நாம ஸ்மரணை என்னும் மன வாயிற்காப்பாளன்!

மஹா சமாதி தினம்
மஹா சமாதி தினம்
Published on

(இன்று ஷீரடி சாயிபாபாவின் 105 ஆவது மஹா சமாதி தினம்).

உலகில் அதர்ம போக்கு  அதிகரிக்கும்போது, அதர்மத்தை ஒழித்து தர்மத்தை நிலை நாட்டவே கடவுளின் அவதாரங்கள் நிகழ்கின்றன.  மஹான்களும் மக்களுக்கு நன்மை செய்யவே தான் அவதரிக்கிறார்கள். ஸ்ரீ ஷீரடி பாபாவும் இத்தகைய அவதாரங்களில் ஒருவர் தான். இவருடைய சரிதத்தைத் தான் 'ஸ்ரீ சாயி சத் சரித்திரம்' என்னும் பெயரில் இவருடைய பக்தர்கள் பாராயணம் செய்கிறார்கள்.  சாயி பக்தர்களுக்கு இது இன்னொரு பகவத்கீதை!

ஷீர்டி சாயி சரிதம் ஒரு சத்புருஷனின் சரித்திரம்.  இது வெறும் வாழ்க்கை சரித்திரம் அன்று.  இவ்வுலக வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்ந்து கொண்டே ஆன்மீக முன்னேற்றத்தைப் பற்றி விழிப்புணர்வுடன் செயல்பட்டு இந்த மானிடப் பிறவி எடுத்ததின் பயனை அடைய வேண்டும் என்பதை கதைகள் ரூபத்தில் நமக்கு விளக்கிக் கூறும் ஒப்பற்ற சரித்திரமாகும்.  மனிதப் பிறவி எவ்வளவு அரிதானது?  பக்தியும், இறை வழிபாடும், முக்தியும் இந்த மானிடப் பிறவி முலம் தானே நமக்கு சாத்தியமாகிறது? மக்களை நல்வழிப்படுத்தத் தான் ஞானிகள், சத்புருஷர்கள் அவதரிக்கிறார்கள்.

ஓயாமல் அலையடித்து ஆர்ப்பரிக்கும் கடலைப் போன்றதல்லவா மனித மனம்? எப்போதும் எதையோ தேடி அலையும் இவ்வுலக வாழ்க்கையில் மனமும் அலை பாய்ந்து கொண்டேதான் இருக்கிறது.  மனதை அடக்கத் தான் 'தியானம்' செய்யச் சொல்கிறார்கள். ஒரு அமைதியான இடத்தில் அமர்ந்து மனதையே உற்று கவனிக்க சொல்கிறார்கள்.  மனதில் மிதந்து வரும் எண்ணங்களோடு நம்மை சம்பந்தப்படுத்திக் கொள்ளாமல் வெறுமனே வேடிக்கை பார்க்கச் சொல்கிறார்கள்.  மெதுமெதுவாக எண்ண ஓட்டம் குறைய ஆரம்பித்து எண்ணமற்ற நிலை சாத்தியப்படும்போது ஓரிரு கணங்கள் மனது அடங்குகிறது.  இந்த நிலையும் எல்லோருக்கும் கை கூடி விடுவதில்லை.

ஷீரடி சாயிபாபா
ஷீரடி சாயிபாபா

இப்பொழுதெல்லாம் பாதுகாப்பு இல்லாத கட்டிடங்கள் இல்லை.  யாரும் லேசில் எங்கேயும் நுழைந்து விட முடியாது.  உள் வாயிலில் நாய்கள் நடை பயின்று கொண்டிருக்கும்.   முதலில் ஒரு வாயிற்காப்பாளர் இருப்பார்.  எந்த இலக்கம் கொண்ட வீட்டுக்கு நீங்கள் செல்ல வேண்டும் என்று விசாரிப்பார். பிறகே வாசலின் பிரதான கதவு திறக்கும்.  சில சமயங்களில் ஒரு 'ரிஜிஸ்டரில்' கையெழுத்துப் போட வேண்டியிருக்கும்.  இதைத்தவிர கண்காணிப்பு கேமிராக்கள் இயங்கிக் கொண்டிருக்கும்.  பிறகு குறிப்பிட்ட 'ப்ளாட்'டின் வாயிலில் உள்ள அழைப்பு மணியை அழுத்தினால் உள்ளேயிருந்து 'கண்' வடிவில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி வழியே வெளியே நிற்பது யார் என்று கண்டறிந்து பிறகே தாள் திறக்கும். பிரபலங்கள் வாழும் வீடானால் முதலில் காரியதரிசியைத் தான் சந்திக்க முடியும்.  அவர் வந்திருப்பவர் அவசியம் தன் எஜமானரை சந்திக்க வேண்டுமா என்று முடிவு செய்து பின்பே எஜமானரிடம் செய்தி சொல்வார். தன் வீட்டிற்குள் யாரும் தேவையில்லாமல் நுழைந்து விடக்கூடாது என்று இத்தனை பாதுகாப்பு வளையங்கள் அமைத்து எச்சரிக்கையாக வாழும் மனிதர்கள், தங்கள் மனதிற்குள் தேவையில்லாத எண்ணங்கள் நுழையாதிருக்க என்ன பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கிறார்கள்?

சத்குரு ஷீரடி சாய்பாபா அவர்கள் 'மனித மனம் ஓடித்திரியும் இயல்புடையது' என்கிறார். மனம் புறத்தே தாவி ஓடும் தன்மையுடையது.   நாம் நம்மையே கவனித்துப் பார்த்தோமானால் நாம் ஏதோ வேலையில் ஈடுபட்டிருப்போம்.  கைகள் தான் அந்த வேலையை செய்து கொண்டிருக்குமே தவிர, மனம் எங்கோ தொலைவில் அமெரிக்காவில் உள்ள பிள்ளையைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கும்.  அல்லது யாரிடமோ ஏற்பட்ட வாக்குவாதத்தில் நம் பக்கம் உள்ள நியாயம், எதிராளி பக்கம் உள்ள அநியாயம் என்று எதையெதையோ நினைத்துப் பொருமிக் கொண்டிருக்கும்.  பத்து வருடத்திற்கு முன்பு ஏற்பட்ட ஒரு சோக நிகழ்வு, அல்லது நாளைக்கு நடக்கப் போகும் ஒன்றைப் பற்றிய கவலை என்று கால வித்தியாசங்களைக் கடந்து தாவித் தாவிச் சென்று கொண்டிருக்கும். மனதிற்குள் எண்ணங்கள் புகாமல் பார்த்துக் கொண்டால் இவைகளைத் தவிர்த்து விடலாமே என்கிறீர்களா?  அது சரி!  நாமென்ன மனதிற்கு வாயிற் காப்பாளனையா நியமித்திற்கிறோம் எண்ணங்களைத் தடுக்க?

"என்னால் முடியவில்லை.  மனம் அலை பாய்ந்து கொண்டே தான் இருக்கிறது." என்று இயலாமையில் தவிப்பவர்கள் எத்தனை பேர்?  மனதுக்குள் கெட்ட எண்ணங்கள் புக விடாமல் பார்த்துக் கொள்வதோ அதன் தொடர்ச்சியான பாவ காரியங்கள் செய்யாமல் இருப்பதோ எல்லோருக்கும் இயலுமா?  பக்தர்கள் கேட்கிறார்கள், "இதை சரி செய்யமுடியாதா பாபா?" என்று.

"ஆமாம்! இயலும்.  அதற்கு வழியிருக்கிறது!" என்கிறார் பாபா.  இதை பக்தர்களுக்கு உணர்த்துவதற்காக ஒரு கதை சொல்லப்படுகிறது ஸ்ரீ சாயி சரிதத்தில்.

சாயிபாபா
சாயிபாபா

ஒரு தடவை ஷீரடிக்கு ரோஹில்லா என்ற பெயர் கொண்ட ஒரு முரட்டு மனிதன்  வந்தான்.  பாபாவின் நற்குணங்கள் பால் ஈர்ப்பு ஏற்பட்டு அவன் அங்கேயே தங்கி விட்டான். சாயிபாபாவிடம் மட்டற்ற அன்பு கொண்டிருந்த அவன் விருப்பப்பட்ட போதெல்லாம் அது பகலோ இரவோ, அது மசூதியோ அல்லது சாவடியோ நினைத்த இடத்தில் உட்கார்ந்து குரானை ஓதி அல்லாஹோ அக்பர்! (கடவுள் பெரியவர்) என்று உரக்கக் கத்துவான்.  அவன் குரலோ கர்ண கடூரமாக இருக்கும். அவனுக்குத் தன் குரல் இனிமையாக இருக்கிறதா அல்லது கடூரமாக இருக்கிறதா, அதனால் பிறருக்குப் பாதிப்பு இருக்குமா என்பதை பற்றியெல்லாம்  கவலை இருந்ததில்லை.    அவன் ஓதுவதோ உச்சஸ்தாயியில்.  பகல் நேரத்தில் சுட்டெரிக்கும் வெயிலில் நிலத்திலும் காட்டிலும் கடுமையாக உழைத்து விட்டு வந்த கிராம மக்கள், இரவில் ரோஹில்லாவால் நித்திரை கெட்டு அவதிப்பட்டனர்.  பொறுத்துப் பொறுத்துப் பார்த்து முடியாமல் கிராம மக்கள் நேரே பாபாவிடம் சென்று ரோஹில்லாவின் தொந்திரவை நிறுத்தியருளும்படி வேண்டிக்கொண்டனர்.

ஆனால் அவர்கள் வேண்டுகோள் பாபாவின் காதுகளில் விழவேயில்லை. ஹரி நாமம்  கேட்க விரும்பாதவர்களின் வார்த்தைகளை பாபாவால் எவ்வாறு செவிமடுக்க இயலும்? 'எங்கு பக்தர்கள் என் பெருமையைப் பாடுகிறார்களோ அங்கு நான் கண் கொட்டாமல் விழித்துக் கொண்டிருக்கிறேன்!' என்பது இறைவனின் வாக்கு.

"அல்லாவின் புகழை விருப்பமுடன் பாடும் ரோஹில்லாவை நாம் ஏன் விரட்ட வேண்டும்?  உங்களுக்குத் தெரியுமா? ரோஹில்லாவுக்கு சாந்திப்பி என்னும் துர்புத்தியுள்ள மனைவி ஒருத்தி இருக்கிறாள்.  அவள் உள்ளே வர முயன்று என்னையும் ரோஹில்லாவையும் தொந்திரவு செய்ய நினைக்கிறாள்.  ஆனால் ரோஹில்லா உரக்க குரான் ஓதுவதைக் கேட்டதும் அவள் ஓடி விடுகிறாள். ஆதலால் ரோஹில்லாவை ஒன்றும் சொல்லாதீர்கள்!" என்றார் பாபா. 

ரோஹில்லா ஒரு ஆண்டி.  பிச்சை எடுத்துப் பிழைப்பவன்.  அவனுக்கேது மனைவி?  உண்மையில் ரோஹில்லாவின் மனைவி சாந்திப்பி என்ற பெயரில் பாபா குறிப்பிடடது, 'துர்புத்தி' அல்லது 'கெட்ட எண்ணங்களை'ப் பற்றி.  உரக்க நாமஸ்மரணை செய்வதும் கூச்சலிட்டுப் பிரார்த்தனைகள் செய்வதும் நம் மனதிற்கு நாம் நியமிக்கும் வாயிற்காப்பாளர்கள் என்பது பாபாவின் திடமான நம்பிக்கை.    ரோஹில்லாவின் காட்டுக் கத்தலைப் பொறுத்துக் கொள்ளும்படி கூறிய அதே நேரத்தில் 'கெட்ட எண்ணங்களை'  'துர் புத்தியை' மனதிற்குள் அண்ட விடாமல் தடுக்கும் வழியையும் பாபா ஜனங்களுக்கு உபதேசித்து  'இறைவனின் நாமத்தை இடைவிடாமல் ஜபிப்பதே மனதை அடக்கும் வழி' என்று காண்பித்தார்.  மனதையடக்க வழி சொன்ன  போதே  கலியுலகத்திற்கு நாமஸ்மரணம் தான் ஒரே கதி என்று சொல்லாமல் சொல்லிவிட்டார் ஸ்ரீ ஷீரடி சாயிபாபா.

 "பெரிய பூஜை புனஸ்காரங்களோ,  ஸ்தோத்திரங்கள் சொல்வதோ, தெய்வத்தை வழிபட ஷோடச உபசார முறைகளை கடைபிடிப்பதோ முடியாதவர்கள் எந்தவிதமான கவலையும் படத்  தேவையேயில்லை. 'சாயி! சாயி!' என்று தினமும் நினைவூட்டிக் கொள்வதே போதுமானதாகும். நாமஸ்மரணை ஒன்றே இவ்வுலக வாழ்க்கைக்குப் போதுமான ஒன்றாகும்."   இவ்வளவு அற்புதமான எளிய வழியை சாயியைத் தவிர வேறு யாரால் காட்ட  முடியும்?

 எப்போதும் நம்முடனேயே இருக்கும் பாபா நம் மனதில் எழும் வினாக்களுக்கு விடை சொல்லி,  நம் வாழ்வில் தகுந்த வழி காட்டி, அற்புதங்களை இன்றளவும் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார் என்பது தான் பாபா பக்தர்களின் அனுபவம்.

 "நான் இந்த பூத உடலை விட்ட பிறகும்  என்னை நம்புங்கள்.   என் சமாதியில் உள்ள என் எலும்புகள் உங்களுக்கு தைரியத்தையும் நம்பிக்கையும் கொடுக்கும்.  நான் மட்டுமல்ல. என்னிடம் முழு இதயத்தோடு சரணடைபவர்களுடன் என் சமாதியும் பேசும், தொடர்பு கொள்ளும்.  நான் உங்களிடையேயில்லையே என்று ஒருபோதும் கவலைப் படாதீர்கள்.  என்னையே நினைப்பவர்களுக்கு எனது எலும்புகள் கூட அவர்களது நலத்தைக் குறித்துப் பேசும், மன ஆறுதலளிக்கும்!"  என்று அருளுரைத்த மஹான் ஷீர்டி ஸ்ரீ சாயி பாபா, விஜயதசமி நன்னாளில் மஹா சமாதி அடைந்தார்.

 அந்த வகையில் மஹான் ஷீர்டி ஸ்ரீ சாயி பாபாவின் 105-வது மஹா சமாதி தினம் இன்று பக்தர்களால் புனிதமாகக் கொண்டாடப் படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com