
கவனக்குறைவாக தன்னை நீல நிறமாக மாற்றிக்கொண்ட ஒரு நபரின் புகைப்படங்கள், அவர் முதன்முதலில் பொதுமக்களின் பார்வைக்கு வந்த பத்தாண்டுகள் கழித்தும் கூட இப்போது சமூக ஊடகங்களில் மீண்டும் வெளிவந்துள்ளன. அந்த நபரின் பெயர் பால் கராசன், அவரிடம் அப்படி என்ன ஸ்பெஷல் என்கிறீர்களா? வேறென்ன சரும நிறம் தான் ஸ்பெஷல்.
நாம் பெரும்பாலும், கருப்பாகவும், சிவப்பாகவும், இரண்டும் கலந்து மாநிறமாகவும், கோதுமை நிறத்திலும் இருக்கும் மனிதர்களைத்தான் கண்டிருக்கிறோம். தாம் வாழும் கண்டங்கள் மற்றும் நாடுகளைப் பொருத்து அடர் கருப்பாக இருப்பவர்களையும், அதீத வெளுப்பாகவும் இருப்பவர்களையும் கூட நாம் கண்டிருக்க வாய்ப்புகள் உண்டு. ஆனால், ஷியாமள ரூபன் கண்ணனைப்போல நீல நிற சருமம் கொண்டவர்களை எங்கேயாவது நாம் கண்டிருக்கிறோமா?
அதற்கும் கூட சினிமாக்களில் வாய்ப்பு இருக்கத்தான் செய்கிறது. பழைய சினிமாக்களில் சீனியர் என் டி ஆர் கிருஷ்ணர் வேஷம் போடுகையில் உடல் முழுவதும் நீலநிற பெயிண்டை கொண்டு தீட்டி இருப்பார்கள். அது படம். ஆனால், நிஜமாகவே ஒரிவருக்கு சரும நிறம் நீலமாக மாறி விட்ட கதை உங்களுக்குத் தெரியுமோ?!
அதைப்பற்றித்தான் நாம் இப்போது தெரிந்து கொள்ளப் போகிறோம்.
வாஷிங்டனைச் சேர்ந்த கராசன் என்பவர் தனது கீல்வாதம் மற்றும் தோல் அழற்சி குறைபாடுகளைப் போக்க பல ஆண்டுகளாக வீட்டில் தயாரிக்கப்பட்ட சில்வர் குளோரைடு கொலாய்டல் சப்ளிமெண்டரி உணவுப் பொருட்களை உட்கொண்டு வந்திருக்கிறார்.
அந்த சப்ளிமெண்ட் ஒரு அசாதாரண பக்க விளைவைக் கொண்டிருந்தது - சப்ளிமெண்ட்ஸில் உள்ள சில்வர் கொலாய்டு( கூழ்ம நிலையிலான வெள்ளி) அவரது தோலை நீல நிறமாக மாற்றியது.
2008 இல் தேசிய தொலைக்காட்சியில் வாஷிங்டனைச் சேர்ந்த கராசன் தோன்றிய பிறகு அவரது கதை வைரலாகத் தொடங்கியது. அன்றைய நிகழ்ச்சியின் போது அவரது தோல் அப்பட்டமான நீல நிறத்தில் இருந்தது.
ஒரு புத்தகத்தில் படித்த தகவலை அடிப்படையாகக் கொண்டு நீண்ட காலமாக, காரசன் வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட சில்வர் குளோரைடு கொலாய்டை குடித்து வந்திருக்கிறார். குடித்தது மட்டுமல்லாமல் தனது தோல் உரிதலைத் தடுத்து நிறுத்த அதே வெள்ளிக் கலவை கரைசலை முகத்திலும் தேய்த்திருக்கிறார்.
வீட்டில் தயாரிக்கப்பட்ட அந்த 'மருந்து' தனது அசிடிட்டி மற்றும் கீல்வாதத்தை குணப்படுத்தியதாக காரசன் கூறினார். அது நல்ல விஷயம் தானே? என்று நினைக்கிறீர்கள் இல்லையா? ஆனால், அதுவே தான் கராசனுக்கு அர்ஜிரியா எனும் வேண்டாத ஒரு மாற்றத்தையும் கொடுத்தது. (அர்ஜிரியா என்பது சில்வர்
கொலாய்டு தினமும் உட்கொள்வதால் தோலில் நீலம் அல்லது சாம்பல் நிறமாற்றம் ஏற்படும் ஒரு நிலை). இந்த மாற்றம் நிரந்தரத் தன்மை கொண்ட மீளமுடியா மாற்றம் என்பது தெரிய வந்ததும் கராசன் மிகவும் மன வேதனைக்கு ஆளானார்.
இந்த விஷயங்களை ஆதாரப்பூர்வமாக அறிந்து கொள்ளும் வரை கராசனுக்கு தனக்கு நேர்ந்த எதுவுமே தெரிந்திருக்கவில்லை. முதன்முறையாக ஒரு நண்பர் அதைச் சுட்டிக்காட்டும் வரை தனது தோல் நிறம் மாறியதைக் கூட காரசன் உணரவில்லை. "சிறிது காலமாக என்னைப் பார்க்காத ஒரு நண்பர் வந்து, உனக்கு நீ என்ன செய்து கொண்டாய் கராசன் என்று என் முகத்துக்கு நேரே அதிர்ந்து போய் கேட்டார். என்று அவர் 2008 இல் செய்தியாளர்களுக்கு அளித்த நேர்காணலொன்றில் கராசன் கூறினார்.
அவரது நீல நிற தோல் அவருக்கு 'ப்ளூ மேன்' மற்றும் 'பப்பா ஸ்மர்ஃப்' என்ற புனைப்பெயரைப் பெற்றுத் தந்தது, உண்மையில் கராசன் அதை விரும்பவில்லை. உலகத்தின் முன் தனக்கு கிடைத்த பட்டப்பெயர்களை அவர் பெரிதாகப் பாராட்டவில்லை. மேலும் அவரது தோலின் நிறம் அவருக்கு கடுமையான வெயில் பாதிப்பால் வந்ததல்ல என்று கராசனுக்குத் தெரியும் என்றாலும், அவரை நேரில் பார்ப்பவர்கள் அத்தனை பேரும் ‘உங்களது அசல் நிறத்திற்கு எப்போதாவது நீங்கள் திரும்ப வாய்ப்பு உண்டா?! என்று கராசனிடம் கேட்கும் போது, அவர் 'உண்மையில் தெரியாது' என்று தான் பதில் சொல்ல வேண்டியதாயிருந்தது.
இப்படியாக இறக்கும் வரை, அதாவது தன் வாழ்வின் இறுதி வரை தனது பழைய ஒரிஜினல் நிறத்தை மீட்டெடுக்க முடியாமல் நீல நிற சருமத்துடனே சுற்றிக் கொண்டிருந்தார் பால் கராசன். இத்தனைக்கும் காரணம் அவர் எடுத்துக் கொண்ட டயட்ரி சப்ளிமெண்ட் உணவு தான்!
2013 இல் காரசன் தனது 62 வயதில் இறந்தார். அப்போது அவர் மாரடைப்பு மற்றும் நிமோனியாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாது என்றொரு பழமொழி உண்டு நம்மூரில். புத்தகங்கள் என்பவை நமது அறிவை விருத்தி செய்து கொள்ளவும், புதியவற்றைப் பற்றி அறிந்து கொள்வதற்காகவும் தானே தவிர, சில முக்கியமான விஷயங்களில் மருத்துவர்கள் மற்றும் குறிப்பிட்ட துறை சார்ந்த வல்லுநர்களின் பரிந்துரைகள் இன்றி நாமாகத் தீர்மானித்து கை வைத்தியம் செய்து கொள்வது
என்பது எத்தனை பெரிய சிக்கலில் கொண்டு விடக்கூடும் என்பதற்கு கராசனின் வாழ்க்கையே ஒரு பாடம்!
அவரால் இழந்த தன் நிறத்தை மட்டும் தானே மீண்டும் பெற முடியாமல் போனது... என்று நினைப்பவர்களுக்கு ஆம், வெறும் நிறம் தான். ஆனால் அதை வைத்துத் தானே இன்றைக்குப் பலநூறு கோடி ரூபாய்களுக்கான சிவப்பழகு க்ரீம் மற்றும் மேலும் பல அழகு சாதன உபயோகப் பொருட்களுக்கான வியாபாரம் நடந்து வருகிறது.
ஆகவே, தயவு செய்து இனிமேலும் சுய மருந்து எடுத்துக் கொள்ளும் வேகத்தையும், மோகத்தையும் பொதுமக்கள் குறைத்துக் கொள்வது நல்லது.