இந்தியாவில் சாலை போக்குவரத்து தொடர்பான விதிகள் போதுமானதாக உள்ளதாக உலகின் பல்வேறு நாடுகளும் பாராட்டுகின்றன. ஆனால், சாலை விதிகள் சரிவர அமல்படுத்தப் படுகின்றனவா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
சமீபத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவரான ரிஷப் பந்த, ரூர்க்கியில் உள்ள தனது உறவினரை பார்க்க காரில் சென்றபோது விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்தார். காரை வேகமாக இயக்கிய ரிஷப் பந்த் ஒரு கட்டத்தில் சிறிது கண்ணயர்ந்த போது கார், சாலையின் தடுப்பில் உள்ள மோதி விபத்துக்குள்ளானது. கார் தீப்பிடித்ததில் முற்றிலும் சேதமடைந்த்து.
இந்த விபத்து நடந்தபோது எதிர்திசையில் வந்த ஹியானா மாநில பேருந்து டிரைவர் சுஷில்குமார், நடத்துனர் பரம்ஜித் இருவரும் காரின் உள்ளே இருந்த ரிஷப் பந்தை மீட்டனர். பலத்த காயமடைந்த ரிஷப் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். தகுந்த நேரத்தில் மீட்கப்பட்டதால் அவர் உயிர்தப்பினார். அவர் காரில் சென்றபோது சீட் பெல்ட் அணிந்திருக்கவில்லை.
இதேபோல கடந்த ஆண்டு செப்டம்பர் 4 ஆம் தேதி, டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி சென்ற காரும் விபத்துக்குள்ளானது. வேகமாக சென்ற கார், முன்னால் சென்ற வாகனத்தை முந்திச் சென்றபோது விபத்துக்குள்ளானது. படுகாயமடைந்த நிலையில் மிஸ்திரி உயிரிழந்தார். ஒருவேளை அவர் சீட் பெல்ட் அணிந்திருந்தால் காயங்களுடன் உயிர்தப்பியிருக்கலாம்.
நம்நாட்டில் கடந்த ஆண்டு நடந்த கார் விபத்துகளில் கொல்லப்பட்டவர்களில் 10 இல் 8 பேர் சீட்பெல்ட் அணியாததால் உயிரிழந்துள்ளனர். இதேபோல, இரண்டு சக்கர வாகனங்களில் மூன்று விபத்தில் 2 பேர் என்ற கணக்கில் தலைக்கவசம் அணியாமல் சென்றதால் உயிரிழந்துள்ளனர்.
வாகனத்தை அதிவேகத்தில் ஓட்டுவது, குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது, செல்போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுவது, போக்குவரத்து விதிகளை மதிக்காமல் வாகனத்தை ஓட்டுவது போன்றவைதான் விபத்துகளுக்கு காரணம் என்றாலும், காரில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணியாமல் செல்வதும், இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணியாமல் செல்வதும்தான் உயிர்ப்பலி அதிகரிக்க காரணமாகும்.
சீட்- பெல்ட் அணிந்து செல்வதன் மூலம் கார் விபத்தில் காயம் ஏற்படுவது, உயிர்ப் பலி ஏற்படுவதை பாதியாக குறைக்க முடியும். முகக்கவசம் அணிந்து இரு சக்கர வாகனங்களை ஓட்டுவதன் மூலம் விபத்தில் உயிரிழப்பு ஏற்படுவதை 64 சதவீதம் குறைக்க முடியும், தலைக்காயம் ஏற்படுவதை 74 சதவீதம் குறைக்க முடியும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த புள்ளி விவரங்கள் திடீரென சொல்லப்படுவதில்லை. கடந்த காலங்களில் நடந்த விபத்துகள் தொடர்பான புள்ளிவிவரங்களிலிருந்து திரட்டப்பட்டவை. ஆனாலும், சீட் பெல்ட் மற்றும் தலைக்கவசம் அணிவதை பலரும் தவிர்த்து வருகின்றனர். டாடா நிறுவனத்தின் முன்னாள் உயர் அதிகாரி சைரஸ் மிஸ்திரியின் மரணத்துக்கு பின்தான் பல மாநிலங்கள் சாலை பாதுகாப்பு விதிகளை முழு அளவில் செயல்படுத்த தொடங்கியுள்ளன. காரில் பின் இருக்கையில் இருப்பவர்கள் சீட் பெல்ட் அணியாமல் இருந்தால் அபராதம் விதிக்க தொடங்கியுள்ளன. பின்னிருக்கையில் உள்ளவர்கள் சீட் பெல்ட் அணியாவிட்டால் எச்சரிக்கை மணி ஒலிக்கும் வசதியை கார் தயாரிப்பாளர்கள் ஏற்படுத்தித் தர வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது.
ஐந்து ஆண்டுகளில் சாலை விபத்துகளின் எண்ணிக்கையை 50 சதவீதம் குறைப்பதாக உறுதியேற்று 2015 ஆம் ஆண்டு பிரேஸிலியா பிரகடனத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. 2019 இல் விபத்துகளின் எண்ணிக்கை 3 சதவீதம் அதிகரித்துள்ளது.
2021 ஆம் ஆண்டில் மொத்தம் 4.12 லட்சம் சாலை விபத்துகள் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டைவிட 13.6 சதவீதம் அதிகமாகும். இந்த விபத்துகளில் 1.53 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 44.5 சதவீத உயிரிழப்புகளுக்கு காரணம் இரு சக்கர வாகன விபத்துதான். 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் விபத்துகள் 8.1 சதவீதம் குறைந்துள்ளது என்றாலும் உயிரிழப்பு 1.9 சதவீதம் அதிகரித்துள்ளது.
2020- ஆம் ஆண்டில் கொரோனா தொற்று கட்டுப்பாடுகள் காரணமாக விபத்துகளின் எண்ணிக்கை, உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் இதுவரை இல்லாத அளவு குறைந்திருந்தது.
கடந்த 2021 ஆம் ஆண்டில் சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையில் உத்தரப்பிரதேசம் முதல் இடத்தில் உள்ளது. அங்கு 21,792 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது. தமிழகத்தில் 2021 இல் 15,384 பேர் உயிரிழந்துள்ளனர்.
2021 இல் 53 பெருநகரங்களில் 55,432 விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இவற்றில் 5,034 விபத்துகள் சென்னையில் நிகழ்ந்துள்ளன. பெருநகரங்களில் நடந்த சாலை விபத்துகளில் சென்னை முதலிடம் வகிக்கிறது.
சாலை விபத்துகள் அதிகம் பதிவான மாநிலங்களில் 55,682 விபத்து சம்பவங்களுடன் முதலாவது இடத்தில் உள்ளது தமிழ்நாடு. இருசக்கர வாகன ஓட்டிகளால் ஏற்பட்ட விபத்துகளில் உயிரிழப்புகள் ஏற்பட்டதிலும் தமிழ்நாடு (8,259) முதலிடத்தில் உள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகளில் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகளில் 5,360 உயிரிழப்புகள் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ளன. 18,560 விபத்துகளுடன் மாநில நெடுஞ்சாலைகளில் நிகழ்ந்த விபத்துகளில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.
அதிவேகமாக வாகனங்களை இயக்குவதால் நிகழ்ந்துள்ள உயிரிழப்புகளில் 11,419 உயிரிழப்புகளுடன் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.
இந்த எண்கள் அனைத்தும் இந்தியாவில் விபத்துகளின் தலைநகரமாக தமிழ்நாடு ஆகிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
விபத்துகளை தடுக்க வேண்டுமானால் நகர நிர்வாகத்தினரும் மக்கள் பிரச்சினைக்கு தீர்வுகாண்பதில் அதிக நிதி ஒதுக்கி, அதிக கவனம் செலுத்த வேண்டும். சாலைகளை சீரமைப்பது, நடைபாதைகளை ஒழுங்குபடுத்துவது, பாதசாரிகள் சாலைகளை கடக்கும் இடங்களை முறைப்படுத்துவது மற்றும் சைக்கிள்களுக்கு தனி பாதை அமைப்பது ஆகியவற்றில் உரிய கவனம் செலுத்த வேண்டும்.
“ஸ்கைவாக்” என்று சொல்லப்படும் நடைமேம்பாலங்கள் மக்கள், குறிப்பாக முதியவர்கள், பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட வேண்டும். நடைமேம்பாலங்களை பயன்படுத்துவதற்கான படிக்கட்டுகள் இரண்டு அடுக்கு அல்லது மூன்று அடுக்குகள் கொண்டவையாக இருந்தால் அதை மக்கள் தவிர்த்துவிடுவார்கள்.
நன்கு திட்டமிடுதல், நடைமுறைபடுத்துதல், விழிப்புணர்வு மற்றும் அவசர சேவைகள் ஆகியவைதான் சாலை பாதுகாப்புக்கான வழிகாட்டிகள். ஒருபுறம் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும். மறுபுறம் சாலை விதிகளை கடுமையாக அமல்படுத்த வேண்டும். விதிகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க தயங்கக்கூடாது. வாகன ஓட்டிகள் தண்டிக்கப்பட்டால்தான் சாலை விதிகளை மதித்து நடப்பார்கள். இந்த விஷயத்தில் அரசு உறுதியான நடவடிக்கைகள் எடுக்குமானால் இந்தியாலும் சாலை விபத்துகளின் எண்ணிக்கையை குறைக்க முடியும். சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளையும் தடுக்க முடியும்.
வருமுன் காப்போம்! விபத்துகளைத் தடுப்போம்!!