

ஒவ்வொரு நாட்டின் வளா்ச்சிக்கும், அணு ஆயுதப் பாதுகாப்பிற்கும், எல்லைப் பாதுகாப்பிற்கும் ராணுவப் பாதுகாப்புப்படை இருப்பது உண்டு. அந்த வகையில் நமது நாட்டிற்கான எல்லைப் பாதுகாப்புப் படை கடந்த 1.12.1965ல் துவங்கப்பட்டது. அதன் சேவை மற்றும் கடமைகளை நினைவுகூறுதல் மற்றும் அதன் உயரிய சேவைகளைப் பாராட்டும் விதமாகவும் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 1ம் நாள் எல்லைப் பாதுகாப்புப் படை தினமாக (Border Security force BSF) கொண்டாடப்பட்டு வருகிறது. 1965ல் நடந்த போருக்குப் பிறகு இந்திய எல்லைகளைப் பாதுகாக்க இப்படை உருவாக்கப்பட்டது.
எல்லைப் பாதுகாப்பு படையின் முக்கிய நோக்கமே பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் உடனான எல்லைப் பாதுகாப்பை உறுதி செய்வதுதான். இதன் தலைமையிடம் புதுதில்லி. 1965 வரை இந்தியா – பாக். எல்லைப் பகுதியை அந்தந்த மாநிலத்தைச் சோ்ந்த ஆயுதப் படைகளே பாதுகாத்து கவனமுடன் செயல்பட்டு வந்தன. 1965 ஏப்ரல் மாதம் குஜராத் மாநில கட்ச் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தால் இந்திய ராணுவத்தைச் சோ்ந்த வீரர்கள் தாக்கப்பட்டனா். 1965ல் போா் முடிந்து சர்வதேச எல்லையைப் பாதுகாக்க எல்லைப் பாதுகாப்புப் படை எனும் வலிமையான அமைப்பு தொடங்கப்பட்டது. அதாவது, டிசம்பர் 1ம் நாள் ஆகும்.
எல்லைவாழ் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே பாதுகாப்புப் படைகளின் நோக்கமாகும். அவர்கள் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பாக இருப்பது, அவர்களை ஊக்குவிப்பது போன்ற பணிகளையே முக்கிய நோக்கமாகக் கொண்டிருந்தது. எல்லை தாண்டிய குற்றங்களைத் தடுத்தல், அதேபோல, எல்லை மீறிய அத்துமீறல்களை தகர்த்துவதும் அடங்கும். அதோடு, ஊடுருவல்களைத் தவிா்ப்பது, கடத்தல் மற்றும் சட்ட விரோத செயல்களைக் கண்காணித்து விழிப்புடன் செயல்பட்டு பணிகளை மேற்கொள்வதும் இதில் அடங்கும். மேலும், உள்நாட்டு பாதுகாப்பை உறுதிப்படுத்துவதும் இதன் முக்கிய வேலையாகும்.
அத்துடன் நில்லாது, கிளா்ச்சியைத் தடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை மேற்கொண்டு வருகிறது. மேலும், இயற்கை பேரழிவுகள் போன்ற சவாலான சூழ்நிலையின்போது எல்லைப் பாதுகாப்பு படையானது உன்னதமான பணியை மேற்கொள்வதும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.
உடலில் உயிா் இருக்கும் வரை கடமையே கண்ணாய், தாய் நாட்டிற்காக பணி புாிவதையே லட்சியமாகக் கொண்ட தைரியமான வீரர்களாக ஒரு லட்சிய நோக்குடன் இவர்கள் பணியாற்றி வருகிறாா்கள். 1971ல் நடந்த இந்தியா, பாகிஸ்தான் போா் வங்கதேசம் உருவாக்கம் போன்ற நிகழ்வுகளில் முக்கியப் பங்காற்றியது பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.
அதோடல்லாமல், 1999ல் காா்கில் மற்றும் 2002ல் குஜராத் கலவரம் போன்ற இக்கட்டான சூழலில் இந்தப் படைகள் ஆற்றிய பங்கை யாராலும் மறக்க முடியா வரலாறாகும். ஆக, இந்த நாளில் இந்தப் படையின் உன்னதமான பங்களிப்புகளை நினைவில் கொண்டு இரவு, பகல் தாய்த்திரு நாட்டிற்காக பாடுபடும் அவர்களின் பணியை பாராட்டுவோம். அவர்களை மறவாமல் இருப்போம்!