தன்னுடைய இதயத்தை அருங்காட்சியகத்தில் கண்டுபிடித்த பெண்!

தன்னுடைய இதயத்தை அருங்காட்சியகத்தில் கண்டுபிடித்த பெண்!

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஜெனிபர் சுடன் என்ற 38 வயது பெண் தன்னுடைய இதயத்தை ராயல் காலேஜ் ஆஃப் சர்ஜன்ஸ் அருங்காட்சியகத்தில் கண்டுபிடித்துள்ளார்.

இந்த செய்தியின் தலைப்பைப் படிக்கும்போது உங்களுக்கு ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்துகிறதா..? எப்படி ஒருவர் தன்னுடைய இதயத்தை அருங்காட்சியகத்தில் கண்டுபிடிக்க முடியும், இதயம் இல்லாமல் எப்படி அந்த நபர் இத்தனை நாட்கள் உயிரோடு இருந்தார் என்ற கேள்விகள் எல்லாம் உங்கள் மூளையைக் கசக்கி பிழியைத் தொடங்கியுள்ளதா? இதே அதற்கான பதில்.

இன்று மிகவும் சுறுசுறுப்பாக காணப்படும் 38 வயதான ஜெனிபர் சுடன் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு இப்படி இருக்கவில்லை. அதற்கு காரணம் அவரின் இதயம்தான். அவரின் இதயம் கார்டியோமயோபதி (cardiomyopathy) என்ற நோயால் பாதிக்கப்பட்டு இருந்தது. இதனால் அவரின் இதயம் ரத்தத்தை பம்ப் செய்து உடல் முழுவதும் அனுப்பும் திறன் கட்டுப்படுத்தப்படும். இந்த அரியவகை நோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட ஜெனிபர் சுடன் உடல் மற்றும் மனதளவில் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டார். இதற்கு ஒரே தீர்வு இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்வதுதான். ஆனால், அவரின் தாயும் இதேபோன்ற பிரச்சனையால் பாதிக்கப்பட்டு இருந்தபோது, அவருக்கும் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் ,அவரின் உடல் மாற்று இதயத்தை ஏற்றுக்கொள்ள மறுத்தது. இதனால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அப்போது ஜெனிபருக்கு வெறும் 13 வயதுதான்.

இதனால், எங்கு அறுவை சிகிச்சையினால் தன் தாயைப் போல் தானும் உயிரிழந்து விடுவோமோ என்ற எண்ணம் ஜெனிபரை பயம்கொள்ளச் செய்தது. ஆனால், அவரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் அவருக்கு உறுதுணையாக இருந்தனர். இதனையடுத்து கடந்த 2007ம் ஆண்டு ஜெனிபர் சுடனுக்கு மாற்று இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்த அறுவை சிகிச்சைக்குத் தேவையான சரியான இதயமும் அவருக்கு அப்போது கிடைத்திருந்தது.

இதைத்தொடர்ந்து தன்னுடைய 22 வயதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஜெனிபர் சுடன். கடினமான இந்த இதய மாற்று அறுவை சிகிச்சையை மருத்துவ குழுவினர் வெற்றிகரமாக மேற்கொண்டனர். ஜெனிபர் சுடனின் உடல் அவரின் தாயின் உடல்நிலை போல் அல்லாமல் புதியதாக வைக்கப்பட்ட மாற்று இதயத்தை ஏற்றுக்கொண்டது. இதனால், மற்றவர்களைப் போல் இயல்பான வாழ்க்கையை தற்போது ஜெனிபர் சுடனால் மேற்கொள்ளமுடிகிறது.

ஜெனிபர் சுடன் உடலிலிருந்து நீக்கப்பட்ட பழைய இதயம், அவரின் அனுமதியுடன் ஹோல்போர்னில் உள்ள ராயல் காலேஜ் ஆஃப் சர்ஜன் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்த வைக்கப்பட்டது.

இந்நிலையில், சமீபத்தில் ஹோல்போர்னில் உள்ள ராயல் காலேஜ் ஆஃப் சர்ஜன் அருங்காட்சியகத்திற்கு வருகை தந்த ஜெனிபர் சுடன் கண்ணாடி ஜாடிக்குள் வைக்கப்பட்டு இருந்த தன்னுடைய இதயத்தைக் கண்டு உணர்ச்சிவசப்பட்டார். இதுகுறித்து பேசிய ஜெனிபர் சுடன், இதய மாற்று அறுவை சிகிச்சை முடிந்தபின் நான் கண் விழித்துப் பார்த்தபோது நான் என்னை ஒரு புது மனுஷியாக உணர்ந்தேன். என் எதிரில் இருந்த குடும்ப உறுப்பினர்களிடம் கட்டை விரலை உயர்த்தி நான் சாதித்துவிட்டேன் எனக் கூறினேன். இப்போது மீண்டும் என் பழைய இதயத்தை 16 வருடங்களுக்குப் பிறகு அருங்காட்சியகத்தில் பார்க்கும்போது, அதுவும் தற்போது கண்ணாடி ஜாடிக்குள் இருக்கும் என் இதயம் முன்பு ஒருகாலத்தில் என் உடலுக்கு இருந்தது எனத் தோன்றியது. என்னதான் என் பழைய இதயம் நோய்வாய்ப்பட்டிருந்தாலும் அதுதான் என்னை 22 வயது வரைக்கும் உயிருடன் வைத்திருந்தது. என் வாழ்க்கையில் பல விஷயங்களை நான் கண்ணாடி ஜாடிக்குள் பார்த்திருக்கிறேன். ஆனால், என்னுடைய இதயத்தையே இப்படி கண்ணாடி ஜாடிக்குள் பார்ப்பேன் என நான் நினைத்தது கிடையாது. இந்த அனுபவம் எனக்கு வார்த்தைகளால் விவரிக்க முடியாத உணர்வுகளை அளிக்கிறது. தற்போது என் உடலில் உள்ள புதிய இதயத்தை நான் மிகவும் பாதுகாப்பாகப் பார்த்துக்கொள்கிறேன். அதற்குத் தேவையான பல உடற்பயிற்சிகள் மற்றும் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்கிறேன்” என்றார்.

உடல் உறுப்பு தானம் மூலம் மாற்று இதயம் பெற்ற ஜெனிபர் சுடன் தற்போது உடல் உறுப்பு தானங்கள் குறித்த விழிப்புணர்வை மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com