எதற்கும் துணிந்தவன்: கும்கி யானை கலீம்!

எதற்கும் துணிந்தவன்: கும்கி யானை கலீம்!

– ஜிக்கன்னு.

மிழக காடுகளில் அதகளம் செய்யும் காட்டு யானைகளை அடக்கி, வழிக்கு கொண்டு வருவதில் அசத்திய திறமை கொண்ட கும்கி யானையான கலீம், இப்போது தனது 100-வது ஆபரேஷனில் களம் இறங்கியுள்ளான்.

காடுகளில் நடக்கும் ஆபரேஷன்களில் எத்தனை யானைகள் எதிரே வந்தாலும் அசாத்யமுடன் எதிர்கொள்ளும் வல்லமை பொருந்திய வீரன் கலீம்.

தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநில காடுகளிலும் தனிக்காட்டு ராஜாவாக செயல்பட்டு வீறு நடை போடுபவன். மேலும், கலீம் கும்கியால் காட்டு யானையாக பிடிபட்டு பின்னர் கும்கியாக மாற்றப்பட்ட முத்து கும்கி யானையும் முதன்முறையாக களம் இறங்கியுள்ளது.

ஆனைகட்டி அட்டப்பாடி பகுதிகளில் உடல் நல குறைவால் உலா வரும் காட்டு யானையை களத்தில் எதிர்கொள்ள கலீம்  மற்றும் முத்து கும்கி யானைகள் வந்துள்ளன.

1972 ஆம் ஆண்டு சத்தியமங்கலம் வனத்தில் தனது 7 வயதிலேயே தாதாவாக வலம் வந்தவன் கலீம். எங்க ஏரியா உள்ள வராதே என்ற வசனத்துக்கு ஏற்றவாறு சத்யமங்கலம் வனத்துக்குள் யானையின் வலசை பாதையில் அமைக்கப்பட்ட சாலையில் பயணிக்கும் வாகனங்கள் கலீமால் பதம் பார்க்க பட்டிருக்கின்றன.

கலீம் கண்களில் பட்டு விடக்கூடாது கடவுளே என்ற வேண்டுதல் இல்லாத வாகன ஓட்டிகளே அன்றைய காலகட்டத்திலே இல்லை. அந்த அளவுக்கு அடாவடியாக வலம் வந்த கலீமை கடும் போராட்டத்துக்குப் பின் 7 வயதில் வனத்துறை வசம் வந்தவன், இன்று அரை நூற்றாண்டைக் கடந்து வீறு நடை போடுகின்றான் .

 சத்தியமங்கலத்தில் பிடிபட்டு டாப்ஸ்லிப் கொண்டு வரப்பட்ட கலீம் பின்னர் பழனியப்பா என்ற யானை பாகனால் வெறும் 45 நாளில் பயிற்சி கொடுக்கப்பட்டு,  கும்கியாக மாற்றியிருக்கின்றனர். பழனியப்பாவுக்கு பின் கடந்த கால் நூற்றாண்டுகளாக கலீமுக்கு பாகனாக செயல்பட்டு வருபவர் மணி.வனத்துறையின் கீழ் எத்தனையோ வளர்ப்பு கும்கி யானைகள் இருந்தாலும் கலீமின் தனித்துவமானது.

கலீமின் நுண்ணறிவு, மோப்பம் பிடித்து தேடுவதில் அதி புத்திசாலித்தனம், திட்டமிட்ட களப் பணிகளை செவ்வனே செய்து முடிக்கும் கெட்டிக்காரன், யானை ஆபரேசன்களில் எடுத்த முடிவிலிருந்து எந்நிலையிலும் பின் வாங்காத அசாத்திய தைரியசாலி, எத்தனை யானைகள் காட்டு விலங்கினங்கள் எதிர்த்து வந்தாலும் நம்பி உடன் வருவோர் நூறுபேராயினும் அவர்களை பாதுகாக்கும் பாதுகாப்பு அரண் என கள செயல்பாடுகளால் அதிரவைத்து ஆச்சர்யத்தில் ஆழ்த்துகின்றான் கலீம் கும்கி யானை. தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா ஆந்திரா கர்நாடகா என கலீமின் கால் தடம் பதியாத தென்னிந்திய காடுகளே இல்லை.

ஊருக்குள் நுழைந்த யானைகளை விரட்ட, யானைகளை இடம் மாற்ற, யானைகளுக்கு சிகிச்சை தர வனத்துறை முதலில் அழைப்பது என்னவோ கலீமை தான். கலீம் வந்தால் கவலை இல்லை என்று சொல்லும் அளவுக்கு கலீம் செய்த சம்பவங்கள் ஏராளம்.

கோவையின் புகழ்பெற்ற சின்னத்தம்பி , விநாயகன் உள்ளிட்ட யானைகளை இடம் மாற்றியது, பொள்ளாச்சியில் 7 பேரை கொன்ற அரிசி ராஜா யானையை அடக்கியது , ஆந்திரா கர்நாடகா கேரளா என வனத்திலிருந்து வெளியேறிய ஊருக்குள் நுழைந்து பொதுமக்களை கொன்ற யானைகளை விரட்ட, பிடிக்க வனத்துறையினரின் அபரேசன்களில் பெரிதும் உதவியிருக்கின்றான் கலீம் கும்கி யானை.

எதிர் வருகின்ற யானைகளை அசாத்தமுடன் எதிர்கொள்வதனை கடந்து தன்னுடன் இருப்போரை எதிர் விலங்கிடமிருந்து பாதுகாத்திருக்கின்றான் கலீம் கும்கி யானை. ஒருமுறை வனத்தில் யானை ஆபரேஷன் பணிகள் நடந்து வந்த நிலையில் அடர் வனத்தில் மறைந்திருந்த காட்டு யானை பழனிச்சாமி என்பவரை தும்பிக்கையால் தூக்கி வீச வந்த நிலையில் அதனை முன்பே கணித்த கலீம் காட்டு யானை பழனிச்சாமியை தூக்கும் முன் கலீம் பாதுகாப்பாக தூக்கி நகர்த்தியிருக்கின்றான்.

காட்டு யானையையும் வெகு தூரம் ஓடவிட்டிருக்கின்றான். இப்படி களத்தில் கரடு முரடாக இருந்தாலும் பழகுவோரிடம் பச்சிளம் குழந்தையாக மாறி பாச மழை பொழியும் கலீம் கும்கி யானை பாகனின் கண் அசைவுக்கு கட்டுப்படுகின்றான்.  

இதுவரை 99 ஆபரேசன்களில் களம் கண்டு வெற்றியை மட்டுமே ருசித்த கலீம் ஆனைக்கட்டி யானை ஆபரேசனில் 100வது ஆபரேசனாக களம் காண்கின்றது. இத்துடன், கலீம் யானையால் அடக்கி, பயிற்றுவிக்கப்பட்ட முத்து யானையும் கும்கியாக மாறிமுதல் முறையாக களமிறங்குகிறது.

கலீம் நூறாவது ஆபரேசனில் களம் காணும் நிலையில் தனது முதல் யானை ஆபரேசன் பணிக்கு தயாராகியிருக்கின்றான் முத்து. பொள்ளாச்சி பகுதியில் 7 பேரை கொன்று அரிசி ராஜாவாக என்ற பெயரில் அடாவடி செய்தவன் இவன். மூன்று வருடங்களுக்கு முன் கலீமால் அடக்கப்பட்டு டாப் சிலிப் முகாமுக்கு கொண்டு சென்று ட்ரைனிங் தந்திருக்கின்றனர்.

ஆக்ரோசமாக உலா வந்தவன் கும்கி ட்ரைனிங்குக்கு பின் சொல் பேச்சு கேட்கும் கிளி பிள்ளையாக மாறியிருக்கின்றான். கலீம் கும்கி யானையின் பாகன் மணியின் மகன் ஜோதி முத்து கும்கி யானையின் கவாடி. பாகனாக ராஜ்குமார் இருக்கின்றார்.

கொடூர கொலை காரணாக அசராத அஞ்சானாக வனத்திலிருந்து வெளியேறி பொள்ளாச்சியை ரனம் செய்த அரிசி ராஜா என்று அன்று அழைக்கப்பட்ட இன்றைய முத்து கும்கி யானையை ராஜ்குமார், ஜோதியிடம் ஒப்படைந்து இனி இது உங்கள் பிள்ளை நீங்கள் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றதும் செய்வதறியாது திகைத்து நின்றிருக்கின்றனர். யானையின் மீது அதீத காதல் கொண்ட ராஜ்குமார் ஜோதி இருவரும் கொலைகாரன் என்ற பெயர் பெற்ற யானையை குழந்தையாக மாற்றி இருக்கின்றனர்.

ஆனைக்கட்டி யானை ஆபரேசனில் களத்தில் எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்து பாகன்களின் பயிற்சியினை கடந்து கலீம் கும்கி யானையும் முத்துவுக்கு கற்று தரவிருக்கின்றான். 

கிட்டத்தட்ட தந்தையும் மகனுமாக கலீம் நூறாவது ஆபரேசனிலும், கலீமால் தயாரான கலீமின் மகன் என்று சொல்லும் அளவில் முதல் ஆபரேசனுக்கு முத்துவும் தயாராகியிருப்பது பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com