நினைத்த காரியம் கைகூட, எடுத்த செயல் இடையூறின்றி முடிய, விநாயகரை வழிபட்டுச் செயலைத் தொடங்குவது இந்து மரபு. தமிழகத்தில் தெருவுக்குத் தெரு, ஊருக்கு ஊர் பிள்ளையார் கோவில்களை நாம் காண்கிறோம்.
ஆனால் அப்படிப்பட்ட விநாயகர் வழிபாடு தமிழகத்துக்கு அந்நியம், எட்டாம் நூற்றாண்டில்தான் தமிழகத்துக்கே இவ்வழிபாடு கொண்டுவரப்பட்டது என்பதுபோன்ற கதைகள் ஒவ்வோர் ஆண்டும் விநாயகர் சதுர்த்திக்கு முன் சொல்லப்படும்.
விநாயகர் தமிழ் மண்ணுக்கு அந்நியம் என்பதற்கு ஆதாரமாக சங்க இலக்கியங்கள் எதிலும் விநாயகர் அல்லது பிள்ளையார் அல்லது யானைமுகத்தோன் குறித்து நேரடியாக எந்தக் குறிப்பும் இல்லை என்பார்கள். சங்க இலக்கியங்கள் சமய இலக்கியங்கள் அன்று. பரிபாடலும் திருமுருகாற்றுப்படையும் மட்டுமே சமயம் சார்ந்தவை. சங்க இலக்கியத்தின் திணைக்கோட்பாட்டில் சொல்லப்பட்டிருப்பது மட்டும்தான் தமிழர் தெய்வங்கள் என்று எடுத்துக்கொள்ளக்கூடாது. எண்ணற்ற நாட்டார் தெய்வங்கள் குறித்தும்தான் சங்க இலக்கியத்தில் இல்லை.
நரசிம்மப் பல்லவன் சாளுக்கியர்களின் தலைநகரான வாதாபியைத் தாக்கி அழித்து, இரண்டாம் புலிகேசியைக் கொன்றது 642-ம் ஆண்டு. அப்போது அவருடைய படையில் தளபதியாக இருந்த பரஞ்சோதி என்பவர் அங்கிருந்து கணபதி சிலையைக் கொண்டுவந்து தன் ஊரான திருச்செங்காட்டங்குடியில் நிறுவியதாக ஒரு கதை உள்ளது. இவர்தான் பிற்காலத்தில் சிறுத்தொண்டர் என்ற நாயன்மாராக அறியப்பட்டார் என்றும் சொல்வர். இதனால்தான் முத்துசாமி தீக்ஷிதர் ‘வாதாபி கணபதிம்’ என்ற கிருதியை இயற்றினார் என்பதும் பொதுவாக இதற்குச் சான்றாகச் சொல்லப்படுவதுண்டு. ஆனால் இப்போது திருச்செங்காட்டங்குடியில் இருப்பது சாளுக்கியக் கலையம்சம் கொண்ட கணபதி சிலை அல்ல.
பல்லவர், பாண்டியர் இருவரும் களப்பிரரை வென்று, தத்தம் ஆட்சிகளை நிலைநிறுத்தி கருங்கல்லில் குகைக்கோவில்களை உருவாக்கத் தொடங்கினர். பல்லவர் காலக் கட்டுமானங்களில் ராஜசிம்மன் காலத்தில்தான் (690-725) கோவில்களில் மிகத் தெளிவாகப் பிள்ளையார் சிலைகள் இடம்பெற்றுள்ளன.
ஆனால், பாண்டியர், முத்தரையர் குகைகளில் ஆறாம் நூற்றாண்டிலிருந்தே பிள்ளையார் சிலைகள் காணப்படுகின்றன. ஒரு குறை, இந்தக் குகைகளின் தெளிவான காலகட்டம் நமக்குக் கிடைப்பதில்லை. அங்கிருக்கும் ஒருசில கல்வெட்டுகளில் உள்ள எழுத்துகளின் வடிவ அமைதியைக் கொண்டே அவற்றின் காலத்தைக் கணிக்கமுடிகிறது.
சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி குகைக்கோவிலில் உள்ள கல்வெட்டைப் பலர் ஆராய்ச்சி செய்துள்ளனர். சா.கணேசன் இதனை ஏழாம் நூற்றாண்டு என்றும் இரா.நாகசாமி ஆறாம் நூற்றாண்டு என்றும் குறிப்பிடுகின்றனர். 1990-களில் ஐராவதம் மகாதேவன் நேரில் சென்று பிள்ளையார்பட்டிக் கல்வெட்டை ஆய்வு செய்தார். வட்டெழுத்தின் ஆரம்பகட்டம் இந்த எழுத்துகள் என்பது அவருடைய முடிவு. “கி.பி. 6-ம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் பாண்டிய மன்னரால் எழுப்பப்பட்ட தமிழகத்தின் முதல் குடைவரைக் கோயில் பிள்ளையார்பட்டியாகும்” என்று மிகத் தெளிவாக அவர் சொல்கிறார்.
பெரும்பாலான பாண்டியர் குகைகளிலும் கிட்டத்தட்ட அனைத்து முத்தரையர் குகைகளிலும் விநாயகர் சிலைகள் காணப்படுகின்றன. இவை எல்லாமே பெரும்பாலும் ஆறாம் நூற்றாண்டு தொடங்கி எழுப்பப்பட்டவை. ஆண்டிச்சிப்பாறையில் முற்றுப்பெறாத பாண்டியர் குகை ஒன்று உள்ளது. அதில் இரு சிற்பங்கள் தொடங்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று விநாயகர் சிற்பம். எனவே தொடக்கக்கட்டப் பல்லவர் குகைகளில் கிடைக்கவில்லை என்பதனாலேயே விநாயகர் வழிபாடு வெளியிலிருந்து வந்தது என்று முடிவுகட்டக்கூடாது.
2015-ம் ஆண்டு, வட தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டம், ஆலகிராமம் என்னுமிடத்தில் உள்ள எமதண்டீஸ்வரம் என்னும் கோவிலில் வட்டெழுத்துக் கல்வெட்டு பொறித்த விநாயகர் சிலை கிடைத்துள்ளது. அதனை ஆராய்ச்சி செய்த கல்வெட்டியல் நிபுணர்களும் இது, 4 முதல் 6-ம் நூற்றாண்டுக்கு உட்பட்ட எழுத்தே என்பதை உறுதி செய்திருக்கின்றனர்.
அப்பர், திருஞானசம்பந்தர், சம்பந்தர் போன்ற நாயன்மார்கள் ஆறாம் நூற்றாண்டின் இறுதியில் தோன்றத் தொடங்குகின்றனர். இவர்களுடைய பதிகங்களில் விநாயகர் பற்றிய குறிப்புகளும் விநாயகர் வழிபாடும் வருகின்றன.
இவற்றை வைத்துப் பார்க்கும்போது, நரசிம்மவர்மப் பல்லவனும் பரஞ்சோதியும் ஏழாம் நூற்றாண்டில்தான் வாதாபியிலிருந்து விநாயகரைத் தமிழ்நாட்டுக்குக் கொண்டுவந்தனர் என்ற வாதம் அடிபட்டுப் போகிறது. சங்கம் மருவிய காலத்திலிருந்தே, நான்காம், ஐந்தாம் நூற்றாண்டிலிருந்தே தமிழகத்தில் விநாயகர் வழிபாடு உள்ளது என்பது தெளிவாகிறது.