தொட்டபுரம் விஸ்வரூப ஆஞ்சநேயர்!

தொட்டபுரம் விஸ்வரூப ஆஞ்சநேயர்!
Published on

ரோடு மாவட்டம் தாளவாடி அருகே 46 அடி உயரத்தில் விஸ்வரூப கோலத்தில் காட்சி தரும் ஆஞ்சநேயர் கோவிலில் கடந்த மார்ச் மாதம் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது என அறிந்தேன். ஆஞ்சநேயர் பக்தனான எனக்கு அந்த கோவிலுக்கு சென்று சுவாமியை தரிசிக்க வேண்டும் என ஆவல் பிறந்தது. சமீபத்தில் தாளவாடி சென்று விட்டு திரும்பும் வழியில் தொட்டபுரம் மலை கிராமத்தில் அமைந்துள்ள அந்தக் கோவிலுக்கு சென்றேன். இது வரை 18 அடி உயர நாமக்கல் ஆஞ்சநேயர் மற்றும் சுசீந்திரம் தாணுமாலய சுவாமிகள் கோவிலில் உள்ள  18 அடி உயர ஆஞ்சநேயர், 32 அடி உயர நங்கநல்லூர் ஆஞ்சநேயரை தரிசனம் செய்திருக்கிறேன். இந்த விஸ்வரூப ஆஞ்சநேயர் வித்தியாசமான கோலத்தில் அருள் பாலிக்கிறார்.

தாளவாடியில் இருந்து தலைமலை செல்லும் வழியில் உள்ளது தொட்டபுரம் மலைக் கிராமம். சுற்றிலும் செந்தூர வண்ணத்தில் வேலி போடப்பட்டிருந்த கோவிலினுள் நுழைந்ததும் பெருமானின் பெரிய திருஉருவச் சிலை நம்மை வரவேற்கிறது. 46 அடி உயரத்தில், விஸ்வரூப கோலத்தில் கம்பீரமாகக் காட்சி தரும் ஆஞ்சநேயரைக் காண்கையில் பிரமித்து நின்றுவிட்டேன். பக்திப் பரவசத்தில் திளைத்தது நெஞ்சம். 

உலகில் எங்கும் இல்லாத வடிவில் இந்த ஆஞ்சநேயர் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது என்கிறார்கள். இந்த சுவாமிகளின் பெயர் விஸ்வரூப ஸ்ரீ ருத்ர ஜெய வீர ஆஞ்சநேயர். சிலையின் தலைப்பகுதிக்கு மட்டும் தகரத்தால் ஆன கூரை வேயப்பட்டு உள்ளது. தனது கைகளில் ராமர் பாதுகையை ஏந்தியபடி அழகுற நிற்கிறார் ஆஞ்சநேயர். இடுப்பில் நீளமான கத்தியும், காலடியில் கதாயுதமும் இருக்கிறது. சனி பகவானின் மாந்தன் ஆஞ்சநேயர் பாதத்தில் தஞ்சம் அடைந் துள்ளவாறு அமைக்கப்பட்டு உள்ளது. அதன் மேல் அமர்ந்தவாறு ஆஞ்சநேயரின் வால் பகுதியை தலையில் சுமந்து, தன் இரு கைகளாலும் பற்றியவாறு  வாராகி அம்மன் சிலையும் உள்ளது.

முன்பு இந்தக் கோவிலில் இருந்த பழைய மூர்ததமான சிறிய அனுமன் சிலையும் தனி சன்னதியில் இருக்கிறது. சிவன் கோவில்களில் ஈசன் சிலைக்கு முன் நந்தி சிலை வீற்றிருப்பதைப் போல, இங்கே சிறிய அனுமன் சிலைக்கு முன் கொம்புகளை உடைய கலைமான் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த கோவிலில் விநாயகர் சிலை, கிருஷ்ணன் ராதா சிலைகளும் உள்ளன. கருப்பண்ணசாமி, வீரபத்திரர், முனீஸ்வரர், போன்ற உக்கிரமான காவல் தெய்வங்களைப் போல ஆயிரம் கைகளை கொண்டு, பக்தர்களை காக்கக் கூடியவர் கார்த்த வீர்யார்ஜுனர். 50 கைகள் கொண்டு 50 வகை ஆயுதங்களுடன் சுதர்சன ஆழ்வார் காத்த வீரிய அர்ஜுனர் சிலையும் இங்குள்ளது குறிப்பிடத்தக்கது. பொதுவாக இருகைகளும் கூப்பிய நிலையில் தான் ஆஞ்சநேயரின் திரு உருவச் சிலைகள் அமைக்கப் பட்டிருக்கும். இந்தக் கோவிலின் அமைப்பும், இங்குள்ள சிலைகளும் புதுமையான வடிவில் அமைக்கப்பட்டு ஆச்சரியமளிக்கின்றது.

இயற்கையுடன் இணைந்த மலையக அனுமன் தரிசன யாத்திரைப் பயணத்தில் வன விலங்குகளான யானைகள், மான்கள், வராஹம் எனும் காட்டுப்பன்றிகள், உடும்பு என ஏராளமானவை கண்ணிற்கு விருந்தளித்தன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com