ஆஃப்ரோ வகை சிகை அலங்காரத்தில் கின்னஸ் உலக சாதனை படைத்த அமெரிக்கப் பெண்ணின் கதை!

ஆஃப்ரோ வகை சிகை அலங்காரத்தில் கின்னஸ் உலக சாதனை படைத்த அமெரிக்கப் பெண்ணின் கதை!

கட்டுரைக்குள் நுழைவதற்கு முன்பு தலைப்பில் இடம்பெற்றுள்ள ஆஃப்ரோ என்ற வார்த்தைக்கான பொருள் என்ன என்று முதலில் தெரிந்து கொள்வோம்.

ஆஃப்ரோ என்பது சுருளான பந்து போன்றிருக்கும் ஒரு விதமான கூந்தல் வளர்ப்புமுறை. இது பெரும்பாலும் ஆப்ரிக்க மக்களின் சிகை அலங்காரத்துடன் பொருந்திப் போவதால், இதை ஆஃப்ரோ ஸ்டைல் என்கிறார்கள். இதன்படி சிகை அலங்காரத்தை உச்சந்தலையில் இருந்து விலக்கி, ஒரு தனித்துவமான சுருட்டை வடிவத்தை சிதறடித்து அதை மேகம் அல்லது பஃப் பந்து போன்ற ஒரு வட்ட வடிவில் வளர்த்தெடுப்பதாகும்.

சிம்பிளாகச் சொல்வதென்றால் நம்மூர் யோகி பாபு ஹேர்ஸ்டைல் தானுங்க!

கின்னஸ் சாதனைப் பட்டியலில் இந்த ஹேர்ஸ்டைலுக்கும் பிரதான இடமுண்டு என்று எண்ணுகையில் வியக்காமல் இருக்க முடியவில்லை.

சமீபத்தில் லூசியானாவைச் சேர்ந்த 47 வயதான ஏவின் டுகாஸ் என்ற பெண், உலகில் இதுவரை வளர்ந்தவற்றிலேயே மிகப்பெரிய ஆஃப்ரோவை வளர்த்தெடுத்ததற்காக கின்னஸ் உலக சாதனைச் சான்றிதழ் பெற்றுள்ளார் என்கிறது இணையம்.

அவர் தனது பெரிய, அழகான கூந்தலால் உலகை ஈர்க்கும் பழக்கம் கொண்டவர். 9.84 அங்குல உயரம், 10.4 அங்குல அகலம் மற்றும் 5.41 அடி விட்டம் கொண்ட ஏவின் டுகாஸின் ஆஃப்ரோ ஸ்டைல் சிகை அலங்காரம் மீண்டும் மிகப்பெரிய ஆப்ரோவாக அங்கீகரிக்கப்பட்டு முந்தைய கின்னஸ் உலக சாதனையை முறியடித்துள்ளது.

சாதனை புத்தகத்தின்படி, அவர் இந்த உலக சாதனையை நிகழ்த்துவது இது இரண்டாவது முறையாகும். 2010 இல் ஏவின் டுகாஸ் முதன்முதலில் சாதனை பட்டத்தை அடைந்தபோது, அவரது ஆப்ரோ நம்பமுடியாத 4 அடி 4 அங்குலம் (132 செமீ) சுற்றளவைக் கொண்டிருந்தது.

இந்த சிகை அலங்காரம், வளர 24 ஆண்டுகள் எடுத்தது, ஏனெனில் இதை இயற்கையாகவே வளர்த்தெடுக்க வேண்டும் என்று ஏவின் எண்ணியதால் அது முழுதாக வளர்ந்து சாதனை அளவுக்குச் செல்ல அத்தனை காலம் பிடித்தது என்கிறார்.

ஆரம்பத்தில் என் தலைமுடியை இயற்கையாக மட்டுமே தான் வளர்த்தெடுப்பேன் என்பதில் நான் கொண்டிருந்த மனஉறுதியை ஆப்ரோ வளர்த்தெடுக்கலாம் என்பதில் கூட நான் கொண்டிருக்கவில்லை.

என் தலைமுடியை நிரந்தரமாக ஸ்ட்ரெயிட்டன் செய்ய ஆபத்தான இரசாயனங்களைப் பயன்படுத்துவதில் நான் சோர்வாக இருந்த நேரத்தில் இது நிகழ்ந்தது. அந்த இரசாயனங்கள் இப்போது புற்றுநோயுடன் இணைக்கப்பட்டுள்ளன, அதற்காக இப்போது பெரிய வழக்குகள் எல்லாம் நடந்து கொண்டிருக்கின்றன. அதனால் நான் பல ஆண்டுகளுக்கு முன்பு அவற்றிலிருந்து விலகி வந்து விட்டதை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன்," என்கிறார் ஏவின் டுகாஸ்.

இந்த ஆஃப்ரோ ஹேர் ஸ்டைலைப் பெற நான் சூடான எண்ணெய் சிகிச்சைகள் செய்ய ஆரம்பித்தேன். வாரத்திற்கு ஒருமுறையாவது கூந்தலுக்கு ஷாம்பு மற்றும் கண்டீஷனர் பயன்படுத்தும் முன் வெண்ணெய் கொண்டு என் தலைமுடிக்கு ஆயில் செய்வதை நான் வழக்கமாக்கினேன்.

அத்துடன், கூடுதலாக, என் தலைமுடியின் முனைகளைக் கையாளும் போது நான் கவனமாக இருக்கிறேன், ஏனென்றால் அவை மிகவும் மென்மையான பாகங்கள் என்பதால் அவை உடைந்து விடும்படியாக அல்லாமல் நான் என் தலைமுடியின் முனைகளை மறைத்து வைக்கும் ஸ்டைல்களை செய்ய முயற்சிக்கிறேன். அது மிகவும் உதவுகிறது.என்று சொல்லும் ஏவின் டுகாஸ் இப்போது தன்னுடைய சிகை அலங்காரத்தை வெறுமே ஆஃப்ரோவாக மட்டுமே நீடிக்க விட்டு விடவில்லை. அவர் இப்போது பல டன்கணக்கான ஹேர் ஸ்டைல்களை தனது கூந்தலில் முயற்சிக்கிறார்.

"எனது ஆஃப்ரோ ஹேர்ஸ்டைலை முதன்முறையாக பார்க்கும் மக்கள் அதற்கு பலவிதமான எதிர்வினைகள வெளிப்படுத்துகின்றனர்.

சிலர் இந்த ஹேர் ஸ்டைலைக் கண்டு உற்சாக மிகுதியில் அலறுவார்கள். சிலர் விநோதமாக முறைத்துப் பார்க்கிறார்கள், சிலர் என் ஹேர் ஸ்டைல் குறித்து ஆச்சர்யமாகி எழுந்து நடந்து என்னருகில் வந்து இந்த சிகை அலங்காரம் குறித்து கேள்விகளைக் கேட்கிறார்கள், சிலர் அருகில் வந்து கொஞ்சம் முடியை தொட்டோ அல்லது இழுத்தோ பார்க்க முயற்சிப்பார்கள்," என்று அவர் கூறினார்.

ஆக மொத்தத்தில் இந்த ஹேர்ஸ்டைல் எனக்கு கின்னஸ் சாதனையில் இடம்பெற்றுத் தரும் என்று நான் முன்னர் நினைத்திருக்கவில்லை என்ற போதும் இப்போது இந்த ஹேர்ஸ்டைல் குறித்து நான் பெருமிதமாக உணர்கிறேன். என்னைக் காட்டிலும் என் ஹேர் ட்ரெஸ்ஸர் என் தலைமுடியைக் கண்டு இன்னமும் பெரிதாக ஆச்சர்யப்பட்டுக் கொண்டிருக்கிறார். ஏனெனில், பராமரிப்பு வேலைகள் அத்தனையையும் நானே செய்து முடித்து விடுவதால் அவர் வெறுமே ஹேர் ஸ்டைலிங் செய்ய மட்டுமே வருவார். அதனால் இதன் மீதான பிரமிப்பு அவருக்கு இன்னும் அதிகமாகிக் கொண்டே போகிறது என்கிறார் ஏவின் டுகாஸ்.

வெறுமே நீளமாக முடி வளர்ப்பதே கஷ்டமாக இருக்கும் இந்த நவீன யுகத்தில் ஆங்கிலத்தில் புஷ் என்பார்களே அது போல புதர் போல ஒரு ஒழுங்கமைந்த ஹேர்

ஸ்டைலை தொடர்ந்து பல ஆண்டுகளாகப் பராமரித்து வந்து அதிலும் இயற்கையான முறையில் தான் பராமரிப்பேன் என அடம்பிடித்து சாதித்து அதற்காக கின்னஸ் உலக சாதனை சான்றிதழ் பெறுவதெல்லாம் பெரிய சாதனை தான்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com