடகைத் தாய்
வாடகைத் தாய்-wikipedia - creativecommons
Published on

1980 ல் வெளி வந்த ‘அவன் அவள் அது’ என்ற படம் வாடகத் தாய் பற்றிய பிரச்சனையை மையமாகக் கொண்டது. எழுத்தாளர் சிவசங்கரியின் ஒரு சிங்கம் முயலாகிறது என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் ‘செயற்கைக் கருத் தரித்தல்’ பற்றி பேசியிருப்பார்கள் - தமிழ்க் கலாச்சார சீரழிவு, திருமணம், குழந்தை பிறப்பு பற்றி இளைய தலைமுறைக்குத் தவறான வழிகாட்டல் என்றெல்லாம் அன்றைய நாளில் விமர்சனம் செய்யப்பட்ட வெற்றிப்படம் இது! அப்போது சென்னையில் ஒன்றோ இரண்டோ செயற்கைக் கருத்தரிப்பு நிலையங்கள்தான் இயங்கி வந்தன. இன்று நூற்றுக்கும் மேற்பட்ட கருத்தரிப்பு நிலையங்கள், பெரிய வண்ண வண்ண நியான் குழல் விளக்குகள் ஒளிர, திருமணமாகி ஒரு வருடம் முடிந்த (சிலர் 10 மாதம் முடிந்தவுடனே!) தம்பதிகளைக் கவர்ந்திழுக்கின்றன! வீட்டில் இருக்கும் பெரிசுகளையும் சொல்ல வேண்டும் - திருமணமான ஆறாவது மாதத்திலிருந்தே தாயத்து, ஜோசியம், கர்பரட்சாம்பிகை வேண்டுதல் என இளைய தலைமுறையினரை விரட்டத் தொடங்கி விடுகிறார்கள்!


சமீபத்தில் ஊடகங்களின் கவனத்தை அதிகம் பெற்ற செய்தி, வாடகைத் தாய் குறித்தது. குடும்பம், செண்டிமெண்ட்ஸ், சட்டம் என ஏராளமான சர்ச்சைகள்! அதிலும் பிரபலங்கள் சம்மந்தப் பட்டிருந்தால், செய்தி கூடுதல் கவனம் பெற்று வலம் வருவது ஒன்றும் புதிதல்ல. சட்டம் அதன் கடமையைச் செய்யும் என்ற பொதுவான நினைப்பிருந்தாலும், சட்டத்தை வளைப்பதும் சாத்தியமே என்பது நாம் பல நேரங்களில் கண்டதுதான். ஊடகங்கள் வித விதமாக வாடகைத் தாய் பற்றி வெளியிடும் செய்திகள் பிரமிக்க வைக்கின்றன. ஊர்க்கோடியில் ஒரு சுப்பனும், சுப்பியும் இப்படிச் செய்திருந்தாலோ அல்லது தங்கள் விருப்பப்படி ஒரு குழந்தையை தத்து எடுத்து வளர்த்திருந்தாலோ இவ்வளவு ஆர்பாட்டம் இருந்திருக்குமா?


வாடகை வீடு, வடகைக் கார் போலத்தான், வாடகைக்கு விடப்பட்ட கருப்பையும், அதில் வளரும் குழந்தைக்குச் சொந்தம் கொண்டாட முடியாது! இயற்கையான முறையில் கருத்தரிக்க முடியாத தம்பதிகள் - கணவனுக்கோ, மனைவிக்கோ ஏதேனும் குறைகள் இருக்கலாம் - செயற்கை முறையில் தங்கள் குழந்தையை வேறொரு பெண்ணின் கருப்பையில் வளர்த்து, வாங்கிக் கொள்வது இப்போது சாத்தியமாகிவிட்டது. அறிவியல் வளர்ச்சியும், ஆராய்ச்சியாளர்களின் விடா முயற்சியும் இந்த ‘டெஸ்ட் டியூப்’ பேபிகளை அறிமுகம் செய்துவிட்டன! நவீன அறிவியல் முன்னேற்றங்கள், மனிதக் கருமுட்டைகள் விந்தணுவுடன் சேர்ந்து, இரண்டு செல் முதல் பல செல்களாகப் பிளந்து, குழந்தையாக மாறும் வரை நிகழும் மாற்றங்களைத் தெளிவாக அறிவிக்கின்றன!


மனைவிக்கு கருப்பை பலஹீனமாக இருந்தாலும், கருப்பைக்கும், ஓவரிக்கும் இடையே உள்ள ‘ஃப்பெலோப்பியன் குழாய்’ அடைபட்டுப் போயிருந்தாலும் கருமுட்டை எனப்படும் egg சரியான நேரத்தில், கருப்பைக்குள் வந்து, அங்கு நீந்திக்கொண்டிருக்கும் ‘ஸ்பெர்ம்’ எனப்படும் விந்தணுவுடன் சேர முடியாது! கணவனுக்கு விந்துக்களின் எண்ணிக்கைக் குறைவாக இருந்தாலும், வேறு சில இயலாமைகளினாலும் இந்த சேர்க்கை நிகழ முடியாது. இவர்கள், சரியான மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகு, செயற்கை முறையில் கருத்தரிக்க வாடகைத் தாயை அணுகலாம்!திருமணமாகி, ஐந்து வருடங்கள் முயற்சிக்குப் பிறகும் எல்லா விதத்திலும் நார்மலாக இருக்கும் தம்பதிகளுக்கு கருத்தரிப்பு ஏற்படவில்லை என்றாலும், அவர்கள் செயற்கை முறையில் முயற்சிக்கலாம்.


1970 களில் தத்து எடுப்பதில் இருந்த சட்டரீதியான குழப்பங்கள், செயற்கை முறை கருத்தரிப்புக்கு வித்திட்டன!


வாடகைத் தாய்களில் இரண்டு வகை உண்டு. முதல் வகையில் - Traditional surrogacy - வாடகைத்தாயின் கருப்பைக்குள், கணவனின் விந்துக்களை சேர்ப்பது (Artificial insemination).  இது ஒருவகையில் உடலுறவு தவிர்த்த கருத்தரிப்பு. இவ்வகையில் சட்டச் சிக்கல்களும், உணர்வுபூர்வமான குழப்பங்களும் அதிகம்!


இரண்டாம் வகையில் - Gestational surrogacy - மனைவியின் கருமுட்டையும், கணவனின் விந்தும் தனியே உடலுக்கு வெளியே ஒரு ‘கல்சர் மீடியத்தில்’  - டெஸ்ட் டியூப் - சேர்க்கப்பட்டு, கரு உருவாகிறது. நவீன முறைகளில், தயாராக இருக்கின்ற முட்டைக் கருவின் சுவற்றைத் துளைத்து, விந்தினை மைக்ரோ ஊசியின் மூலம் செலுத்துவதும் இன்று சாத்தியமாகி இருக்கின்றது! இப்படி உருவான ‘கரு’ (Embryo), வாடகைத் தாயின், கருவை ஏற்றுக்கொள்ள தயார் நிலையில் உள்ள கருப்பையில் செலுத்துகிறார்கள். மூன்று முதல் நான்கரை நாட்கள் வரையில் கருப்பையில் மிதந்து, பின்னர் அதன் உட்பக்க சுவற்றில் தன்னைப் பதித்துக் கொள்கிறது. வாடகைத் தாயின் கருப்பையில் வளரத் தொடங்குகிறது. கர்ப்பிணிப் பெண்களுக்குரிய அத்தனை மாற்றங்களையும் வாடகைத் தாய் ஏற்று, முழு பிரசவ காலமும் சுமந்து, குழந்தையைப் பெற்று, அதன் பெற்றோரிடம் கொடுத்துவிட வேண்டும்! (சில நேரங்களில், மனைவியின் கருப்பை வலுவாக இருக்கும் பட்சத்தில், கருவை மனைவியின் கருப்பைக்குள்ளேயே செலுத்தி, கர்ப்பத்தைத் தொடரமுடியும்!).


இரண்டு வகையிலும், வாடகைத் தாய், குழந்தை(கள்) மீது எந்தவிதமான உரிமையும் கொண்டாட முடியாது. சட்டப்படி செல்லாது. ஒரு வகையில் இது ஒரு வியாபாரம் - தன் கருப்பையை வாடகைக்கு விடும் தொழில். யாருக்கு, எப்போது, எந்த நிலைகளில், ஒரு பெண் வாடகைத் தாயாக இருக்கமுடியும் என்பதெல்லாம் சட்டரீதியாகத் தெளிவு படுத்தப்பட்டுள்ளன.


ஐவிஎஃப் (IVF)  (டெஸ்ட் டியூப் கருத்தரிப்பு) : 1978ல்,  பிரிட்டிஷ் மகப்பேறு மருத்துவர் Patrick Steptoe வும், மருத்துவ ஆராய்ச்சியாளர் Robert Edwards ம் தான் முதன்முதலில் டெஸ்ட் டியூபில் மனிதக் குழந்தையை உருவாக்கினார்கள்!


இன்று, வெளியிலே கருத்தரித்த கருவுக்கு (embryo) ஏதேனும் மரபணு சார்ந்த வியாதிகள் இருக்கின்றனவா என்று பரிசோதனை செய்யும் அளவுக்கு (PGD - Pre implantaation genetic diagnoosis) அறிவியல் முன்னேற்றம் அடைந்துள்ளோம்!


வாடகைத் தாய், பிறந்த குழந்தைக்கு உறவா? ‘பயலாஜிகல்’ அம்மாவா? மரபணு ரீதியாக குழந்தைக்கும் வாடகைத் தாய்க்கும் சம்பந்தம் இருக்கிறதா?


Traditional surrogacy - வகையில், ‘இருக்கிறது’ என்பதே விடை! வாடகைத் தாய் தன் கருமுட்டையைத் தானம் செய்வதால் மரபணு சார்ந்து அவள் சம்பந்தம் இருக்கிறது. குழந்தை அம்மாவைப் போல இருக்குமானால், வாடகைத் தாயின் முக சாயல் இருக்கும் வாய்ப்பு அதிகம் - குடும்பத்தில் குழப்பங்களும்! இந்த முறை இப்போது பழக்கத்தில் இல்லை என்றே சொல்லலாம்.


Gestational surrogacy - வகையில் உருவாகும் கருவில் கணவன், மனைவியின் மரபணுக்களே இருப்பதால், வாடகைத் தாய்க்கு எந்தவித சம்பந்தமும் இருப்பதற்கு வாய்ப்பில்லை. பிறர் குழந்தையைத் தன் கருப்பையில் பார்த்துக்கொள்ளும் ஒரு செவிலித் தாயாக - ‘Babysitter’ - மட்டும் இருக்கிறார்! கணவனின் ஸ்பெர்ம் டிஎன்ஏ, மனைவியின் கருமுட்டை டிஎன்ஏ சேர்ந்து குழந்தை வந்திருப்பதால், வாடகைத் தாயின் சாயல் எந்த வகையிலும் வருவதற்கு வாய்ப்பில்லை.


எந்த ஒரு அறிவியல் கண்டுபிடிப்புக்கும், மறுபக்கம் ஒன்று உண்டு. நல்லவை நடக்க வேண்டும் என்று உருவாக்கப்பட்டவை, அதற்கு எதிர்மறையான விளைவுகளை உருவாக்குவதும் உண்டு. இன்று பரவலாகப் பேசப்படும் சட்ட ரீதியான சிக்கல்கள், தவறான வகையில் செயற்கைக் கருதரித்தல், அது ஒரு வியாபார வழி போன்றவை வருந்தத் தக்கவை.


ஒரு குழந்தையை உருவாக்குவதில் இவ்வளவு சிக்கலா? கொஞ்சம் பின்னோக்கி, நம் மூதாதையர்களை நினைத்துக்கொள்கிறேன் - 12 - 13 குழந்தைகள் (இது இரண்டு மூன்று அபார்ஷன்கள் போக மீதி!) பெற்றுக் கூட்டுக்குடும்பமாக அவர்களை வளர்த்து ஆளாக்கி…… அறிவியலைத் தாண்டி ஏதோ ஒன்று நம்மை நடத்திச் செல்கிறது என்பதை எப்படி நம்பாமல் இருப்பது?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com