தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று (ஆகஸ்ட் 17) டெல்லியில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்தார். அதற்கு முன்னதாக,குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
அதன்பின்னர், பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து தமிழகத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடத்த மத்திய அரசு அனுமதி அளித்ததற்கு நன்றி தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பின்போது, உடல் ஆரோக்கியத்தைப் பேண உதவும், தமிழ்நாட்டின் தானியங்கள் அடங்கிய பெட்டகத்தை பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் நினைவுப் பரிசாக வழங்கினார்.
தமிழ்நாட்டின் தானியங்கள் எனும் அந்த பெட்டகத்தில், தமிழகத்தின் பாரம்பரிய அரிசி மற்றும் தானிய வகைகளான மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுனி, குள்ளக்கார், சீரக சம்பா, கேழ்வரகு, கம்பு, சாமை, தினை, வரகு உள்ளிட்ட 9 வகையான தானியங்கள் அடங்கியிருந்தன.