தமிழ் மாதங்களின் பெயர் காரணம்

தமிழ் மாதங்களின் பெயர் காரணம்
Published on

வார நாட்களின் பெயர்கள் கிரகங்களைச் சார்ந்திருக்க, மாதங்களின் பெயருக்கு நட்சத்திரங்கள் கை கொடுத்தன. எவ்வாறு என்று பார்ப்போம்.

தமிழ், மலையாள மாதங்கள் ராசியைச் சார்ந்து வருவதால் மலையாள நாட்காட்டியில் பெரும்பாலும் ராசியின் பெயரே மாதத்திற்குச் சூட்டப்பட்டுள்ளது. ஆனால் தமிழ் நாட்காட்டியில் அந்த மாதத்தில் பெரும்பாலும் எந்த நட்சத்திரத்தில் பௌர்ணமி வருகிறதோ அதுவே மாதத்தின் பெயர் ஆகிறது.

1.  சூரியன் மேஷராசியில் : பௌர்ணமி சித்ரா நட்சத்திரத்தில் வரும். ஆகவே சித்திரை மாதம்.

2.  சூரியன் ரிஷபராசியில் : பௌர்ணமி வைகாசி நட்சத்திரத்தில். எனவே வைகாசி மாதம்

3.  சூரியன் மிதுனராசியில் : பௌர்ணமி அனுஷம் என்கிற அநுராதா நட்சத்திரத்தில். அனுஷனி ஆனி ஆயிற்று

4.  சூரியன் கடகராசியில் : பௌர்ணமி பூர்வாஷாடம் (பூராடம்) அல்லது உத்திராஷாடம் (உத்திராடம்) நட்சத்திரத்தில் வரும்.  “பூர்வம்” என்ற வடமொழிச் சொல்லிற்கு முன் என்றும் “உத்திரம்” என்பதற்கு பின் என்றும் பொருள்.  ஆஷாடமாதம் ஆஷாடி என மருவி ஆடி என அறியப்பெற்றது.

5.  சூரியன் சிம்மராசியில் : பௌர்ணமி பெரும்பாலும் திருவோணம் என்கிற ஸ்ராவண நட்சத்திரத்தில். ஆகவே ஸ்ராவண மாதம்  ஸ்ராவணி, இது ஆவணி என்று மாறியது.

6.  சூரியன் கன்னிராசியில் : பௌர்ணமி பூர்வப்ரோஷ்டபதா (பூரட்டாதி) அல்லது உத்திரப்ரோஷ்டபதா (உத்திரட்டாதி) நட்சத்திரத்தில் வரும். ப்ரோஷ்டபதா என்பதால் மாதம் ப்ரோஷ்டபதி ஆகியது. இது திரிந்து மாதப் பெயர் புரட்டாசி ஆயிற்று.

7.  சூரியன் துலாராசியில் : பௌர்ணமி அஸ்வினி நட்சத்திரத்தில். அஸ்வினி காலப்போக்கில் ஐப்பசி ஆனது.

8.  சூரியன் விருச்சிக ராசியில் : பௌர்ணமி கிருத்திகா என்கின்ற கிருத்திகையில்.  மாதம் கார்த்திகை ஆயிற்று.

9.  சூரியன் தனுசு ராசியில் : மிருகசீரிடம் என்கின்ற மிருகசீர்ஷி நட்சத்திரத்தில் பௌர்ணமி. இந்த நட்சத்திரம் மார்கசீர்ஷி என்றும் அறியப்படுகிறது.  ஆகவே மாதத்திற்கு மார்கழி என்ற பெயர் வந்தது.

10. சூரியன் மகர ராசியில் : பௌர்ணமி பூச நட்சத்திரத்தில் வரும். இதை புஷ்யம், பௌஷ்யம், திஷ்யம் என்றும் சொல்லுவர். திஷ்யத்தில் பௌர்ணமி வருவதால் மாதம் தைஷ்யம் ஆயிற்று.  கடைசி மூன்றெழுத்து மறைந்து தை ஆக மாறியது.

11.  சூரியன் கும்ப ராசியில் : மகம் எனப்படும் மகா நட்சத்திரத்தில் பௌர்ணமி. மாதத்தின் பெயர் மாகி என குறிக்கப்பட்டு அது பின்னர் மாசி ஆயிற்று.

12.  சூரியன் மீனராசியில் : பௌர்ணமி பூரம் என்கிற பூர்வபல்குனீ அல்லது உத்தரம் என்ற உத்தர பல்குனீயில் வரும்.  ஆகவே பல்குனீ மாதம். இது பங்குனி என்று மாறியது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com