இவர்கள் கடவுளின் தூதர்கள்! தேசிய மருத்துவர் தினம் ஜூலை 01, 2024

Doctors day...
Doctors day...

ருத்துவர்களின் அர்ப்பணிப்பு, மக்களின் உடல் நலத்தைப் பேணுவதில் அவர்களது தன்னலமற்ற சேவை இவற்றைப் போற்றவும், மருத்துவர்களின் முக்கியத்துவத்தை அனைவரும் உணர்ந்துகொள்ளவும், தனது வாழ்நாள் முழுவதும் மக்களுக்கான மருத்துவ சேவையில் அர்ப்பணித்த மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த மருத்துவர் திரு. பிதான் சந்திரா ராய் அவர்களின் நினைவாகவும், இந்தத் தினம், 1991ம் ஆண்டு முதல் அனுசரிக்கப்படுகிறது.

ஆரோக்கியமான மக்கள் ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு அவசியம் என்றால், கடவுளின் தூதர்களாக இருந்து அதனைப் பாதுகாக்கும் மருத்துவர்களும் இன்றியமை யாதவர்கள் அல்லவா? இந்த ஆண்டிற்கான தேசிய மருத்துவர் தினத்தை முன்னிட்டு, மருத்துவ சேவையில் பணியாற்றிவரும் அத்தனை பேருக்கும் கல்கி குழுமம் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது.

சில மருத்துவர்களை அணுகி வாசகர்களுக்கு, இந்த தேசிய மருத்துவர் தினத்தில் விழிப்புணர்வு செய்தி தருமாறு கேட்டோம்:

டாக்டர். பி.கணேஷ்: கண் மருத்துவர், சென்னை ஜெயா கண் மருத்துவமனையின் இயக்குனர்

டாக்டர். பி.கணேஷ்
டாக்டர். பி.கணேஷ்

ஐம்புலன்களில் மிக முக்கியமானது கண் பார்வை. கடவுள் மனிதனுக்குக் கொடுத்த விலை மதிப்பற்ற பரிசு இது. கவனமகப் பார்த்துக்கொள்ளுங்கள். கண் பார்வையற்றோரும் இவ்வுலகைக் காண கண் தானம் செய்யுங்கள்.

டாக்டர். ஹேமா கண்ணன்: அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தில் முடக்கு வாதம் சம்பந்தமான நிபுணர் (Rheumatologist )

டாக்டர். ஹேமா கண்ணன்
டாக்டர். ஹேமா கண்ணன்

இன்றைய நவீன மருத்துவத்தில் மூட்டு வலிக்கு (Arthritis) நல்ல சிகிச்சை அளித்து வாழ்க்கைத் தரத்தை உயர்த்த முடிகிறது. அதனால் மூட்டு வலி பாதிப்புக்களிலிருந்து நல்ல நிவாரணம் கிடைக்கிறது. மருத்துவர்களின் ஆலோசனைப்படி, தரமான சிகிச்சையைத் தொடர்வதோடு, ஹெல்த்தியான உணவு, மற்றும் ஆரோக்கியமான மன நலம் இவை மிக அவசியம்.

டாக்டர்.சாமுவேல்: Diabetologist, எம்.வி டயபடிக் சென்டர், சென்னை

டாக்டர்.சாமுவேல்
டாக்டர்.சாமுவேல்

இன்றைய காலகட்டத்தில், நீரழிவு, இதய நோய்கள், கேன்சர் போன்றவை அதிரித்து வருகின்றன. நோயற்ற, ஆரோக்கியமான, உற்சாகமான வாழ்க்கைக்கு, உடலுக்கு சரியான உணவு, உடற்பயிற்சி, நல்ல தூக்கம், மன அழுத்தம் இல்லாமல் பார்த்துக்கொள்ளுதல், தேவையான மருந்துகளை தவறாமல் உட்கொள்ளுதல் போன்றவை அத்தியாவசியம். ஒரு நாட்டின் முன்னேறத்திற்கு ஆரோக்கியமான மக்கள் வேண்டுமல்லவா?

டாக்டர் ஜே.பாஸ்கர்: நரம்பியல் நிபுணர் மற்றும் சரும மருத்துவர் Neurologist, Dermatologist

டாக்டர் ஜே.பாஸ்கர்
டாக்டர் ஜே.பாஸ்கர்

உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை படர்ந்திருக்கும் பெரிய உறுப்பு நமது ‘சருமம்’.

உடலின் உள்ளே ஏற்படும் மாற்றங்களை, வெளியில் கண்ணாடிபோலக் காட்டவல்லது சருமம். உடலுக்கு அழகையும், பொலிவையும், பாதுகாப்பையும் தந்து, உடல் வெப்ப நிலையை, சிறுநீரகத்துடன் சேர்ந்து, பாதுகாப்பான அளவில் வைக்கிறது. அதனைக் கண்ணும் கருத்துமாய்ப் பாதுகாப்பது நமது கடமை.

மருத்துவ ஆலோசனையில்லாமல், சருமத்தின் மீது எந்த களிம்பையும், லோஷனையும், ஆயின்மெண்டையும் உபயோகிக்காதீர்கள். அழகு செய்வதற்காக சருமத்தின் இயற்கைத் தன்மையைக் கெடுத்துவிடாதீர்கள். அன்றாட உணவில் பழங்கள், காய்கறிகள் சேர்த்து, நிறையத் தண்ணீர் குடியுங்கள். உங்கள் சரும ஆரோக்கியம், உங்கள் கையில்.

டாக்டர் வி. அலமேலு: Plastic surgeon

டாக்டர் வி. அலமேலு
டாக்டர் வி. அலமேலு

இன்று மனிதரின் சராசரி வயது 70 ஆகிவிட்டது. முதியவர்களும் ஆரோக்கியமாக வாழத் தெரிந்து கொண்டிருக்கிறார்கள். இதற்குக் காரணம் நவீன மருத்துவத்தை அதை மிகத் திறமையாகக் கையாண்டு நம்மை நோயின் பாதிப்பிலிருந்து விடுபட வைக்கும் மருத்துவர்களே. கூகுள் போன்ற இணைய தளங்களைப் பார்த்து குழப்பிக்கொள்ளாமல், எந்தப் பிரச்னை வந்தாலும் மருத்துவர்களை நாடுங்கள். அவர்களிடம் மனம் விட்டுப் பேசுங்கள். அவர்கள் தரும் அறிவுரைகளைப் பின்பற்றுங்கள்.

டாக்டர் வி.ஸ்ரீனிவாஸ்: Geriatrician - Co Founder and Director of Gericare, Chennai

டாக்டர் வி.ஸ்ரீனிவாஸ்
டாக்டர் வி.ஸ்ரீனிவாஸ்

மூத்த குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் விதமாக, அவர்களின் உடல் நலம், மன நலம், அறிவாற்றல் மேம்பாடு, சமூக மற்றும் மனம் சார்ந்த பிரச்னைகளை சரிவர கண்காணித்தல், குடும்பத்தினரின் ஒத்துழைப்பு இவற்றில் கவனம் செலுத்துகிறோம்.

Assisted Senior Living Care மூலமாக, மூத்த குடிமக்களுக்கு தகுந்த மருத்துவ சிகிச்சை வழங்குவதோடு, நோய்த் தொற்று எதுவும் இல்லாமல், வீட்டு சூழ்நிலையில் அவர்கள் நிம்மதியாக விரைவில் குணமடையும்படியும் மிக கவனத்துடன் பார்த்துக்கொள்கிறோம்.

டாக்டர் புவனேஸ்வரி ராஜேந்திரன்: Clinical Neurophysiologist, காவேரி மருத்துவமனை, சென்னை

டாக்டர் புவனேஸ்வரி ராஜேந்திரன்
டாக்டர் புவனேஸ்வரி ராஜேந்திரன்

மனதளவிலும் உடலளவிலும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று உறுதியாக இருங்கள். உடல் நலம், மன நலம் இரண்டும் ஒன்றையொன்று சார்ந்தது. ஒன்று பாதித்தால் இன்னொன்றும் நலம் கெடும். எனவே, கவனமாக இருந்து தரமான வாழ்க்கை நலம் காணுங்கள்

டாக்டர் சதீஷ் குமார்: Head & Senior Consultant Neurophysician Apollo Speciality Hospitals OMR Perungudi

டாக்டர் சதீஷ் குமார்
டாக்டர் சதீஷ் குமார்

மருத்துவர்களின் அபார திறமை, மற்றவர்களின் உடல் நலத்துக்காக அவர்களின் அளவிட முடியாத அர்ப்பணிப்பு, நோயாளிகளிடம் பரிவுடன் இருக்கும் மனப்பாங்கு போன்றவற்றால், மருத்துவர்களை கடவுளின் தூதர்கள் என்றே சொல்லலாம். அவர்கள், ஒவ்வொரு நோயாளிக்கும் அவர்களது இதயத்துக்கும் வாழ்க்கைக்கும் நெருக்கமானவர்கள்.

சூரிய வெளிச்சம், தூய்மையான காற்று, உடற்பயிற்சி, சரிவிகித உணவு இவையே நம் உடல் மற்றும் மன நலத்துக்கு அவசியமானவை.

டாக்டர் பார்த்தசாரதி: General Physician

டாக்டர் பார்த்த சாரதி
டாக்டர் பார்த்த சாரதி

புகை பிடித்தலை உடனே நிறுத்துங்கள். உப்பு, சர்க்கரையைக் குறையுங்கள். வாரத்தில் 5 நாட்களுக்காவது வேகமான நடைப் பயிற்சி (150 நிமிடங்களுக்கு), 7 மணி நேரத் தூக்கம், மன அழுத்தமின்மை, ஜங்க் உணவுகளை அறவே தவிர்த்தல் இவையெல்லாம் நோய்கள் வராமல் தடுக்கவும், உடல் எடை கூடாமல் இருக்கவும் அவசியம். தேவைகளைக் குறைத்தல் மூலம், ‘மனத்தின் எடை’யும் கூடாமல் பார்த்துக்கொள்வது அவசியம்.

மொபைல் ஃபோனில் அதிக நேரம் செலவிடாதீர்கள். தினமும் ஒரு மணி நேரமாவது நல்ல புத்தகங்களைப் படியுங்கள். யோகா, தியானம் இவற்றில் தவறாமல் ஈடுபடுங்கள்.

டாக்டர் சுஜய் சுசிகர்: புற்று நோய் மருத்துவர், காவேரி மருத்துவமனை, சென்னை.

டாக்டர் சுஜய் சுசிகர்
டாக்டர் சுஜய் சுசிகர்

புற்றுநோய் ஒரு மோசமான நோய்தான். ஆனால், ஆரம்பத்திலேயே கண்டறிந்தால், நிச்சயமாக குணப்படுத்த முடியும். பாதிப்பு எற்பட்டாலும்கூட, இன்றைய நவீன அறுவை சிகிச்சை முறைகள், மருந்துகள் மூலம் நீண்ட, தரமான வாழ்க்கைப் பயணத்தைத் தொடர முடியும். ஆரம்ப நிலையில் கண்டுபிடித்தல் முக்கியம்.

டாக்டர் டி. ஸ்மிதா: Physiotherapist, (Masters, Physiotheraphy)

டாக்டர் டி. ஸ்மிதா
டாக்டர் டி. ஸ்மிதா

எலும்பு முறிவு மற்றும் நரம்பியல் தொடர்பான பாதிப்புக்களில் இருந்து சிகிச்சை பெற்றவர்களுக்கு, அது தொடர்பான மறுவாழ்வு (Rehabiliation) அவசியம். பிசியோதெரபி மூலம், நல்ல முன்னேற்றம் அடைந்து சுதந்திரமாக வாழவும், வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் முடியும். உடலின் எந்தப் பகுதியில் பிரச்னை என்றாலும் சரி செய்ய நம் மருத்துவர்கள் இருக்கிறார்கள். அவர்களை அணுகி, சிகிச்சை எடுத்து, உடல், மனம் இரண்டும் நலம் பெற்று வாழ்வோம்.

டாக்டர் .ராமசுப்ரமணியன்: INFECTIONS DISEASE ( CAPSTONE CLINIC )

டாக்டர் .ராமசுப்ரமணியன்
டாக்டர் .ராமசுப்ரமணியன்

மருத்துவர் தினத்தில், நான் சொல்ல விரும்புகிற கருத்துக்கள் இவைதான். தானாகவே மருத்துவம் செய்து கொள்ளாதீர்கள். தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள். ஆரோக்கியமான உணவை உட்கொள்ளுங்கள். புகை பிடித்தல், மது அருந்துதல், தூக்கம் இல்லாமல் கண் விழித்தல், இவற்றை அறவே தவிர்த்து விடுங்கள். உங்களுக்குத் தேவைப்படும் தடுப்பூசிகளை மருத்துவர் ஆலோசனைப் படி போட்டுக் கொள்ளுங்கள். மன அழுத்தம் இன்றி இருப்பது மிக அவசியமானது. பொறுப்புடன் இருந்து உடல் நலம் பேணுங்கள்.

டாக்டர். மீரா ராகவன்: Consultant Urogynaecologist and Robotic Surgeon Apollo Hospitals and The Chennai Speciality Klinic

டாக்டர். மீரா ராகவன்
டாக்டர். மீரா ராகவன்

பெண்களுக்கு, மெனோபாஸ் க்குப் பிறகு நீண்ட, ஆரோக்கியமான வாழ்க்கைக்கு,  உடலை சரிவரப் பராமரித்தல் மிக மிக அவசியம். எடை, ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் லெவல் இவற்றை அடிக்கடி சோதனை செய்து கொள்ள வேண்டும். அல்ட்ரா சவுண்ட் சோதனைகள் மட்டுமின்றி மார்பக புற்றுநோய் வராமல் தடுக்க, மமோகிராம் செய்து கொள்ள வேண்டும். எதுவுமே  ஆரம்பத்தில் கண்டறிந்தால் நல்லதல்லவா?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com