#UttarakhandTunnelRescue 41 உயிர்களை காப்பாற்றிய எலி வளை சுரங்க முறை... அப்படி என்றால் என்ன தெரியுமா?

UttarakhandTunnelRescue
UttarakhandTunnelRescue

உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த 17 நாட்களாக மலை சுரங்கபாதையில் சிக்கிக்கொண்டிருந்த 41 தொழிலாளர்கள் கடுமையான போராட்டத்திற்கு பிறகு நேற்று இரவு அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

கடந்த 17 நாட்களாக இரவு, பகல் தெரியாமல் சுரங்கத்தில் சிக்கியிருந்த தொழிலாளர்கள் இன்றைய பொழுது மறுபிறவிபோல் அமைந்துள்ளது. இந்த 41 தொழிலாளர்களும் பத்திரமாக சுரங்க பாதையில் இருந்து வெளிவர உதவியது எலி வளை டெக்னிக்தான். அப்படி என்றால் என்ன வாங்க தெரிஞ்சுக்கலாம்.

நிலக்கரிச் சுரங்கங்களில் நிலக்கரியை வெட்டி எடுக்க ஒரே ஒரு நபர் மட்டுமே செல்லக் கூடிய அளவில் சிறிய அளவில் துளையிடும் முறை தான் எலி வளை டெக்னிக். இந்த எலி வளை சுரங்க நுட்பத்தைப் பயன்படுத்தி நிலக்கரி எடுப்பதற்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் 2014 இல் தடை விதித்துள்ளது.

இந்த முறை தொழிலாளர்களுக்கு பல்வேறு வகையான இன்னல்களையும், உயிரிழப்புகளையும் ஏற்படுத்துகிறது என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் குற்றம் சாட்டியிருக்கிறது. இந்த நிலையில் உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி, சிர்க்யாரா பகுதிகளில் சார்தம் யாத்திரைக்காக நெடுஞ்சாலை அமைக்கும் திட்டத்தின் மலை அடிவாரத்தின் கீழ் 4.5 கிலோமீட்டர் தொலைவிற்கு சுரங்கப்பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டது.

இதற்காக ஐந்தாண்டு காலமாக பணி நடைபெற்றுவந்தது. இந்நிலையில் கடந்த நவம்பர் 12ஆம் தேதி அன்று 41 தொழிலாளர்கள் சுரங்கத்திற்குள் ஏற்பட்ட இடுப்பாடுகளில் சிக்கி கொண்டனர். 41 தொழிலாளர்களை பாதுகாப்பாக மீட்பதற்காக ஓஎன்ஜிசி, பேரிடர் மீட்பு குழு, துணை ராணுவ படையினர், மாநில பேரிடர் மீட்பு குழு, மருத்துவ குழுவினர், அதிவிரைவு படையினர் என்று பல்வேறு துறைகளின் சார்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.

60 மீட்டர் தூர இடிபாடுகளில் சிக்கிய 41 தொழிலாளர்களை காப்பதற்காக கனரக வாகனத்தை கொண்டு 57 மீட்டருக்கு துளையிட்டு 800 மிமீ மீட்டர் அகல குழாய் வழியாக மீட்க முயற்சி எடுக்கப்பட்டது. அப்படி துளையிடும் பொழுது ப்ளேட் உடைந்து பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆர்வம் 6 அங்குல குழாய் வழியாக இடிபாடில் சிக்கிய தொழிலாளர்களுக்கு உணவு மற்றும் மருந்து பொருள்கள் அளிக்கப்பட்டு வந்தன.

இதைத் தொடர்ந்து இந்தியாவின் பல்வேறு தொழில்நுட்ப பொறியாளர்கள், நிபுணர்களைக் கொண்டு தொழிலாளர்களை மீட்க பல்வேறு விதமான ஆலோசனைகள் நடத்தப்பட்டன. ஆனால் எவையும் பயனளிக்காத நிலையில் நிலக்கரி சுரங்கங்களில் நிலக்கரியை வெட்டி எடுப்பதற்காக பயன்படுத்தப்பட்ட ஆபத்தான முறை என்று சொல்லப்பட்ட எலி வளை சுரங்க முறையை அமைக்க பேரிடர் மீட்பு குழு முடிவு செய்தது.

இதற்காக எலி வளை சுரங்க நுட்ப நிபுணர்கள் 12 பேர் வரவழைக்கப்பட்டனர். இவர்களிடம் நேற்று முன்தினம் 41 தொழிலாளர்களை மீட்கும் பணி வழங்கப்பட்டது. அதே நேரம் சுரங்கத்தின் மற்றொரு பகுதியில் 800 மில்லி மீட்டர் அகலத்தில் செங்குத்தாக துளையிடும் பணியும் தொடங்கப்பட்டது.

இதனிடையே பணியை தொடங்கி 24 மணி நேரத்திற்குள் மொத்தமாக 57 மீட்டர் தூரத்திற்கு தொலை இடப்பட்டது. இதைத்தொடர்ந்து செங்குத்தாக துளையிடும் பணி முற்றிலுமாக நிறுத்தப்பட்டு, எலி வளை சுரங்க முறைக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மதியம் 1:30 மணி அளவில் பணிகள் பெருமளவில் முடிக்கப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக இரவு 7.30 மணி அளவில் எலி வளை சுரங்க பாதை மூலமாக ஒரு நபர் மட்டுமே செல்லும் வகையில் அமைக்கப்பட்ட சுரங்கப்பாதை வழியாக 41 தொழிலாளர்களும் ஒவ்வொருவராக மீட்கப்பட்டனர். சுரங்க பாதையில் சிக்கியிருந்த தொழிலாளர்களை மீட்க படித்த மற்றும் பல்வேறு தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டது.

ஆனால், இறுதியில் 9 ஆண்டுகளுக்கு முன்பு நிலக்கரி சுரங்கங்களில் தொழிலாளர்கள் நிலகரிகளை வெட்டி வெளியே கொண்டுவர பயன்படுத்தப்பட்ட எலி வளை சுரங்க முறைதான் கைகொடுத்துள்ளது. கடந்த 17 நாட்களாக அதிநவீன தொழில்நுட்பங்களால் செய்யமுடியாத காரியத்தை, எலி வலை சுரங்க முறையில் தேர்ச்சிப்பெற்ற 12 தொழிலாளர்கள் சாதித்துக்காட்டியுள்ளனர்.

வாழ்வா சாவா என கலக்கத்தில் இருந்த 41 தொழிலாளர்களும் அவர்களை மீட்க இரவு, பகல் பாராது உழைத்த தொழிலாளர்களும் இன்றைக்கு நிம்மதியாக உறங்கச் செல்வார்கள். ஆனால், அதேசமயம் ஆபத்தான பணிகளில் தொழிலாளர்கள் ஈடுப்படுத்தப்படும்போதும் அவர்களுக்கான பாதுகாப்பு மிக மிக அவசியம் என்பதை இந்நிகழ்வு அரசுகளுக்கு உண்ர்த்தியுள்ளது.

மேலும், ஆழ்துளை மரணங்கள், கழிவுநீர் தொட்டிகளில் தொழிலாளர்கள் மரணங்கள் போன்றவை தொடர்கதையாக நீடித்துவருகிறது. இதுபோன்ற அசம்பாவிதங்கள் இனியும் நடக்காமல் இருந்து மேலும் பல தொழில்நுட்பங்கள் சோதனை செய்யப்பட்டு அவை பயன்பாட்டிற்கு வரவேண்டும் என்பதே மக்களின் கருத்தாக உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com