ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ம் தினத்தன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் பெண்களின் சாதனைகளை கொண்டாடவும், பாலின சமத்துவத்திற்கான நடவடிக்கை எடுக்க குரல் கொடுக்கும் நாள் என்றும் சொல்லலாம். இன்று பெண்களுக்கு எவ்வளவோ கருத்து சுதந்திரம் இருந்த போதும், வாழ்க்கையின் ஒவ்வொரு படியாக முன்னேற முயற்சி செய்யும்பொழுது வரும் பல தடைகளை தாண்டி தான் பெண்கள் முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த காலத்தில் குடும்பத்தை பராமரிப்பது, குழந்தைகளை பார்த்து கொள்வது, வீட்டை கவனித்துகொள்வது, வீட்டு பெரியோர்கள் சொல்படி நடப்பது என்று இருந்தனர். ஆனால் இன்று அந்தநிலையே மாறி பெண்கள் குடும்பத்தையும் பார்த்து கொண்டு, வேலைக்கு போகிறார்கள், சொந்தமாக தொழில் செய்கிறார்கள், சொத்து வாங்குவது, குடும்ப சுமையில் பங்கேற்பது, வெளியூர், வெளிநாடு பயணம் செய்வது என்று துணிச்சலாக செயல்பட்டு வருகிறார்கள். இப்படி பெண்கள் முன்னேறி கொண்டே இருந்தாலும் பெண் சுதந்திரம் கிடைத்து விட்டதாக என்று கேட்டால் இல்லை என்றே சொல்ல வேண்டும்.
பெண் சுதந்திரம், பெண் விடுதலை என்ற வார்த்தைகள் நீண்ட நாட்களாக பேசப்பட்டு வந்தாலும் உலகில் இன்னும் பெண்களை அடிமைகளாக பார்க்கும் எண்ணம் இருந்துகொண்டே தான் இருக்கிறது. ஒரு ஆண் ஜெயித்தால் குடும்பம் ஜெயிக்கும். ஆனால் ஒரு பெண் ஜெயித்தால் சமூகமே ஜெயிக்கும் என்று சொல்வார்கள்.
‘நள்ளிரவில் ஒரு பெண் என்றைக்கு கழுத்தில் நகைகள் அணிந்து பயமில்லாமல் தனியாக சாலையில் நடக்க முடிகிறதோ அன்றுதான் நாம் உண்மையான சுதந்திரத்தை அடைந்து விட்டதாக பொருள்' என்று மகாத்மா காந்தி கூறினார். தற்போதைய நிலையில் பல துறைகளிலும் பெண்கள் பல சாதனைகளை படைத்து வந்தாலும், சாமானியப் பெண்கள் தொடங்கி சாதனைப் பெண்கள் வரை வீட்டில் சுதந்திரமாக முடிவுகளை எடுக்க முடியாத நிலையில் தான் உள்ளது பெண் சுதந்திரம். அக்கறை என்ற பெயரிலும், பாதுகாப்பு என்ற பெயரிலும் பல குடும்பங்களில் பெண்களை அடிமைப்படுத்தி அவர்களின் கனவுகள் சிதைக்கப்படுகின்றன. வீட்டுக்குள் முழு சுதந்திரம் கிடைக்கும் போது தான் சமூகத்திலும் பெண்களால் சுதந்திரமாக செயல்பட முடியும்.
இன்று பெண் உரிமைக்காக ஆண்களும் இணைந்து குரல் கொடுக்கிறார்கள் என்று வைத்துக்கொண்டாலும், எத்தனை ஆண்கள் ‘என் வீட்டில் பெண்களுக்கு சம உரிமையையும், முழு சுதந்திரத்தையும் கொடுத்திருக்கிறோம்' என்று நெஞ்சை நிமிர்த்தி சொல்வார்கள்.
தாயாக, மனைவியாக, தங்கையாக, மகளாக, தோழியாக வாழ்வில் பல அவதாரங்கள் எடுக்கும் பெண்ணை பாலியல் பதுமையாய் பார்க்கும் போக்கு இன்னும் மாறவில்லை. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாள்தோறும் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது. அதுமட்டுமின்றி சமூக வலைத்தளங்களில் பெண்களை வக்கிரமாக விமர்சிக்கும் நபர்களும், பெண்ணுரிமை பேசும் பெண்களை திமிர் பிடித்தவள் என்று கூறும் சமூகத்தில்தான் நாம் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
ஒரு பெண்ணின் வெற்றிக்கு, ஆண் துணையாக நிற்கலாம். ஆனால், ஒரு பெண்ணின் வெற்றி எதைச் சார்ந்து இருக்க வேண்டும் என்பதே, அவள் உலகின் ஏதோ ஓர் ஆணால்தான் தீர்மானிக்கப்படுகிறது என்பதுதான் பெண்ணினத்தின் சாபமாகும். இன்றும் நூற்றில் ஒரு பெண்ணுக்குத்தான், விரும்பிய துறையை, வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் கிடைக்கிறது என்பதுதான் துயரமான நிதர்சனம்.
சாதனையாளர்கள் பட்டியலில் இன்று உலகமே கொண்டாடும் ஒவ்வொரு பெண்ணையும், முதலில் எதிர்த்தது, தடுத்தது பெரும்பாலும் அவளின் குடும்பமாகத்தான் இருக்கும்.
இன்று சாதிக்க வேண்டிய பெண் சக்தியெல்லாம், இன்னும் வீட்டுக்குள்ளேயே வீணாகிக்கொண்டிருக்கிறது என்பது கசக்கும் உண்மைதானே!