

உலகெங்கும் தற்போது பள்ளிக் குழந்தைகளின் ஆரோக்கியக் குறைபாடுகளுக்குக் காரணமாக இருப்பது அவர்களின் திரை நேரமும், தவறான உணவுப் பழக்கங்களால் ஏற்படும் குழந்தைகளின் உடல் பருமன் பிரச்னைகளும்தான். அதிகரித்து வரும் இந்த ஆபத்தான விஷயங்களைத் தவிர்க்க பல நாடுகள் முயற்சித்து வருகின்றன. சீனாவின் பள்ளிக் குழந்தைகளின் மனநலம் மற்றும் படிக்கும் ஆற்றலை அதிகரிக்க, மூளையின் வளத்தை அதிகரிக்க குழந்தைகளின் திரை நேரத்தை குறைத்து, உடல் இயக்கத்தை அதிகரிக்க தினமும் இரண்டு மணி நேரம் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டிற்கு முக்கியத்துவம் தரச்சொல்கிறார்கள். இரவில் அதிக நேரம் தூங்க வலியுறுத்துகிறார்கள்.
தினமும் 5 காய்கறிகள் மற்றும் பழங்களை குழந்தைகளின் உணவில் கட்டாயம் சேருங்கள். இது அவர்களின் வளர்ச்சி, ஆற்றல் மற்றும் அவர்களின் ஆரோக்கியம் காக்கும். குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு சத்தான ஆகாரம் அவசியம். மூளை வளர்ச்சிக்கு உதவக்கூடிய ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்கள் நிறைந்த கடல் உணவுகள், ப்ளாக்ஸ் சீட்கள், நட்ஸ்கள், சோயா பீன்ஸ், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகள் என அனைத்தையும் கொடுக்க வேண்டும். குழந்தைகளின் மூளையை பாதிக்கும் பாஸ்ட் புட்களை தவிர்க்க வேண்டும்.
டிஜிட்டல் யுகத்தில் எங்கு திரும்பினாலும் டிஜிட்டல் சாதனங்களே அதிகம் உள்ளன. இவற்றைப் பயன்படுத்தி கற்கும்போது குழந்தைகள் சிறப்பாகக் கற்றுக்கொள்ள முடியும் என்பது உண்மைதான். ஆனால், அதன் அதிகப் பயன்பாடு தூக்கம், உருவாக்கும் திறன் போன்ற பிரச்னைகளை குழந்தைகளுக்கு ஏற்படுத்துகின்றன. எனவே, திரை நேரம் சரியாக இருக்க வேண்டும். அதிக திரை நேரம் மூளை வளர்ச்சியைக் கெடுக்கும். தினமும் இரண்டு மணி நேரம் மட்டுமே அவர்களது திரை நேரம் என்று ஒதுக்கி அதனை கண்காணித்து வாருங்கள்.
தினமும் ஒரு மணி நேரம் அவர்களை திறந்தவெளியில் விளையாட அல்லது உடற்பயிற்சி செய்ய வலியுறுத்தி வாருங்கள். குழந்தைகளுக்கு தினமும் உடற்பயிற்சி கட்டாயம். அது அவர்களின் உடல் வளர்ச்சிக்கு மட்டுமல்ல, மூளை வளர்ச்சிக்கும் உதவுகிறது. உடற்பயிற்சி உடல் முழுவதும் ரத்த ஓட்டத்தை சீராக்கி குழந்தைகள் பலமாகவும், ஆரோக்கியமாகவும், ஃபிட்டாகவும் வளர உதவுகிறது. எனவே, உடற்பயிற்சி, யோகா போன்ற ஏதாவது ஒரு பயிற்சியை குழந்தைகளுக்கு கட்டாயம் பழக்குங்கள்.
தாகத்தைத் தணிக்க தண்ணீர் மட்டுமே எடுத்துக்கொள்ள அறிவுறுத்துங்கள். ஒருபோதும் குளிர்பானங்கள் கொடுக்காதீர்கள். ஒரு நாளைக்கு 1.5 லிட்டர் மற்றும் அதற்கும் குறைவாக தண்ணீர் குடிப்பது மன அழுத்தத்தை அதிகரிக்கிறது என்பதை லிவர்பூல் ஜான் மோர்ஸ் பல்கலைக்கழக ஆய்வில் கண்டறிந்துள்ளனர். குறைவாக தண்ணீர் குடிப்பவர்கள் உடலில் கார்டிசோல் 50 சதவீதம் மற்றவர்களை விட அதிகமாக சுரக்கிறது. இதுவே மன அழுத்தத்திற்குக் காரணமாகிறது என்கிறார்கள்.
நாளடைவில், இதுவே சர்க்கரை நோய் மற்றும் இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது என்கிறார்கள். நீர்ச்சத்து குறைபாடு ‘வாசோபிரஸ்சின்’ (Vasopresin) எனும் ஹார்மோனை மூளையில் தூண்டி அது மூளையின் ஹைபோதலமாஸ் பகுதியில் கார்டிசோலை உருவாக்குகிறது. இதனை 'ஸ்ட்ரெஸ் ஹார்மோன்’ என்கிறார்கள்.
பொதுவாக, ஆழ்ந்து தூங்குவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்பார்கள். ஆனால், ஞாபக சக்தி ஆற்றலுடன் இருக்கவும் ஆழ்ந்த தூக்கமே உதவுகிறது என்கிறார்கள் கார்னெல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். குழந்தைகளின் தூக்கத்திற்கும், உடல் பருமனுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. பள்ளிப் பாடத்தின் சுமை காரணமாக குழந்தைகள் பலர் தூக்கத்தை குறைத்துக் கொள்கின்றனர். அதிக மதிப்பெண்கள் பெற நினைக்கும் சிறுவர்களும் தூக்கத்தைக் குறைத்து கொள்கின்றனர். இதனால் அவர்களின் உடல் எடை அதிகரிக்கிறது.
ஐந்து வயதிற்கும் குறைவான குழந்தைகள் குறைந்தபட்சம் 9 மணி நேரம் தூங்க வேண்டும். 5 முதல் 10 வயதுள்ளவர்கள் குறைந்தபட்சம் 8 மணி நேரம் தூங்க வேண்டும். 10 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் குறைந்தபட்சம் 7 மணி நேரம் தூங்க வேண்டும். இதை விட குறைவாக தூங்குபவர்களின் உடல் எடை அதிகரிக்கும் என்பதை பல்வேறு ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. நன்றாகத் தூங்கி எழும் சிறார்கள் ஓடியாடுவதால் அவர்களின் உடல் எடை அதிகரிக்காது. குழந்தைகளின் உடல் எடை கச்சிதமாக இருக்க வேண்டுமானால் அவர்களை நன்றாகத் தூங்க வைக்க வேண்டியது பெற்றோரின் கடமை.