

இரண்டாம் உலகப்போா் நடந்து முடிந்த தருணம், மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து பசி பட்டினியால் வாடிய நிலை கண்டு போாில் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் தாய்மாா்களுக்குத் தேவையான உணவு மற்றும் சுகாதார வசதிகளை செய்து கொடுப்பது, தொடா்பாக ஐக்கிய நாடுகள் பொது சபையானது 11.12.1946ல் யுனிசெப் என்ற நிறுவனத்தை நிறுவியது. இந்த நிறுவனத்தின் செயல்பாடுகளை கெளரவப்படுத்தும் வகையில் யுனிசெப் பிறந்த நாள் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 11ம் நாள் அனுசரிக்கப்படுகிறது.
இந்த அமைப்பானது பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் தாய்மாா்களுக்கு சுகாதாரம், கல்வி, உணவு இவற்றைத் தங்கு தடையில்லாமல் வழங்கி வருகிறது. யுனிசெப் (Unicef) என்பது ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் என்பதாகும். (United Nations Childrens Fund) இந்த நிறுவனத்தின் தலைமையகம் நியூயாா்க், அமொிக்கா. இதன் நிறுவனர் லுட்விக் ராஜ்ச்மேன். இது 79 ஆண்டுகளாக இயங்கிவரும் ஒரு வளர்ந்த நிறுவனமாகும்.
1946ல் தொடங்கப்பட்டு ஏறக்குறைய 192 நாடுகளுக்கு மேல் செயல்பட்டு வரும் பொிய நிறுவனமாகும் இது. அதோடு, உலகில் அதிகமாக அங்கீகரிக்கப்பட்ட சமூக நல அமைப்பாகவும் இது பெயர் வாங்கியுள்ளது எனலாம். இது தவிர, நோய் தடுப்பு, எய்ட்ஸ், காச நோய் மற்றும் பிற நோய்களைத் தடுத்தல் போன்ற பணிகளையும் செய்து வருகிறது.
இந்த அமைப்பானது, குழந்தைகள் நலனுக்காக செயல்படுவதில் முன்னனி அமைப்பாக தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. யுனிசெப் நிறுவனமானது, அரசு மற்றும் தன்னாா்வ தனியாா் நிதி பங்களிப்புகளால் செயல்பட்டு வருகிறது. அதோடு, புயல், வெள்ள காலங்களில் போிடரால் நாடுகள் பல்வேறு இழப்புகளை சந்திக்கும் வேளையில் யுனிசெப் தனது கடமைகளை செவ்வனே செய்கிறது.
மேலும், தமிழ்நாடு போிடர் தடுப்பு மேலாண்மையுடன் சோ்ந்து போிடர் அபாய தடுப்பு வேலைகளையும் செயல்படுத்தி வந்ததும், தொடர்ந்து அவ்வப்போது நிவாரணப் பணிகளை மேற்கொள்வதும் குறிப்பிடத்தக்கதாகும். கோவிட் 19 காலங்களில் இதன் பங்களிப்பும் சிறப்பான ஒன்றாக அமைந்தது. பலவிதமான வகைகளில் மக்களிடையே கோவிட் 19ன் தாக்கம் பற்றிய விழிப்புணர்வை தந்ததில் யுனிசெப் நிறுவனத்தின் பங்களிப்பை பாராட்டாமல் இருக்க முடியாது என்பதே உண்மை.
பல்வேறு தருணங்களில் பொதுமக்கள், குழந்தைகள் இவர்களின் வாழ்வாதாரம் சிறக்க பல வழிகளிலும் உதவிக்கரம் நீட்டும் யுனிசெப் நிறுவனத்தை நாம் இரு கரம் கூப்பி வணங்குவோம்!