
ஒவ்வொரு ஊருக்கும் ஒரு தனிச்சிறப்பு இருக்கும். அந்த ஊர் பெயரை சொன்னாலே நம் கண் முன்னே பிரம்மாண்டமாக வந்து நிற்பது அதுவாகவே இருக்கும். திருவாரூர் என்று உச்சரித்த உடனே ஆத்திகம், நாத்திகம் என்ற பாகுபாடில்லாமல் அனைவரும் பேசுவது 'ஆழித் தேர்' பெருமைகளைப் பற்றியே.
தமிழ்நாடு முழுவதும் உள்ள சிறிய பெரிய கோயில்கள் அனைத்திலும் சிறப்பான, முக்கிய நாளாக கருதப்படுவது தேரோட்டம் நடக்கும் நாளே. மற்ற ஊர்களில் ஒரு நாள் இரண்டு நாள் அதிகபட்சமாக ஒரு வாரத்திற்குள் அந்த
தினத்திற்கான ஏற்பாடுகள் நடைபெறும். ஆனால் ஆரூரில் சுமார் ஒரு மாதத்திற்கு முன்பே வேலைகள் தொடங்கி விடும். தேர் கட்டுமான பணிகள் தொடங்கிய உடனே போக்குவரத்து மாற்றியமைக்கப்படும். உள்ளூர் வாசிகள் மட்டுமல்லாமல் அவ்வழியாக செல்லும் வெளியூர் வாசிகளும் 'வாசி வாசி' என்று சிவபெருமானை வாசித்து சுவாசித்து செல்வார்கள்.
பரந்து விரிந்து பிரம்மாண்டமாக இருப்பதால் 'ஆழித் தேர்' என்று அழைக்கப்படுகிறது. நவீன தொழில்நுட்ப வசதிகள் இல்லாத காலத்தில் மனித உழைப்பினால் மட்டுமே இந்த பிரம்மாண்டமான தேர் உருவானது. பன்னிரு திருமுறையில் திருநாவுக்கரசர் "ஆழித்தேர் வித்தகனை நான்கண்ட தாரூரே’’ என்று போற்றிப் பாடியுள்ளார். 1000 கணக்கான ஆண்டுகளாக தேரோட்டம் நடந்து வருவது என்பதற்கு இதுவே சான்று.
நட்பின் பெருமைகளை போற்றும் தலம் ஆரூர் ஆகும். சிவபெருமானுக்கும் சுந்தரமூர்த்தி நாயனாருக்கும் இடையே இருந்த அன்னியோன்னியமான நட்பை இந்த தலத்துக்கு சென்று நாம் காணலாம். 'நட்புக்காக' இறைவனே சுந்தரர் காதலுக்கு தூது சென்ற வரலாறை படித்துப் பார்க்கும் போது நட்பு எவ்வளவு மேன்மையானது என்று மெய் சிலிர்க்க உணர முடியும்.
"உறவு கோல் நட்டு உணர்வு கயிற்றினால்
முறுக வாங்கிக் கடைய முன் நிற்குமே..." - என்று
பன்னிரு திருமுறையில் அப்பர் பெருமான் பாடியுள்ளார்.
கடவுளை வணங்குவதற்கு சகோதரத்துவ உறவு அல்லது நட்புறவை உருவாக்கிக் கொள்வதோடு அந்த உறவைக் கொண்டு கடவுளோடு தொடர்பு கொண்டால் கடவுள் அந்த உறவை நிச்சயம் ஏற்றுக் கொள்வார் என்று பொருள்.
நட்பின் அடுத்த கட்டமாக என் நண்பனின் நண்பன் எனக்கும் நண்பனே' இயக்குனர் சமுத்திரக்கனி மூலமாக அனைவருக்கும் புரிய வைத்தவர் சிவபெருமான் தான்.
திருவம்பர் மாகாளம் என்ற ஊரில் வாழ்ந்தவர் சோமாசி மாற நாயனார். அவர் தான் நடத்த இருக்கும் யாகத்திற்கு ஆரூர் தியாகராஜர் வந்து அவிர்பாகம் பெற வேண்டும் என்று நினைத்தார். இறைவனின் நண்பன் சுந்தரர் மூலமாக தன் விருப்பத்தை தெரியப்படுத்தினார். தனது நெருங்கிய நண்பனின் நண்பனை சந்தோஷப்படுத்த தான் வருவதாக வாக்கு கொடுத்தார். அதுதான் வைகாசி ஆயில்ல நட்சத்திர நாளில் திருமாகாளம் கிராமத்தில் வருடந்தோறும் நடந்து வரும் சோம யாக பெருவிழா.
திருவாரூர் கோயிலில் உள்ள மிக முக்கியமான மண்டபம் 'தேவாசிரியன் மண்டபம்'. ஆயிரங்கால் மண்டபம் என்றும் அழைப்பர். சுந்தரர் வாழ்ந்த காலத்தில் ஒரு நாள் இங்கு அடியார்கள் பலர் கூடியிருப்பதை பார்த்தவர் இவர்களுக்கெல்லாம் நான் அடியவனாகும் நாள் எந்நாளோ...என்று எண்ணியபடி இறைவன் முன் சென்று நின்றார். அவரின் கருத்தறிந்து
இறைவன் அவர்களை பணிந்து பாடும் படி சொல்லி... "தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்.." முதலடி எடுத்துக் கொடுத்தார். பின்னர் தொடர்ந்து சுந்தரர் பாட 'திருத்தொண்டத் தொகை’ உருவானது.
நட்பால் சூழ்ந்த உலகமே நல்லுலகமாகும். சாதி சமய பேதமின்றி அனைவரும் நட்பாக இருந்தால் நாடு செழிக்கும். எல்லைத்தாண்டி இந்த நட்புறவு சென்றால் பயங்கரவாதம், தீவிரவாதம் என்ற சொற்றொடர்கள் வழக்கொழிந்து போகும்.
நம் நலனுக்காக கோவிலுக்கு சென்று சிவபெருமானை வழிபடுவோம். இன்று நம் நலனை விசாரிக்க எம்பெருமான் தனது பரிவாரங்களுடன் நகர் வலம் வருகிறார். ஆழி தேரில் பவனி வரும் அவரை தரிசித்து ஆழி சூழ் உலகெல்லாம்
நட்பின் பெருமை பேச வைத்து எங்கும் அமைதி நிலவச் செய்வோம். திருச்சிற்றம்பலம்.