புது வருடம் ‘சோபகிருது’ வருக. மங்கலம் தருக.

புது வருடம் ‘சோபகிருது’ வருக. மங்கலம் தருக.
Published on

வருகின்ற  தமிழ் புத்தாண்டின் பெயர் “சோபகிருது”. இந்த வருடத்தின் தமிழ் பெயர் “மங்கலம்”. பெயருக்கு ஏற்றது போல இந்த ஆண்டு நம்முடைய நாட்டிற்கும், இந்தப் பரந்த உலகிற்கும் சிறந்த ஆண்டாக இருக்கும் என்று எதிர் நோக்குவோம்.

வாரம் ஏழு நாள் சுழற்சி. ஒரு வருடத்தில் பன்னிரெண்டு மாதங்கள் சுழற்சி. வார நாட்கள், மாதங்கள் இவற்றிற் கெல்லம் பெயர் உண்டு. நம்முடைய நாட்காட்டிகளிலும், ஆங்கில நாட்காட்டியிலும். அதைப் போல இந்திய நாட்காட்டியில் வருடத்திற்குப் பெயர் உண்டு. அறுபது வருடங்கள் சுழற்சியாக வரும்.

ஆங்கில நாட்காட்டியில் வருடங்கள் எண்ணில் குறிப்பிடப்படுகின்றன. இந்திய நாட்காட்டியில் பெயர்கள் ஏன்?

றைவனுக்குப் பூஜை செய்யும் போது முதலில் செய்து கொள்வது சங்கல்பம். சங்கல்பம் செய்யும் போது பூஜை எங்கிருந்து செய்கிறோம். எந்த நாளில் செய்கிறோம் என்பதைச் சொல்ல வேண்டும். அதற்கு  வருடத்தின் பெயர், மாதம், அன்றைய திதி, கிழமை, நட்சத்திரம் ஆகியவற்றைக் குறிப்பது உண்டு.

திதி என்பது என்ன?

பௌர்ணமி அல்லது அமாவாசை முடிந்து எத்தனையாவது நாள் என்று குறிப்பிடப்படுவது திதி. எண்களுக்கான சம்ஸ்க்ருத சொற்களை திதி என்று குறிப்பிடுகிறோம். உதாரணத்திற்கு, பிரதமை – ஒன்றாவது நாள், திவிதியை – இரண்டு, த்ரிதியை – மூன்று, சதுர்த்தி – நான்கு, பஞ்சமி – ஐந்து, சஷ்டி – ஆறு, சப்தமி – ஏழு, அஷ்டமி – எட்டு, நவமி – ஒன்பது, தசமி – பத்து, ஏகாதசி – பதினொன்று, துவாதசி – பன்னிரெண்டு, த்ரயோதசி – பதின்மூன்று, சதுர்தசி – பதின்நான்கு.

வருட சுழற்சியில் ஏன் அறுபது வருடங்கள்? சுழற்சியில் 20,30,50,100 என்று வைக்காமல் 60 வருடங்கள் என்று வைத்ததின் காரணம் என்ன?

சூரியன் ஒரு ராசியைக் கடப்பதற்கு எடுத்துக் கொள்ளும் காலம் ஒரு மாதம். ஆகவே,  சூரியன் பன்னிரெண்டு ராசிகளையும் சுற்றி வரும் கால அளவு ஒரு வருடம்.

குரு அல்லது வியாழன் என்று குறிப்பிடப்படுகிற ஜூபிடர் கிரகம், ஒரு ராசியைக் கடக்க எடுத்துக் கொள்ளும் காலம் ஒரு வருடம். பன்னிரெண்டு ராசிகளையும் கடந்து முழு வட்டத்தையும் முடிக்க பன்னிரெண்டு வருடமாகிறது. சாடர்ன் என்கின்ற சனி கிரகம் பன்னிரெண்டு ராசிகளையும் கடந்து ஆரம்ப நிலைக்கு வர எடுத்துக் கொள்ளும் காலம் முப்பது வருடங்கள். 

12 மற்றும் 30 எண்களின் குறைந்த பொது பெருக்குத் தொகை (ஆங்கிலத்தில் எல்.சி.எம். என்று குறிப்பிடுவோம்) 60.  ஆகவே ஒவ்வொரு அறுபது வருட சுழற்சிக்கும் பிறகு, கிரகங்கள் குழந்தை பிறந்த நேரத்தில் வானில் எந்த நிலையில் இருந்ததோ, அதே நிலைக்குத் திரும்பவும் வருகின்றன. ஒரு மனிதனுக்கு அறுபது வருடங்கள் என்ற சுழற்சி முடிவதை மணி விழா என்றும் அறுபதாவது ஆண்டு விழா என்றும் கொண்டாடுகிறோம்.

ஆங்கில நாட்காட்டியில், வருடத்தின் முதல் நாள் என்பது ஜனவரி ஒன்றாம் தேதி. அதுபோலவே தமிழ் புத்தாண்டும் தவறாமல் ஏப்ரல் 14ஆம் தேதி வரும். தமிழ் மாதங்கள் சூரியனின்  இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. ஆகவே இதற்கு சூரிய மானம் என்று பெயர். ஆங்கில வருடத்தில் 365 நாட்கள் இருப்பது போல தமிழ் வருடத்திலும் 365 நாட்கள். இந்தியாவில் 14 மாநிலங்களில் ஏப்ரல் 14 வருடத்தின் முதல் நாள். இதைத் தவிர நேபால், வங்க தேசம், மியான்மர், கம்போடியா, லாவோஸ், தாய்லாந்து, ஸ்ரீலங்கா ஆகிய நாடுகளுக்கும் எப்ரல் 14 அவர்கள் வருடத்தின் முதல் நாள்.

சந்திர மானம் என்பது என்ன?

ந்தியாவில் சில மாநிலங்களில் சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டு வருடத்தைக் கணிக்கி றார்கள். இதை சந்திர மானம் என்பார்கள். ஒரு சந்திர மாதம் 29.5 நாட்கள். ஆகவே ஒரு வருடத்திற்கு 354 நாட்கள். சூரிய வருடத்திற்கு 11 நாட்கள் குறைவு. இதை சரி செய்ய முப்பது மாதங்கள் கழித்து ஒரு மாதம் அந்த வருடத்தில் கூட்டப்படும். சந்திர மான வருடத்தில் வருடத்தின் முதல் தேதி, குறிப்பிட்ட நாளில் வராமல் மாறு படும்.

சந்திர மான வருடத்தில் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று பௌர்ணமியை முன்னிலைப் படுத்தி. வட இந்தியாவில் இது வழக்கம். மற்றொன்று அமாவாசையை முன்னிலைப் படுத்தி. இது தென் இந்தியாவில் வழக்கம்.

ஆங்கில மாதங்கள் எல்லா வருடமும் குறிப்பிட்ட மாதத்திற்கு இத்தனை நாட்கள் என்ற வரையறை உண்டு. பிப்ரவரி மாதத்தில் மட்டும் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு நாள் அதிகரிக்கும். ஆனால், தமிழ் வருடங்களில் மாத அளவு எல்லா வருடங்களிலும் ஒன்றாக இருக்காது. காரணம் என்ன?

ந்து சமய முறைப்படி ஒரு நாளின் தொடக்கம் சூரிய உதயம். ஆகவே இந்து நாட்காட்டியின் படி ஒரு நாள் என்பது குறிப்பிட்ட நாளின் சூரிய உதயம் முதல் அடுத்த நாள் சூரிய உதயம் வரை. பூமி தன்னைத்தானே சுற்றுவதும், சூரியன் ஒரு ராசியில் நுழைவதும் இரண்டு தனித்தனி நிகழ்வுகள். ஆகவே சூரிய உதயமும், சூரியனின் ராசிப் ப்ரவேசமும் ஒரே சமயத்தில் நிகழ முடியாது. சூரியன் குறிப்பிட்ட ராசியில் நுழையும் நேரம் மாதத்தின் முதல் நாளாகக் கணக்கிடப்படுகிறது. சூரியன் ராசியில் நுழையும் நேரம் அந்த நாளில் சூரிய உதயத்திற்கும் சூரியன் மறைவிற்கும் நடுவில் நிகழ்ந்தால் (அதாவது நாளின் முன் பகுதி) அந்த நாள் மாதத்தின் முதல் நாளாகக் கொள்ளப்படுகிறது.  அதுவே சூரியன் மறைவிற்குப் பிறகு (நாளின் பிற் பகுதி) சூரியன் ஒரு ராசியில் ப்ரவேசித்தால் அடுத்த நாள் மாதத்தின் முதல் நாளாகக் கருதப்படுகிறது.

அறுபதாண்டு வருடப் பட்டியலை வரையரை செய்தவர் வராகமிகிரர். வருடங்களின் பெயர்கள் வட மொழியில் இருந்ததால், அதற்கு ஈடான தமிழ் பெயரை பரிந்துரை செய்தவர் சத்தியவேல் முருகனார் என்ற தமிழறிஞர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com