
‘படைக்கு பயப்படாதவன் கூட பாம்புக்கு பயப்படுவான். பாம்புக்கு பயப்படாதவன்கூட பேய்க்கு பயப்படுவான்’ என்று சிலர் கூறுவர். அதுபோல நாம் வசிக்கும் வீடுகளில் துஷ்ட சக்திகள் இருக்கிறதென்று தெரிந்து விட்டால் அந்த வீட்டில் அமைதி இருக்குமா? அல்லது சந்தோஷம்தான் நிலைக்குமா? சரி, ஒரு வீட்டில் துஷ்ட சக்தி இருக்கிறது என்பதை எப்படி அறிந்துகொள்வது?
குடும்பத்தில் ஒருவருக்கொருவர் கருத்து வேறுபாடுகளோடு இருத்தல், ஓயாமல் சண்டை-சச்சரவுகள், யாருமே வீட்டுக்கு வரத் தயங்குதல், எதிலும் மனத் திருப்தி இல்லாதிருத்தல், இரவில் தூக்கம் வராமல் தவித்தல், அப்படியே தூக்கம் வந்தாலும் அதில் கெட்ட கனவுகள் தோன்றுதல், பல காலமாக இருந்த மரம் அல்லது அதன் கிளைகள் காரணமின்றி தானாகவே ஒடிந்து விழுதல், நாய் ஊளையிடுதல், ஏற்றி வைத்த தீபம் காற்றே இல்லாத நிலையிலும் அணைந்துபோதல், வீட்டில் எந்த ஒரு நல்ல செயலைச் செய்தாலும் அதில் தடங்கல் ஏற்படுதல் போன்றவைகளே அந்த வீட்டில் ஏதோ ஒரு அமானுஷ்ய சக்தி இருக்கிறது என்பதை உணர்த்துகிறது.
அது சரி… துஷ்ட சக்தி அப்படிங்கிறது என்னவென்றால், மனம் போன போக்கில் வாழ்க்கை நடத்துவது, அந்த வாழ்க்கை மற்றவர்களின் கண்களை உறுத்துவது, பொறாமைப்பட வைப்பது, மனம் வெதும்ப வைப்பதே துஷ்ட சக்திகளாகும். இதன் காரணமாக ஒருவரின் எதிரிகளோ அல்லது வேண்டாதவர்களோ செய்யும் சில வேண்டாத செயல்கள் அல்லது அவர்களின் தீய எண்ணங்கள் துஷ்ட சக்திகளாக மாறி நம்மை பாதிக்கத்தான் செய்யும்.
இந்த துஷ்ட சக்திகளிலிருந்து விடுபடுவது என்பது மிகவும் சுலபம்தான். அதாவது, தினசரி வீட்டு வாசலில் தண்ணீர் தெளித்து கோலம் போடுவது, சூரிய உதய- அஸ்தமன நேரத்தில் தெய்வ சன்னிதியில் விளக்கேற்றி, வீட்டில் மணியடித்து பூஜை செய்வது, குழந்தைகளின் சிரிப்புச் சத்தம் வீட்டில் கேட்கச் செய்வது, மந்திர ஒலிகளை வீட்டில் ஒலிக்கச் செய்வது, அடிக்கடி பலரும் வீட்டுக்கு வந்து உணவருந்தி ஆசி வழங்குவது என்பதாக வசிக்கும் வீட்டின் சூழ்நிலையை அமைத்துக்கொண்டால் அந்த வீட்டில் உள்ள துஷ்ட சக்திகளினால் யாருக்கும் எந்த ஒரு பாதிப்பும் ஏற்பாடது. மற்றவரின் பொறாமையும் சூன்யமும் உங்களை ஒருபோதும் அண்டாது. அதோடு, உடலைத் தூய்மையாக வைத்திருந்தல், தூய்மையான ஆடை அணிதல், மனதில் மகிழ்ச்சியோடு இருத்தல், குறிப்பாக, வீட்டுப் பெண்கள் அழாமல் மகிழ்சியுடன் இருந்தாலே போதும். துஷ்ட சக்திகள் ஒரு வீட்டிலிருந்து வெளியேறி நிம்மதி கிடைக்கும்.