தெலுங்கர்களுக்கு உகாதி, கன்னடர்களுக்கு யுகாதி, பஞ்சாபிகளுக்கு பைசாகி, மகாராஷ்டிரர்களுக்கு குடி பட்வா, சிந்திகளுக்கு சேட்டி சந்த், மணிப்பூரிகளுக்கு சாஜிபு நொங்மா பன்பா, பாலித்தீவு மற்றும் இந்தோனேசிய மக்களுக்கு நைபி என்று பல்வேறு விதமாக வழங்கி வரக்கூடிய இந்தப் பண்டிகையானது சைத்ர அல்லது சித்திரை மாதத்தின் முதல் நாளாகக் கருதப்படுகிறது.
உகாதிக்குப் பின்னிருக்கும் பூர்வ கதை…
அதாவது சோமகாசுரன் எனும் அசுரன் படைப்புக் கடவுளான பிரம்ம தேவனிடமிருந்து வேதங்களைத் திருடிச் சென்று ஆழியின் அடியின் ஒழித்து வைத்து விடுகிறான். தேவாதி தேவர்களெல்லாம் முயன்றும் தொலைத்த வேதங்களை மீட்டெடுக்க வழி கிடைத்த பாடில்லை. கடைசியில் திருவடி சரணமாக முப்பத்து முக்கோடி தேவர்களும் பிரம்ம தேவன் தலைமையில் வைகுண்டத்தில் அடைக்கலமாகி மகா விஷ்ணுவின் பதம் பற்றி இதற்கு ஒரு உபாயம் கூறுமாறு வேண்டுகிறார்கள்.
அனந்த சயனக் கோலத்தில் இருந்த உலகளந்த உத்தமன் தான் உறக்கத்தில் இருந்தாலும் உள்ளும் புறமும் நன்கு அறிவானே! தன்னை நம்பி வந்த தேவர்களைக் கை விடுவானோ அந்த தேவாதி தேவன்... எடுத்தான் மத்ஸாவதாரம், புகுந்தான் கடலுக்குள் அடியாழம் வரை துளைத்துத் திளைத்து நீந்தி சோகாசுரன் வேதங்களை ஒழித்து வைத்திருந்த இடத்தைக் கண்டடைந்தான். மீட்டான்... கொண்டு வந்து கையளித்தான் பிரம்மனிடம்.
அன்றிலிருந்து ஐய்யன் பிரம்மன்ன் தொடங்கினான் ஷ்ருஷ்டியை. இதுவே சைத்ர மாதத்தின் முதல் நாள் என்கிறது பிரம்ம புராணம். இதுவே வசந்த ருது அதாவது வசந்த காலத்தின் முதல் நாளாகவும் கருதப்படுவதால் இந்நாளில் புது முயற்சிகளை மேற்கொள்வது சுபமெனக் கருதப்படுகிறது.
உகாதி என்ற சொல்லின் அர்த்தம்...
உகாதி என்ற சொல் சமஸ்கிருதச் சொல்லாகக் கருதப்படுகிறது. இதைப் பிரித்தால் யுக+ஆதி எனப்பிரிந்து பொருள் தரும். அதாவது சமஸ்கிருதப்படி யுக என்ற சொல்லுக்கு வயது என்றும் அடி என்ற சொல்லுக்கு தொடக்கம் என்றும் பொருளாம். அதன்படி வருடத்தொடக்கத்தை யுகாதி அல்லது உகாதி என்கிறார்கள் ஆந்திர, தெலுங்கானா மற்றும் கன்னட மக்கள்.
உகாதி கொண்டாட்டம்...
உகாதி அன்று மக்கள் அதிகாலையில் எழுந்து எண்ணெய் முழுக்கு செய்து புது ஆடைகளை உடுத்திக் கொண்டு வீட்டில் மாவிலைத் தோரணம் கட்டி, வண்ணக்கோலம் இட்டு வீட்டை அலங்கரிப்பார்கள். இந்நாளில் உகாதி ஸ்பெஷலாக உகாதி பச்சடி செய்து உண்டு மகிழ்வார்கள். கோயில்களுக்குச் சென்று இறைவனை வணங்குவார்கள். தவிர மக்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களைச் சந்தித்து பரிசுகள் கொடுத்தும், கலை நிகழ்ச்சிகள் நடத்தியும் ஒரு குழுவாக மகிழ்ந்திருப்பார்கள்.
உகாதி பச்சடி...
உகாதி திருநாளன்று ஆந்திரர்களும், கன்னடர்களும் இந்த ஸ்பெஷல் பச்சடி செய்து விருந்தினர்களுக்கு அளித்து தாங்களும் உண்டு மகிழ்வார்கள். இந்தப் பச்சடி செய்வது வெகு எளிது. மாங்காய், தேங்காய், புளி, வேப்பம் பூ மற்றும் உப்பு இந்த ஐந்து பொருட்கள் இருந்தால் போதும் உகாதி பச்சடி ரெடி. முதலில் மாங்காயைச் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். வேப்பம் பூ ஒரு கைப்பிடி தேவை. ஒரு சிறு கோலிக்குண்டு அளவு புளியை ஒரு டம்ளர் நல்ல நீரில் ஊற வைத்துக் கரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். தேங்காய்ப் பூவை உதிர்த்து வைத்துக் கொள்ளவும். வெல்லத்தை கால் டம்ளர் நீரில் கரைத்து வடிகட்டி புளிக்கரைசலில் சேர்க்கவும். இப்போது உகாதி பச்சடி செய்யத் தேவையான அத்தனை பொருட்களும் ரெடி. வாயகன்ற பாத்திரத்தில் முதலில் புளிக்கரைசலில் வெல்லம் சேர்த்து கலக்கி விட்டு அதில் துண்டுகளாக நறுக்கிய மாங்காய் சேர்த்து ஒரு சிட்டிகை உப்பும் சேர்த்துப் பின்னர் வேப்பம் பூவை அதில் தூவவும். தேங்காயைச் சிலர் பொங்கலில் இட நறுக்குவதைப்போல பள்ளு பள்ளாகவும் சேர்ப்பார்கள், சிலர் துருவியும் சேர்ப்பார்கள். 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவலை மேலாக்கத் தூவி அப்படியே ஒரு கண்ணாடி மூடி இட்டு எடுத்து வையுங்கள்... இதோ உகாதி பச்சடி தயார். இதில் புளிப்பு, துவர்ப்பு, கசப்பு, உப்பு, இனிப்பு என ஐவகைச் சுவைகள் கலந்திருக்கின்றன. அதே போல வாழ்க்கையும் ஐவகை உணர்வுகளின் கலவையாகவே இருக்கக் கூடும் எனும் யதார்த்தத்தை மக்களாகிய நாம் புரிந்து கொள்ள வேண்டும் எனும் தத்துவம் இந்த உகாதி பச்சடியில் மறைபொருளாக உணர்த்தப்படுகிறது.
உகாதித் திருநாளாம் இன்று கல்கி ஆன்லைன் வாசகர்கள் அனைவருக்கும் உகாதித் திருநாள் வாழ்த்துக்கள்!