
ஒரு காலத்தில் விளைச்சல் நிலங்களாக இருந்த பகுதிகள் தற்போது வறண்ட தரிசு நிலங்களாக மாறுவதும், மழை இல்லாமல் தற்காலிக வறட்சி உருவாவதும் பூமி எதிர்கொள்ளும் இரட்டை அச்சுறுத்தல்கள் ஆகும். இதனால் தாவரங்கள் இழப்பு, மண்ணரிப்பு, நீர் பற்றாக்குறை போன்றவை ஏற்படுவதுடன் வளமான நிலங்கள் வறண்ட பாலைவனமாக மாறும் அபாயம் இருக்கிறது. அவற்றைத் தடுக்கும் வழிகளைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
2025ம் ஆண்டுக்கான கருப்பொருள்: ஐக்கிய நாடுகள் சபையால் 1994ம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 17ம் தேதி பூமியின் நிலங்கள் பாலைவனமாக மாறாமல் பாதுகாக்கவும். வறட்சியை எதிர்த்துப் போராடுவதற்குமான தினமாக அனுசரிக்கப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான (2025) கருப்பொருள்: ‘நிலத்தை மீட்டெடுங்கள்; வாய்ப்புகளை உருவாக்குங்கள்’ என்பதாகும். சீரழிந்த நிலத்தை மீட்டெடுத்து வேலை வாய்ப்புகளை உருவாக்குவது, உணவு மற்றும் நீர் பாதுகாப்பை அதிகரிப்பது, காலநிலை மாற்றங்களை ஆதரிப்பது, பொருளாதார மீள்தன்மையை உருவாக்குவது என்பதை வலியுறுத்துகிறது. நமது நிலத்தை வளமாக வைத்திருப்பது எவ்வளவு முக்கியம் என்பதை இந்த நாள் நமக்கு நினைவூட்டுகிறது.
தரிசு நிலங்கள் மற்றும் வறட்சி ஏற்படுத்தும் பாதிப்புகள்: தரிசு நிலங்கள் மற்றும் வறட்சி ஆகியவை அனைவரையும் பாதிக்கும் உலகளாவிய சவால்கள். தற்காலிகமாக மழைப்பொழிவு இல்லாததால் வறட்சி ஏற்படுகிறது. பாலைவனமாக்கல் என்பது வளமான நிலத்தை நீண்ட காலமாக உபயோகிக்காமல், விவசாயத்திற்கும் விளைச்சலுக்கும் உபயோகப்படுத்தாமல் விட்டுவிடுவதால் நல்ல நிலம் பாலைவனமாக மாறிவிடுகிறது. மேலும் வறட்சி, அதிகப்படியான மேய்ச்சல், காலநிலை மாற்றம் போன்ற காரணிகளும் இதற்கு துணையாக அமைகின்றன. இதனால் உணவு உற்பத்தி குறைந்து மக்கள் இடம் பெயர்ந்து வேறு இடங்களுக்குச் செல்கிறார்கள். இதனால் பிரச்னை இன்னும் மோசம் ஆகிறது. இதன் தாக்கம் உலகளாவியது. பில்லியன் கணக்கான மக்களை பாதிப்பதோடு மட்டுமல்லாமல், உணவுப் பாதுகாப்பு மற்றும் இடப்பெயர்வு பற்றிய கவலைகளையும் அதிகரிக்கிறது.
இவற்றை எதிர்கொள்ள உதவும் வழிமுறைகள்:
1. தரிசு நிலங்களை சீர்படுத்தி அதிக மரக்கன்றுகளை நட வேண்டும். மரங்கள் இயற்கையான கடற்பாசிகள் போல செயல்பட்டு மண்ணில் தண்ணீரைத் தக்கவைத்து, காற்று வளமான மண்ணை அடித்து செல்வதைத் தடுத்து நிழலை வழங்குகின்றன.
2. வேளாண் பயிர்களுக்கு அருகில் மரங்களை வளர்ப்பதும் ஒரு நல்ல தீர்வாகும். இதனால் மரங்கள் பயிர்களையும், மண்ணையும் பாதுகாக்கின்றன. நீர் பயன்பாட்டை மேம்படுத்துகின்றன.
3. மழை நீர் சேகரிப்பு கூரைகள் அல்லது பிற மேற்பரப்புகளிலிருந்து மழை நீரை சேகரித்து வறண்ட காலங்களில் விவசாயத்திற்குப் பயன்படுத்தலாம். இதனால் நிலத்தடி நீரும் மீட்டெடுக்கப்படும்.
4. திறமையான நீர்ப்பாசன வழிமுறைகளை கடைபிடிக்கலாம். வயல்களில் நீர் தேங்குவதற்கு பதிலாக சொட்டுநீர் பாசனம் போன்ற முறைகளைப் பயன்படுத்தலாம். தண்ணீர் மெதுவாக நேரடியாக தாவர வேர்களுக்குச் செல்லும். நிறைய தண்ணீரும் சேமிக்கப்படும்.
5. ஆரோக்கியமான இயற்கை நீர் அமைப்புகளை மீட்டெடுத்தல் அவசியம். ஆரோக்கியமான ஆறுகள், ஈர நிலங்கள் மற்றும் பிற இயற்கை நீர்நிலைகளைப் பாதுகாத்து மீண்டும் கொண்டு வருவது நீர் சுழற்சியை சமநிலையை வைத்திருக்க உதவுகிறது.
6. ஒவ்வொரு வருடமும் ஒரே இடத்தில் பயிரை வளர்க்காமல். வேறு வேறு இடத்தில் பயிர்களை நட்டால் மண்ணும் ஆரோக்கியமாக இருக்கும். பல்வேறு ஊட்டச்சத்துகளும் கிடைக்கும். மீதமுள்ள தாவரப் பொருட்களை உரமாக மண்ணில் கலந்தால் மண் வளமாகவும் தண்ணீரைத் தக்க வைத்துக் கொள்வதிலும் சிறந்து விளங்கும்.
7. மேய்ச்சலை கட்டுப்படுத்துதலும் முக்கியம். ஒரு பகுதியில் உள்ள அனைத்து தாவரங்களையும் விலங்குகள் அதிகமாக மேய விடாமல் கட்டுப்படுத்த வேண்டும். இதனால் தாவரங்கள் மீண்டும் வளர்ந்து மண்ணைப் பாதுகாக்க உதவுகின்றன.