உலக பாரம்பரியங்களை பொக்கிஷமாக பாதுகாக்கும் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட 'யுனஸ்கோ' அமைப்பு தமிழர்களின் கலாசாரம், பண்பாடு, நாகரிகத்தை நன்கு உணர்ந்து வேட்டிக்கு உலக அங்கீகாரத்தை அளித்து இருக்கிறது. 2016-ம் ஆண்டு அந்த அமைப்புதான் ஜனவரி 6-ந்தேதியை சர்வதேச வேட்டி தினமாக அறிவித்தது.
அதன் விளைவாக ஒவ்வொரு ஆண்டும் இந்த தினத்தில் வேட்டி அணிய வேண்டும் என்ற உணர்வு இளைய தலைமுறையினரிடம் மேலோங்கி வருகிறது. பாரம்பரிய வேட்டி தினம் இன்று தமிழகத்தில் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
என்னதான் விதவிதமான உடைகள் அணிந்தாலும், வேட்டி கட்டி நடக்கும்போது ஆண்களிடையே தோன்றும் கம்பீரமே தனி அழகு பிளஸ் கவர்ச்சி எனலாம். சட்டை அணியும் பழக்கம் வரும் முன்பாகவே நமது முன்னோர் வேட்டி மட்டுமே அணிந்து வலம் வந்துள்ளனர். எல்லாவற்றையும் விட தமிழர்களின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் ஆடை என்றாலே அது வேட்டி தான்.
ஆனால் நாகரிக வளர்ச்சியாலும், தொழில்நுட்ப புரட்சியாலும் வேட்டி கட்டும் வழக்கம் மங்கி வருகிறது என்பதே நிதர்சனமான உண்மை.தமிழரின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வேட்டிக்கு பின்னால் லட்சக்கணக்கான நெசவாளர்களின் வாழ்வாதாரம் ஒளிந்துள்ளது என்பதையும் நாம் மறந்துவிட வேண்டாம். வேட்டியை நமக்கு தந்த மகத்தான நெசவாளர்களின் வாழ்க்கையை மீட்டெடுத்து அவர்களுக்கு உதவ வேண்டியது நம் அனைவரது கடமையாகும்.
முன்பெல்லாம் வேட்டி கட்டுவதில் உள்ள சிரம, பயணிக்கும் உண்டாகும் அசௌகரியங்கள் காரணமாக இளைய தலைமுறையினர் அதை அணிவதை முற்றிலும் தவிர்த்து வந்தனர். ஆனால் நமது தட்ப வெப்ப நிலைக்கு 100 சதவிகிதம் பொறுத்தமான உடை என்றால் அது வேட்டி தான்.
அதனை தவிர்க்க இன்றைய இளைஞர்கள் சிரமமின்றி அணியும் வகையில் ஒட்டிக்கோ கட்டிக்கோ வேட்டி, பாக்கெட் வைத்த வேட்டி என்று வேட்டியிலும் புதுமைகள் புகுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகைகளில் வேட்டிகளில் பெல்ட் மாடல், செல்போன் வைத்துக் கொள்வதற்கு ஏதுவாக பாக்கெட் என பல புதிய மாடல்களும் இளைஞர்களின் பார்வையை வேட்டி பக்கம் திருப்பியுள்ளது. எனலாம். இந்த எளிய மாடல் வேட்டிகள் கல்லூரி மாணவர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
வேட்டிகளில் பலவகை உண்டு .வேட்டிகளின் அளவை வைத்தும் அதனுடைய வகையை நிர்ணயம் செய்வது உண்டு. நான்கு முழ வேட்டி, எட்டு முழ வேட்டி அல்லது இரட்டை வேட்டி, கரை வேட்டி ஆகியவை அதனுடைய வகைகளாகும். எட்டு முழ வேட்டியை அந்தணர்கள் போன்ற சிலர் ஐந்து கச்சம் வைத்துக் கட்டுவர். இது பஞ்சக்கச்சம் என அழைக்கப்படுகிறது.
வேட்டி தினத்தை உலகுக்கு உணர்த்தும் வகையில் வயதில் மூத்தவர்கள் மட்டுமல்லாது இன்றைய நவீன இளைஞர்களும் வேட்டி அணிந்து புகைபடமெடுத்து மகிழ்ச்சியாக வலம் வருகின்றனர்.
நாம் பாரம்பரிய உடைகளை தினமும் அணியாவிட்டாலும் கூட விழாக்காலங்களிலும் கோவில் பண்டிகை காலங்களிலும் ஏன் முடிந்தால் வாரத்தில் ஒரு தினமேனும் அணிவோமே!
வேட்டி அணிவோம், பாரம்பரியத்தை கடைபிடிப்போம்!! நெசவாளர்களை காப்போம் !!!