திரை இசையின் உச்சம்! குரலோ படு செளக்கியம்!

டி.எம்.எஸ். நூற்றாண்டு
திரை இசையின் உச்சம்!
குரலோ படு செளக்கியம்!

மிழ்த் திரைப்பட சினிமா பாடல்களுக்கு ஒரு தனிப்பெரும் அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தவர் டி. எம். சௌந்தர்ராஜன் அவர்கள்! தமிழ் மொழியின் அழகே அதை உச்சரிப்பதில் தானே உள்ளது, கவிஞர்களின் பாடல்களை நன்கு உள்வாங்கிக்கொண்டு, மிக நேர்த்தியான உச்சரிப்புடன் பாடுவாதில் வல்லவர்

காலத்தால் அழிக்க முடியாத பாடல்களை நமக்கு அளித்திருக்கிறார் TMS.

இன்று (24-03-2023) நூற்றாண்டு காணவிருக்கும் டி. எம். சௌந்தர்ராஜன் (TMS) அவர்களை பற்றிய இந்த சிறு குறிப்பு இதோ;

தமிழ் சினிமாவில் சிம்ம குரலோன் என்று அழைக்கப் பட்டவர்கள் இருவர் மட்டுமே. ஒருவர் நம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். மற்றொருவர் டி.எம். சௌந்தராஜன் அவர்கள்.

TMS தமிழ்த் திரையுலகில் மட்டுமல்லாது,கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் பாடி இருக்கிறார்.  சினிமா பாடல்கள் தவிர ஏகப்பட்ட பக்தி பாடல்களும் பாடியிருக்கிறார் இவர் ஒரு சிறந்த முருக பக்தர்.  பக்தி பாடல்களையும் சேர்த்து இவர் பாடிய பாடல்களின் எண்ணிக்கை 10,000 தைக் கடந்தது.

அவரது பாடல்கள் கேட்ட மாத்திரத்தில், இது சிவாஜி பாட்டு, இது எம்.ஜி.ஆர் பாட்டு, இது ஜெய்சங்கர் பாட்டு,  இது ஜெமினி கணேசன் பாட்டு என்று சட்டென்று கூற முடியும்.!  ஆம், அந்தந்த நடிகர்களுக்கு ஏற்றார் போல குரலமைத்து, சிறப்பாக உச்சரித்து பாடியிருப்பார்!  அந்த நடிகர்கள் அவர்களாகவே பாடியது போல இருக்க வேண்டும் என்பதற்காக மெனக்கட்டு இருப்பார்.

சிவாஜி நடித்தாலும் சரி எம்ஜிஆர் நடித்தாலும் சரி ஏன் மணல் கயிறு எஸ்.வி சேகருக்கு கூட எட்டு வித கட்டளைகள் என்ற ஒரு பாடல் பாடியுள்ளார்.   நகைச்சுவை நடிகர்கள் வி.கே.ராமசாமி, Y.G.மகேந்திரன் என பல பருக்கும் இவர் பாடி கொடுத்திருக்கிறார்!

மார்ச் மாதம் 24 ஆம் தேதி 1922 வருடம் மதுரையில் பிறந்த  டி எம் சௌந்தரராஜன் அவர்கள், காரைக்குடி ராஜாமணி ஐயங்கார் என்பவரிடம் முறையான இசை பயிற்சி பெற்றார்.

அவருக்கு பக்தி பாடல்கள் பாடுவதில் நாட்டமிருந்தது. இருந்தாலும் திரையுலகத்தில் பாட வேண்டும் என்ற முயற்சி மேற்கொண்டார். தியாகராஜ பாகவதரை மானசீக குருவாக வைத்துக்கொண்டார். அவரைப் போல் பாட வேண்டும் என்பதுதான் டி.எம்.சௌந்தராஜன் அவர்களின் லட்சியம்.

அவர் சிறுவயதிலிருந்தே மிகவும் கடினமான பயிற்சிகளை மேற்கொண்டாலும், 1950 ஆம் ஆண்டில் தான் அவருக்கு முதல் பாடல் பாட வாய்ப்பு கிடைத்தது. "ராதை என்னை விட்டு போகாதடி" என்பது தான் அவருடைய முதல் பாடல்.

கால வெள்ளத்தில் டி. எம். சௌந்தர்ராஜன் இல்லாமல் தமிழ் சினிமா பாடல் இல்லை என்பது போல் ஆகிவிட்டது ஒரு படத்திற்கு இசை இயக்கம் நடிகர்கள் எந்த அளவிற்கு முக்கியமோ அந்த அளவுக்கு TMS பாடல்களும் முக்கியம் என்ற நிலைக்கு தமிழ் சினிமாவை உயர்த்தினார். பாடலாசிரியர்களும் இசை அமைப்பாளர்களும் TMS அவர்களுக்காக மிகுந்த உற்சாகத்துடன் பாடல்களை அமைத்தனர். நடிகர்களின் பாராட்டுகளையும் பெற்றார் TMS.

1962 ஆம் வருடம் ’பட்டினத்தார்’ என்னும் படத்தில் பாடல்கள் பாடியதோடு மட்டுமல்லாமல் அந்த படத்தில் கதாநாயகனாகவும்  நடித்தார் TMS. 1964 ஆம் ஆண்டு அருணகிரிநாதர் என்னும் படத்திலும் கதாநாயகனாக நடித்ததுடன், காலத்தால் அழியாத வகையில் அமைந்த "முத்தை திரு பக்தி திருநகை" என்ற பாடலையும் பாடினார்!

வசந்த முல்லை...

ஏரிக்கரையின் மேலே...

சித்திரம் பேசுதடி...

பாட்டும் நானே பாவமும் நானே...

சிந்து நதியின் இசை...

ஹலோ மிஸ்...

வாழ நினைத்தால்...

நான் மலரோடு தனியாக ஏன் இங்கு வந்தேன்...

பொன்மகள் வந்தாள்...

உலகம் பிறந்தது எனக்காக...

இப்படி என்றைக்குமே மறக்க, முடியாத அமரத்துவம் வாய்ந்த பாடல்களை பாடினார்.

2010 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் செம்மொழி மாநாட்டின் பாடலான ’செம்மொழியான’ தமிழ் மொழியாம் பாடலிலும்,  அவர் பாடியுள்ளார்!

மெல்லிசை, துள்ளல்  இசை,சோகம், தத்துவம், புதுவித முயற்சி என எல்லா வகையான பாடல்களையு பாடி கலக்கினார் டி.எம். எஸ்.

டி.எம்.எஸ் என்றாலே ஹைப்பிச் பாடல்கள் மட்டும்தான் பாடுவார் என்ற ஒரு பேச்சு இருந்த போது ’சாந்தி’ என்னும் திரைப்படத்தில் 1965 ஆம் ஆண்டு " யார் அந்த நிலவு"  என்னும் ஒரு மிதமான பாடலை பாடி,  பெரிய ட்ரெண்ட் செட்டராக மாறினார் டி எம் சௌந்தரராஜன் அவர்கள்.

எம்ஜிஆர்,  சிவாஜி கணேசன்,  எஸ் எஸ் ராஜேந்திரன், ஜெமினி கணேசன், ஜெய்சங்கர் போன்ற பலரின் திரைப்படங்களுக்கு இவர் பாடியிருக்கிறார்.

இவருடைய  இசைத்துறை சாதனைக்காக இவருக்கு 1978 ஆம் ஆண்டு  கலைமாமணி விருதும், 2003 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ பட்டமும் வழங்கப்பட்டது. 2016 ஆம் ஆண்டு அவரின் நினைவாக ஒரு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.

தனது 85வது வயதிலும் மேடைகளில் தோன்றி இசை கச்சேரிகள் நடத்தி வந்தார் டி.எம் சௌந்தரராஜன்.  "இந்தப் பாடலை இப்போது என்னால் பாட முடியாது வயதாகிவிட்டது. இந்த பாடல் பதிவு செய்யும்போது நடந்த சுவாரசியமான சம்பவத்தை கூறுகிறேன்" என்று மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டு வந்தார் ஒரு சில மேடைகளில்.

40 ஆண்டுகள் தமிழ்  இசை உலகத்தில் வலம் வந்த டி.எம் சௌந்தரராஜன் அவர்கள் தனது 91 ஆம் வயதில் 2013 ஆம் வருடம் இறைவனடி சேர்ந்தார்.

அவர் பூத உடல் மறைந்தாலும், அவர் குரலுக்கு என்றும் அழிவே கிடையாது நமது தமிழ்  திரை உலகம் இருக்கும் வரை அவருடைய குரலுக்கு அழிவே   இல்லை! 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com