
தமிழ்ப்புத்தாண்டு மலர உள்ளது. குரோதி வருடம் முடிந்து சித்திரை மாதம் ஒன்றாம் நாள் 14.4.2025ல் 'விசுவாவசு' உதயமாகிறது. இது பிரபவ ஆண்டு தொடங்கி அட்சய வருடம் வரை வரும். அந்த அடிப்படையில் வருடங்களின் சுழற்சியில் 'முப்பத்தி ஒண்பதாவது' ஆண்டு தான் விசுவாவசு. இது ஒரு நல்ல ஆண்டாக கருதப்படுகிறது.
பல ஆரோக்கியமான நன்மை தரக்கூடிய ஆண்டாகும் என வராகமிகிரர் கூறியுள்ளாா். இந்த விசுவாவசு ஆண்டானது 2025-26 (14.4.2025) திங்கட்கிழமை வருகிறது. விடியற்காலை 2.22க்கு மகரலக்னத்தில் சுவாதி நட்சத்திரம் கூடிய சூாியன் ஓரையில் மலர்கிறது. சித்திரையை தலை மாதம் என்றும் பங்குனியை கடைமாதம் என்றும் கூறுவாா்கள். இந்த ஆண்டின் 'வெண்பாவில்' என்ன கூறப்பட்டுள்ளது என்பதைப் பாா்க்கலாம்:
இந்த வெண்பா இடைக்காடரால் பாடப்பெற்றது,
விசுவாவசு வருடம் வேளாண்மை வேறும்
பசுமாடும் பலிக்குஞ்-சிசுநாசம்
மற்றையோரே வாழ்வாா்கள்
மாதவங்கன் மீறுமே யுற்றுலகு னல்ல மழையுண்டு எனத்தொிவிக்கிறது.
இந்த ஆண்டில் ஆதாயம் அறுபத்தைந்து, விரயம் ஐம்பத்தி ஒன்பது வருவது நல்லதே! அதே நேரம் அரசாங்கம் நல்ல பல திட்டங்களை நிறைவேற்றும் தருணம் வரி விதிப்புகள் அதிகமாகலாம். தனியாா் நிறுவனங்கள் நிறைய பிரச்சணைகளை சந்திக்க நேரலாம்.
பொன், வெள்ளி, வகைகளின் விலை உச்சம் தொடலாம். ஆன்மிக வாதிகளுக்கு தொல்லைகள் வரலாம்! இரவில் புது வருடம் பிறப்பதால் வைரஸ் நோய்கள் வரும் வாய்ப்புகள் உண்டு. மகரசங்கராந்தி பலன் புருஷர் பாலவ நாமகரணம். மந்தன் என்ற பெயரில் ஆண்புலி வாகனமேறி வருவதால் நல்ல மழை பெய்து வெள்ள அபாயம் ஏற்படலாம்!
முதல் நாள் இரவே வீடு வாசல்களை சுத்தம் செய்து பின்னா் கோலமிட்டு தாம்பாளத்தில் முகம் பாா்க்கும் கண்ணாடி, அதோடு தங்கம், வெள்ளி, ஆபரணங்கள், தானியங்கள் மா, பலா, வாழை, வெற்றிலை, பாக்கு, பழம் முதலாவைகளை அறையில் முதல் நாள் இரவே வைத்து காலையில் எழுந்து கண்விழிக்கும் போது அவைகளைப் பாா்ப்பது நல்லது! அதேபோல புதியதாய் விளைந்த நெல், உளுந்து இவைகளைக் கொண்டு சர்க்கரைப் பொங்கல், வடை செய்யலாம்.
வாழ்க்கையில் புளிப்பு, இனிப்பு, துவர்ப்பு இருக்கவேண்டும் என்பதால் வேப்பம்பூ பச்சடி ,மாங்காய் பச்சடி, வேப்பம்பூ ரசம், முதலானவற்றை உணவில் சோ்க்கவேண்டும். புதிய பஞ்சாங்கத்தை வைத்து பூஜை செய்து அன்றைய திதி, நாள், கிழமை, நட்சத்திரம், இவைகளை படித்தல் நல்லது. பானகம் நீா்மோா், கரைத்து கடலைப்பருப்பு சுண்டல் செய்து, நைவேத்தியம் செய்து அனைவருக்கும் வழங்கலாம். அன்றைய தினம் புத்தாடை தரித்து வீட்டில் உள்ள பொியவர்களிடம் ஆசீா்வாதம் வாங்க வேண்டும். பின்னர் கோவிலுக்குச் சென்று இறைவழிபாடு மேற்கொள்ளலாம்.
பிறக்கப்போகும் புத்தாண்டில் உலகம் சமநிலை பெறவேண்டும். உயர்வு தாழ்விலா நிலை வேண்டும் மனித மனங்களில், குரோதம், விரோதம், மறந்து சகோதரத்துவத்துடன் அனைவரும் நோய் நொடி, இல்லாமல் ஆரோக்கியமான வளமான ஆண்டாக அமைய அனைவரும் எல்லாம் வல்ல இறைவனிடம் பிராா்த்திப்போமாக!
அனைவருக்கும் புத்தாண்டு திருநாள் வாழ்த்துகள். எல்லாம் அவன் செயல் என நலமாக வாழ்வோம்; நன்மை பல பெறுவோம்.