
வட அமெரிக்காவில் ‘நன்றி தெரிவிக்கும் நாள்’ வியாழக்கிழமைக்கு (Thanksgiving Thursday) அடுத்த நாள் ‘கருப்பு வெள்ளிக்கிழமை விற்பனை’ (Black Friday Sales) நாள்.
இந்த நாளில் பொருட்களை அதிகப்படியான தள்ளுபடியில் விற்பனை செய்வார்கள். இந்த விற்பனை, திங்கள்கிழமை வரை நீடிக்கும். விற்பனையின் தன்மை பொறுத்து, சில வணிக நிறுவனங்கள் இதை கிறிஸ்துமஸ் வரை நீட்டிப்பது உண்டு. நன்றி தெரிவிக்கும் நாளில் தொடங்கி வருடக் கடைசி வரை நடக்கும் விற்பனைகளை ‘விடுமுறை விற்பனை’ என்று சொல்வதுண்டு. வட அமெரிக்காவில் ஆரம்பித்த Black Friday Sales இப்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது.
இதற்கு ஏன் ‘கருப்பு வெள்ளிக்கிழமை’ என்று பெயர்?
1869ஆம் வருடம், நியூயார்க் வால் ஸ்ட்ரீட் நிதியாளர்கள் இருவர், நியூயார்க் தங்க பரிமாற்றத்திலுள்ள, தங்கச் சந்தையிலிருந்த தங்கங்களை முடிந்த அளவில் வாங்க முயற்சித்தனர். இதனால், தங்கம் விலை ஏறி இலாபம் சம்பாதிப்பது அவர்கள் திட்டம். இதனையறிந்த அன்றைய அதிபர் க்ராண்ட், அரசின் கையிருப்பில் உள்ள தங்கத்தை பொதுச் சந்தையில் இறக்கினார். இதனால் பங்குச் சந்தை சரிய, ஆயிரக்கணக்கான முதலீட்டாளர்கள் திவால் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். இது நடந்தது செப்டம்பர் 24, வெள்ளிக்கிழமை. இதனால் அந்த நாளை ‘கருப்பு வெள்ளிக்கிழமை’ என்ற குறிப்பிட ஆரம்பித்தனர்.
1950 வருடம் பிலடெல்பியா நகரில், நன்றி தெரிவிக்கும் நாளிற்கு அடுத்த நாள் பொருட்கள் வாங்கக் குவிந்த கூட்டத்தால், கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. அதனால் சட்டம், ஒழுங்கை நிலைநிறுத்த காவல்துறைக்கு பெரும் சிக்கல்கள் ஏற்பட்டன. காவல்துறை, இந்த நாளை 'கருப்பு வெள்ளிக்கிழமை' என்று குறிப்பிட ஆரம்பித்தது. இந்த பெயர் அமெரிக்கா முழுவதும் பரவி, 1980 முதல் இந்த நாளுக்கு 'கருப்பு வெள்ளிக்கிழமை’ என்ற பெயர் நிலைத்து விட்டது.
இதற்கு மற்றுமொரு காரணமும் உண்டு. விற்பனை விவரங்களை அதற்கான நோட்டுப் புத்தகத்தில் பதிவிடும் போது, வியாபாரம் நஷ்டம் என்றால் சிகப்பு மையினாலும், இலாபம் என்றால் கருப்பு மையினாலும் எழுதுவார்கள். வருடம் முழுவதும் நஷ்டத்தில் இயங்கும் பெரும்பான்மையான வர்த்தக நிறுவனங்கள், இந்த நாளில் அதிகமான அளவில் பொருட்களை விற்று இலாபம் அடைவதால், விற்பனை விவரங்களை கருப்பு மையில் எழுதத் தொடங்கினார்கள். இந்தக் காரணத்தாலும், ‘கருப்பு வெள்ளிக்கிழமை’ என்ற பெயர் நிலைத்து விட்டது.
கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் நள்ளிரவு முதலே பெரிய வணிக வளாகங்களின் வாசலில் மக்கள் குவிந்து நிற்பார்கள். இந்த நாளில், பொருட்களுக்கு அளிக்கும் தள்ளுபடி அதிகமாக இருப்பதால், விலை குறைவாக இருக்கும். இந்த நாளிற்கு ஓரிரண்டு மாதங்களுக்கு முன்பே, இந்த வருடம் வாங்க விரும்பும் விலையுயர்ந்த பொருட்களை குறித்து வைத்துக் கொண்டு, இந்தத் தருணத்தில் வாங்குவார்கள். பெரும்பாலான வணிக வளாகங்களில் அதிகாலை முதல் நள்ளிரவு வரை விற்பனை நடக்கும். தற்போது ‘ஆன் லைன்’ வர்த்தகத்திலும் இந்த விசேஷ விற்பனை நடைபெறுகிறது.
வட அமெரிக்காவில் ஆரம்பித்த இந்த 'கருப்பு வெள்ளிக்கிழமை' விற்பனை தற்போது பாகுபாடின்றி உலகின் எல்லா கண்டங்களிலும் பரவியுள்ளது. நம் நாட்டிலும் பெரிய வணிக நிறுவனங்களும், ஆன் லைன் வர்த்தக நிறுவனங்களும், கருப்பு வெள்ளிகிழமை விற்பனைக்காகத் தள்ளுபடி விவரங்களை அறிவித்துள்ளார்கள்.
2023ஆம் வருடம் அமெரிக்காவில் கருப்பு வெள்ளிக்கிழமை அன்று மட்டும் விற்பனை 9.8 பில்லியன் டாலர், (980 கோடி டாலர்). 166.8 மில்லியன் மக்கள், (16.8 கோடி) அந்த ஒரு நாளில் பொருட்கள் வாங்கியுள்ளார்கள். இந்த வருடம், கருப்பு வெள்ளிக்கிழமை விற்பனை 10.8 பில்லியன் டாலராக (1080 கோடி) உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.