விபரீதத்தில் முடிந்த சிறு பிள்ளைகளின் கூட்டாஞ்சோறு... உணர்த்துவது என்ன...???

விபரீதத்தில் முடிந்த சிறு பிள்ளைகளின் கூட்டாஞ்சோறு...  உணர்த்துவது என்ன...???

கிராமங்களில் பல சமூக மக்கள் ஒன்றிணைந்து, ஓரிடத்தில் கூட்டாஞ்சோறு சமைத்து எல்லோரும் பகிர்ந்து உண்பார்கள். அது ஒரு காலம். ஆனால் இப்போதும் சிறு பிள்ளைகள் ஒன்று கூடி, அவர்களுக்குள் விளையாட்டாக அவ்வப்போது “கூட்டாஞ்சோறு” விளையாட்டு விளையாடிக் கொள்வார்கள். சிற்சில கிராமங்களில் நிஜமாகவே சிறு பிள்ளைகள் காசுகள் சேர்த்து கூட்டாஞ்சோறு சமைத்து உண்பதும் உண்டு. அது ஒரு மகிழ்ச்சி. அதில் ஒரு சந்தோசம். அவ்வளவு தான். அப்படித் தான் நடந்துள்ளது கரூர் மாவட்டம், தோகைமலை அருகே நல்லாக்கவுண்டம்பட்டி கிராமத்தில் சிறு பிள்ளைகள் சேர்ந்து நடத்திய கூட்டாஞ்சோறு. உயிர்ப் பலிகள் ஏதுமற்று  சற்றே விபரீதத்துடன் நிகழ்ந்துள்ளது, சிறு பிள்ளைகளின் அந்தக் கூட்டாஞ்சோறு.

அந்த கிராமத்தில் பத்து வயதுக்குட்பட்ட பிள்ளைகள் நான்கு பேர், பனிரெண்டு வயதுக்கு மேல் பதினெட்டு வயதுக்குள் ஒன்பது பேர், இருபத்தியொரு வயது பெண் ஒருவர் என பதினான்கு பிள்ளைகள் ஒன்று சேர்ந்துள்ளனர். காசு பணம் சேகரித்துள்ளனர். கூட்டாஞ்சோறு என்றால் சோறுதான் சமைக்க வேண்டுமா என்ன? இந்தக் கால பிள்ளைகளுக்குப் பிடித்தமான “நூடுல்ஸ்” வாங்கி சமைப்பது என்று முடிவாகிறது. நண்பகல் பனிரெண்டு மணிக்கு மேலாக, தோகமலைக்குச் சென்று மளிகைக் கடையில் பதினைந்து பாக்கெட் நூடுல்ஸ், நல்லெண்ணெய் மற்றும் சில பொருட்களை வாங்கிக் கொண்டு கிராமத்துக்கு வருகிறார்கள்.

சமையலுக்கு ஏற்பாடு ஆகிறது. பெருமாள் என்பவரின் தோட்டத்துக்கு அருகே சமைக்கத் தொடங்குகிறார்கள். சமைத்துக் கொண்டிருக்கும் போது, நல்லெண்ணெய் பற்றாக்குறை ஏற்படுகிறது. இன்னும் கொஞ்சம் எண்ணெய் ஊற்றினால்தான் நல்லா இருக்கும் என்று அவர்களுக்குள் பேசிக் கொள்கிறார்கள். அந்தக் கூட்டத்தில் இருந்து ஒரு சிறுவன் தன் வீட்டுக்கு ஓடிச் சென்று, நல்லெண்ணெய் கலரில் இருக்கும் ஒரு பாட்டிலைத் தூக்கி வருகிறான். அந்தப் பாட்டிலில் இருந்ததில், சமைக்க தேவையானதை மட்டும் ஊற்றி நூடுல்ஸ் சமைத்து முடிக்கப்படுகிறது.

சந்தோசமாக எல்லோர்க்கும் பரிமாறப்படுகிறது. மகிழ்ச்சி பொங்க சாப்பிடுகிறார்கள். இதில் ஒரு பையன் தன்னுடைய பங்கு நூடுல்ஸை வீட்டுக்கும் கொண்டு போகிறான். அங்கு அவனது அம்மாவும் அதனைச் சாப்பிடுகிறாள். நேரம் கடந்து போகிறது. அதன் பின்னரே அந்த விபரீதம் நடக்கிறது. ஆம். அந்த நூடுல்ஸ் சாப்பிட்ட ஒவ்வொருவரும் மாலை ஐந்து மணி வாக்கில் வாந்தி எடுத்தபடி மயக்கம் அடைகின்றனர். ஊருக்குள் தகவல் தீயாய்ப் பரவுகிறது. நவமணி என்கிற முப்பத்தி எட்டு வயது பெண் மற்றும் பிள்ளைகள் உட்பட மொத்தம் பதினைந்து நபர்களும் மயங்கிச் சரிந்து விட்டனர்.

அந்தப் பதினைந்து நபர்களையும் தோகமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு போகப்படுகிறார்கள். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை தரப்படுகிறது. வீட்டில் இருந்து எடுத்துச் சென்ற பாட்டிலையும் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போயுள்ளனர். அது எண்ணெய்க் கலரில் இருக்கும் களைக்கொல்லி மருந்து என உறுதி செய்யப்படுகிறது. அதற்கு வீரியம் குறைவு. வீரியம் நிறைந்த பூச்சிக்கொல்லி மருந்து என்றால், இந்நேரம் அனைவருமே உயிர்ப் பலியாகி இருப்பார்கள்.

தோகமலை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின், 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து அனைவரும் மணப்பாறை அரசு மருத்துவமனைக்குக் கொண்டுச் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட பதினைந்து நபர்களும் உடல்நலம் தேறி வருகின்றனர். இன்று மதியம் 04.05.2023 வியாழன் வரை அவர்களுக்கு மணப்பாறை அரசு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தரப்பட்டு வருகிறது. அனைவருமே நன்கு உடல்நலம் தேறி வருகின்றனர் என்பது ஆறுதலான தகவல் ஆகும். இதில் நவமணி முப்பத்தி எட்டு வயது பெண்ணும், அவரது மகனும், மகளும் ஆக ஒரே வீட்டில் மூன்று நபர்களும் இந்த விபரீதத்துக்குள் அடங்கி உள்ளனர் என்பது கவனிக்க வேண்டிய விஷயமாகும்.

“வீடுகளில் பூச்சிக் கொல்லி மருந்துகளோ, களைக்கொல்லி மருந்துகளோ எந்த இடத்தில் வேண்டுமானாலும் வைத்து விடக் கூடாது. அவைகளைப் பிறர் கண் பார்வைக்கு படாத இடங்களில் பாதுகாப்பாக வைக்க வேண்டும். இந்த விழிப்புணர்வு நம்மில் பரவலாக இல்லை. கூட்டாஞ்சோறில் அந்தச் சிறு பிள்ளைகள் தெரியாத்தனமாகப் பயன்படுத்தியது, அதிக வீரியம் இல்லாத களைக்கொல்லி மருந்து என்பதால், நல்லவேளை வெறும் வாந்தி மயக்கத்துடன் அந்த அத்தனை நபர்களும் தப்பித்தார்கள். இதே கடுமையான அல்லது வீரியம் மிக்க பூச்சிக்கொல்லி மருந்தாக இருந்திருந்தால், மிகவும் துயரமான சம்பவம் நடந்திருக்கும். இனிமேலாவது வீடுகளில் அது போன்ற மருந்துகளை வாங்கி வைப்பவர்கள், கவனமாகவும் பாதுகாப்பாகவும் வைக்க வேண்டும்.” என்கிறார் சமூகநல ஆர்வலர் ஒருவர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com