மாங்காடு அருள்மிகு காமாக்ஷி அம்மன் கோயிலில் திருவாடிப்பூரம் வைபவம்!

மாங்காடு அருள்மிகு காமாக்ஷி அம்மன் கோயிலில் திருவாடிப்பூரம் வைபவம்!
Published on

சென்னை, புறநகர்ப் பகுதியான மாங்காட்டில் அமைந்துள்ளது அருள்மிகு காமாக்ஷி அம்மன் திருக்கோயில். அம்மனின் திருநட்சத்திரமான பூரம் தினத்தை ஒட்டி இக்கோயிலில் இன்று ஆடிப் பூரம் வைபவம் வெகு சிறப்பாக நடைபெற்றது. ஆடிப் பூரம் விழாவை முன்னிட்டு இன்று அதிகாலை கோயிலில் கோபூஜை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து காமாக்ஷி அம்மனுக்கு விசேஷ ஹோமம், மஹா சங்கல்பம் மற்றும் மஹாபூர்ணாஹூதி ஆகியவை நடைபெற்றன. இந்த ஹோமத்தில் 1008 கலசம் வைத்து பூஜிக்கப்பட்டு, அம்மனுக்குக் குளிரக் குளிர சிறப்பு அபிஷேகம் செய்விக்கப்பட்டது.

முன்னதாக, கடந்த 20ம் தேதி அம்மனுக்கு 1008 கலசம் ஸ்தாபிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து முதல் கால பூஜை ஆரம்பமானது. அதையடுத்து, நேற்று காலை ஆரம்பித்த இரண்டாம் கால பூஜையைத் தொடர்ந்து, மாலை மூன்றாம் கால பூஜையும் நிறைவடைந்தது.

அருள்மிகு காமாக்ஷி அம்மனுக்கு நடைபெற்ற இந்த ஆடிப் பூரம் வைபவத்தில் திருக்கோயில் முக்கியஸ்தர்களும் பொதுமக்களும் கோயில் பணியாளர்களும்  பெருமளவில் கலந்து கொண்டு அம்மனின் அருள் பெற்றனர். இன்று கோயிலுக்கு வந்து அம்மனை தரிசித்த அனைத்து பக்தர்களுக்கும் வழக்கமான பிரசாதங்களோடு, காமாக்ஷி அம்மன் பூஜையில் வைத்து பூஜிக்கப்பட்ட கண்ணாடி வளையல்களும் பிரசாதமாக வழங்கப்பட்டன. திருமண பாக்கியம், குழந்தைப் பேறு, நீடித்த மாங்கல்ய பாக்கியம் போன்றவற்றைத் தரவல்ல அம்மனின் இந்த பிரசாதங்களை பக்தர்கள் மகிழ்ச்சியோடும் பக்தியோடு வாங்கிச் சென்றனர்.

இந்த நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து, இன்று மாலை 6.30 மணிக்கு மேல், புஷ்ப அலங்கார பல்லக்கில் அருள்மிகு காமாக்ஷி அம்மனின் மாட வீதி உலா வைபவமும் நடைபெற உள்ளது. தீராத வினைகளைத் தீர்த்துவைக்கும் கருணைக் கடலாம் மாங்காடு அருள்மிகு காமாக்ஷி அம்மனை வழிபட்டு வாழ்வில் சகல சம்பத்தோடு வாழ்வோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com