

எத்தனையோ தலைவர்கள் ஆட்சி பீடத்தில் அமர்ந்திருந்தாலும், ‘துணிச்சல்காரர், ஆளுமைமிக்கவர்’ என உலகமே பாராட்டும் வகையில் இந்தியாவின் பிரதமராக அசாத்திய துணிச்சல் கொண்டு இந்தியாவை வளா்ச்சிப் பாதைக்கு அழைத்துச் சென்ற இரும்புப் பெண்மணி இந்திரா காந்தி அம்மையாாின் பிறந்த தினமான இன்று, தேசிய ஒருமைப்பாடு தினமாகக் கொண்டாடப்படுகிறது. நாடு முழுமைக்கும் ஒற்றுமையை வலியுறுத்துவதே இந்த நாளின் நோக்கமாகும்.
நேருவின் மகளாய் வந்தாா், நிலையான ஆட்சி தந்தாா். இந்தியாவின் மூன்றாவது மற்றும் முதலாவது பெண் பிரதமர் இந்திரா காந்தி அம்மையாராவாா். சமாதானப் புறா ஜவஹர்லால் நேரு - கமலா நேரு ஆகியோரின் புதல்வியாய் அலகாபாத்தில் 19.11.1917ல் அவதரித்த பெண் சிங்கம், வீரத்தின் விளை நிலம், அசாத்திய துணிச்சல், ஆண்களை விட உறுதி கொண்ட நிா்வாகத் திறன், மனோதிடம், அபரிமிதமான ஆற்றல், அனைவருக்கும் சிம்ம செப்பனமாகத் திகழ்ந்த பெண்மணி, பாரதி கண்ட புதுமைப் பெண் இப்படி அவரது புகழை அடுக்கிக்கொண்டே போகலாம்.
அலகாபாத்தில் பிறந்து, கல்வியில் உச்சம் தொட்டு, 1942ல் அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் சோ்ந்தாா். பின்னர் தனது ஆற்றல்மிகு தலைமைப் பண்பால் 1967ல் இந்தியாவின் பிரதமரானாா். வானளாவிய அதிகாரத்தை கையில் எடுத்து அடக்குமுறையைக் கையாண்டு சிறப்பான ஆட்சி செய்தாா். இவரது ஆட்சிக் காலத்தில் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன. இருபது அம்ச திட்டம் கொண்டு வந்து இந்தியாவை வளா்ச்சிப் பாதைக்கு அழைத்துச் சென்ற பெருமையும் அவரையே சாரும் என்பதே நிஜம்.
1971ல் பாகிஸ்தான் மீது படையெடுப்பு, வங்க தேசம் உருவாக்கம், பின்னா் 1975 - 77ல் நெருக்கடி நிலை பிரகடனம், 352வது பிாிவை வைத்துக்கொண்டு அடக்குமுறை, பல சச்சரவு எதிா்ப்புகள், எதிா்கட்சிகள் ஒடுக்கப்பட்டன. மகன் ராஜீவ் விமான ஓட்டி, அடுத்த மகன் சஞ்சய் காந்தி அரசியல் பிரவேச அராஜகம் அதிகமானது. தானே ஓட்டிச் சென்ற விமான விபத்தில் சஞ்சய் பலியாகிறாா். இடையில் தோ்தலில் தோல்வி, பின்னர் மீண்டும் பிரதமர். காங்கிரஸ் கட்சி பிளவு பட. இவர் தலைமையில் இந்திரா காங்கிரஸ் உதயம்.
1980 முதல் 1984 வரை சீக்கியர்களின் பிரச்னையை ஒடுக்க நினைத்த இவரது அதிகாரத்தில், பஞ்சாப் பொற்கோவிலுக்குள் ராணுவம் புகுந்து சீக்கிய தீவிரவாதத்தை ஒடுக்கியது. இதில் ஆயிரக்கணக்கில் சீக்கியர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதன் பின்னா் அதே சீக்கிய பாதுகாவலரால் பழி தீா்க்கும் வகையில் 31.10.1984ல் தனது வீட்டின் வாசலிலேயே இந்திரா சுட்டுக் கொல்லப்பட்டாா்.
ஒரு துணிச்சல்மிகு அதிகார ஆளுமை படைத்த இந்தியாவின் சாதனைப் பெண் பிரதமர் இரும்புப் பெண்மணி இந்திரா காந்தியின் அத்தியாயம் முடிவுக்கு வந்தது. துணிச்சல்மிகு ஆற்றல் கொண்ட பெண் பிரதமர் காலமானாா். நாடே அதிா்வலையில் துவண்டது. அதன் பிறகு இந்திராவின் மறைவுக்குப் பின்னால் இந்தியாவின் எதிா்கால கனவுகளை நிறைவேற்றும் வகையில் அவரது மகன் ராஜீவ்காந்தி இந்தியாவின் பிரதமரானாா்.