கல்வெட்டியலாளர் விருது!

கல்வெட்டியலாளர் விருது!
Published on

– வல்லபா ஸ்ரீநிவாசன்

பொன்னியின் செல்வன் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது கல்கியும் ராஜராஜ சோழனும் தான்! ஆனால் 130  ஆண்டுகளுக்கு முன் வரை ராஜராஜ சோழன் பற்றியே யாருக்கும் தெரியாது என்றால் உங்களால் நம்ப முடியுமா?

இன்று நமக்கு கிடைத்திருக்கும் சோழ வரலாறு, அதற்கு முன் பல்லவர் காலம், அதற்கு முன் அதற்கு முன் என்று நாம் அறிந்திருக்கும் அனைத்து வரலாற்று விவரங்களும் சுமார் 130  ஆண்டுகளுக்கு முன் ராய் பகதூர் வி வெங்கைய்யா என்பவரால் கல்வெட்டுகளிலிருந்தும், செப்புத் தகடுகளிலிருந்தும் படித்து, ஆராய்ந்து தொகுக்கப் பட்டவையே ஆகும்.

தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளையும், திருமதி சுனிதா மாதவனும் இணைந்து, இந்த மாபெரும் மனிதர் வெங்கய்யா அவர்கள் பெயரில்,  இந்தியாவிலேயே முதன் முறையாக கல்வெட்டியலாளர் விருது ஒன்றை ஏற்படுத்தி உள்ளனர்.

சென்னையில் கல்லூரிப் பேராசிரியராகப் பணியாற்றி தற்போது அமெரிக்காவில் வசித்து வரும் திருமதி சுனிதா மாதவன் இந்திய அரசின் முதல் முதன்மை கல்வெட்டியலாளராகப் பணியாற்றிய ராய் பகதூர் வெங்கய்யாவின் பெயர்த்தி ஆவார்.

இவர் தனது கொள்ளுத் தாத்தா பெயரில் உருவாக்கியதே இந்த "வெங்கய்யா கல்வெட்டியல் விருது". கல்வெட்டியலுக்காக இத்தகைய விருது வழங்கப் படுவதும் இந்தியாவிலேயே இதுவே முதன் முறையாகும். சமீபத்தில் இதற்கான விழா, சென்னை மயிலாப்பூர் ஆர்கே சென்டரில் நடைபெற்றது.  

வரலாற்றாளர் கே ஆர் ஏ நரசய்யா வழங்க முனைவர் எ சுப்பராயலு இவ்விருதைப் பெற்றுக் கொண்டார். ஒரு பாராட்டுக் கேடயமும், ரூ 20,000 பரிசும் விருதாக வழங்கப் பட்டது.

ராய் பகதூர் வி வெங்கய்யா இந்தியாவின் தலைசிறந்த கல்வெட்டியலாளர்களில் ஒருவர். நாம் இன்று பெருமைப்படும் மாமல்லபுரம் கல்வெட்டுகள், சோழர்கால செப்பேடுகள், உத்திரமேரூர் குடவோலை முறை பற்றிய கல்வெட்டுகள் அனைத்தையும் கண்டறிந்து, படித்து, அதன் தகவல்களை உலகறியச் செய்தவர் வெங்கய்யா.

இந்திய அரசின் முதன்மைக் கல்வெட்டியலாளராகப் பணியாற்றி பல சாதனைகளைப் புரிந்த வெங்கய்யா தொடர்ந்து பல கல்வெட்டியலாளர்கள் உருவாகவும், ஆர்வத்தோடு நம் வரலாற்றைப் ஆவணப் படுத்தவும் பெரும் உந்துதலாக இருந்தார்.

இவரது பெயரில் அளிக்கப்படும் இந்த விருதானது எந்த இந்திய மொழியாக இருந்தாலும் கல்வெட்டியலில் குறிப்பிட்ட பங்களிப்பைச் செய்திருக்கும் தனி நபருக்கு ஒவ்வோர் ஆண்டும் வழங்கப்படும். இதன் மூலம் வரலாறு, கலை, இலக்கியம், கலாசாரம் ஆகியவற்றின் மீது விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் ஆர்வத்தைத் தூண்டுவதும் இதன் நோக்கமாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com