
பொதுவாக நாம் சாலையில் பயணிக்கும் போது சாலையில் போடப்பட்டுள்ள வெள்ளை நிற கோடுகளையும், மஞ்சள் நிற கோடுகளையும் பார்த்திருப்போம். சாலையின் ஒரு சில பகுதியில் கோடுகள் நீளமாகவும், கோடுகள் விட்டுவிட்டு போடப்பட்டு இருப்பதையும் பார்த்திருப்போம். இது போன்ற கோடுகள் சாலையில் ஏன் போடப்படுகிறது..? எதற்கு போடப்படுகிறது..? என்பது நம்மில் சில பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை..! வாகன விபத்துகளை தடுப்பதற்காகவும், வாகனங்களை பாதுகாப்பாக இயக்குவதற்காகவும் இது போன்ற கோடுகள் சாலையில் போடப்படுகின்றன.
வெள்ளை நிறக் கோடுகள் நீளமாக காணப்பட்டால்:
சாலையின் நடுவே வெள்ளை நிற கோடுகள் நீளமாக போடப்பட்டிருந்தால், நாம் அந்தப் பகுதியில் வாகனங்களை மெதுவாக இயக்க வேண்டும், அதேபோல் வேகமாக செல்லக்கூடாது. குறிப்பாக முன்னே செல்லும் வாகனங்களை முந்தி செல்வதை தவிர்க்க வேண்டும் என்பதை குறிக்கிறது. பொதுவாக இது போன்ற நீளமான கோடுகள் சாலையின் வளைவில் போடப்பட்டிருக்கும்.
வெள்ளை நிறக் கோடுகள் விட்டு விட்டு காணப்பட்டால்:
சாலையில் நடுவே வெள்ளை நிறக் கோடுகள் விட்டுவிட்டு காணப்பட்டால், நாம் அந்த பகுதியில் முன்னே செல்லும் வாகனங்களை தேவைப்பட்டால் பாதுகாப்பாக முந்தி செல்லலாம் (overtake) என்பதை குறிக்கிறது.
மஞ்சள் நிறக்கோடுகள் நீளமாக காணப்பட்டால்:
சாலையின் நடுவே மஞ்சள் நிற கோடுகள் நீளமாக காணப்பட்டால், அந்தப் பகுதியில் மிக கவனமாக வாகனங்களை இயக்க வேண்டும் ஏனென்றால் அந்த பகுதியானது வெளிச்சம் குறைவானதாக காணப்படும் என்பதை குறிக்கிறது. அதேபோல் மிக அவசரம் என்றால் மட்டுமே முன்னே செல்லும் வாகனங்களை பாதுகாப்பான முறையில் முந்திச் செல்ல வேண்டும். பொதுவாக மலை பிரதேச சாலைகளில் இதுபோன்ற மஞ்சள் நிற கோடுகளை நாம் பார்க்க முடிகிறது.
இரண்டு மஞ்சள் நிற கோடுகள் நீளமாக காணப்பட்டால்:
சாலையின் நடுவே இரண்டு மஞ்சள் நிற கோடுகள் நீளமாக காணப்பட்டால், அந்தப் பகுதியில் நாம் மிக மிக கவனமாக செல்ல வேண்டும். அதேபோல் முன்னே செல்லும் வாகனங்களை எக்காரணம் கொண்டும் முந்தி செல்லக்கூடாது. இது போன்ற கோடுகள் ஆபத்தான வளைவுகள் போன்ற பகுதியில் போடப்பட்டிருக்கும்.
வாகன ஓட்டிகள், சாலையில் போடப்பட்டிருக்கும் கோடுகளை பார்த்து அந்த பகுதியில், வாகனங்களை முறையாகவும், பாதுகாப்பாகவும் இயக்கினால் பெரும்பாலான சாலை விபத்துகளும், உயிர் சேதங்களும் தவிர்க்கப்படும்.