சிஎஸ்கே-வை திணறடித்த சாய் சுதர்சன் யார்?

சிஎஸ்கே-வை திணறடித்த சாய் சுதர்சன் யார்?

பரபரப்பான ஐபிஎல் இறுதி ஆட்டத்தில் குஜராத் அணியின் ஸ்கோரை வலுப்படுத்தி சென்னை அணிக்கு டஃப் கொடுத்தவர்தான் சாய் சுதர்சன். சென்னை அணியின் பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்து 6 சிக்ஸர், 8 பவுண்டரி விளாசி 96 ரன்களைக் குவித்து ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தினார்.

இறுதிப்போட்டியில் சென்னை அணி சாம்பியன் பட்டம் வென்றாலும், இந்திய அணிக்கு மற்றொரு அதிரடி பேட்ஸ்மேன் கிடைத்ததுபோல், சாய் சுதர்சனை அனைவரும் கொண்டாடி வருகின்றனர்.

அப்போது முதலே 'யார் இந்த சாய் சுதர்சன்?' என்று இணையத்தில் ரசிகர்கள் தேட ஆரம்பித்தனர்.

பெற்றோருடன் சாய் சுதர்சன்
பெற்றோருடன் சாய் சுதர்சன்

சாய் சுதர்சனின் பெற்றோர் பரத்வாஜ் மற்றும் அழகு உஷா. இவரது பெற்றோர் இருவருமே விளையாட்டுப் பின்னணியை சேர்ந்தவர்கள் என்பது மட்டுமல்லாமல், இருவருமே வெவ்வேறு விளையாட்டுத்துறையைச் சேர்ந்தவர்கள். பரத்வாஜ், இந்திய அணிக்காக டாக்காவில் நடந்த தெற்காசிய தடகளப் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். அவரது தாய் அழகு உஷா மாநில அளவிலான வாலிபால் வீராங்கனையாக இருந்தார். தற்போது இவர்களது மகனான சாய் சுதர்சன் மற்றொரு விளையாட்டுத் துறையான கிரிக்கெட்டைத் தேர்ந்தெடுத்து சாதித்து வருகிறார்.

தற்போது 21 வயதாகும் சாய் சுதர்சன், 2001ம் ஆண்டு சென்னை, மயிலாப்பூரில் உள்ள வெங்கடேச அக்ரஹாரத்தில் பிறந்தார். தனது பள்ளிப்படிப்பை சென்னை டிஏவி பள்ளியிலும், அடுத்து சென்னையில் உள்ள சாந்தோம் மேல்நிலைப் பள்ளியிலும் படித்த அவர், அப்போதே கிரிக்கெட்டில் இருந்த ஆர்வம் காரணமாக, அவர்களுக்காக பல கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடினார்.

அதன்பின்னர், தனது கிரிக்கெட் பயணத்தை திருவல்லிக்கேனி பிரண்ட்ஸ் அணியில் இருந்து ஆரம்பித்து, தொடர்ந்து தமிழகத்தின் யு-14 அணி, அடுத்து 2019ம் ஆண்டில் 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியிலும் இடம் பிடித்தார்.

அதே ஆண்டில் ஆழ்வார்பேட்டை கிரிக்கெட் கழக அணிக்காக பாளையம்பட்டி ஷீல்ட் ராஜா என்ற தொடரில் 52 சராசரியுடன் 635 ரன்கள் குவித்ததையடுத்து, சாய் சுதர்சனின் கிரிக்கெட் வாழ்க்கை அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்தது.

இவரது முதல் டி20 போட்டியை 2021-22இல் சையத் முஷ்டாக் அலி கோப்பை போட்டியில் தமிழக அணிக்காக நவம்பர் 4, 2021 அன்று விளையாடினார். அடுத்து தமிழக அணிக்காக விஜய் ஹசாரே தொடரில் விளையாடினார்.

தொடர்ந்து, ரஞ்சி கோப்பையில் தமிழக அணியில் இடம்பெற்ற சாய் சுதர்சன், தனது முதல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணியை எதிர்கொண்ட நிலையில், 179 ரன்களை விளாசி அனைவரின் பார்வையையும் தன் மீது விழச் செய்தார். அந்த தொடரில் மொத்தம் 7 ஆட்டங்கள் ஆடி 572 ரன்களைக் குவித்தார். இதில் 2 சதங்களும், 1 அரை சதமும் அடங்கும்.

தற்போது பிரபலமாகி வரும் டிஎன்பிஎல் டி20 தொடரில் 2021ம் ஆண்டு லைகா கோவை கிங்ஸ் அணிக்காக விளையாடிய சாய் சுதர்ஸன், அந்த தொடரில் 8 போட்டிகளில் விளையாடி 5 அரை சதங்கள் உட்பட 358 ரன்களை எடுத்தார்.

இவ்வாறு ஒவ்வொரு தொடரிலும் முத்திரை பதித்து வந்தபோதுதான், சாய் சுதர்சன் ஐபிஎல்-லில் குஜராத் அணியினர் கண்களில் தென்பட்டார். கடந்த 2022ம் ஆண்டு, அவரை அடிப்படைத் தொகையான 20 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது. அந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் காயம் காரணமாக விஜய் சங்கர் குஜராத் அணியில் விளையாட முடியாத நிலை ஏறபட்டபோது, அவருக்கு பதிலாக களமிறங்கியவர்தான் சாய் சுதர்சன். அந்த சீசனில் 5 போட்டிகளில் விளையாடிய அவர் 1 அரை சதம் உட்பட 145 ரன்களை எடுத்தார்.

அடுத்து இந்த ஆண்டும் குஜராத் அணியில் இடம்பெற்ற சாய் சுதர்சன் துவக்க ஆட்டக்காரராக களமிறங்கி 8 போட்டிகளில் விளையாடி 362 ரன்களைக் குவித்து அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளார்.

ஒவ்வொரு போட்டியையும் அவர் கடந்து செல்லச் செல்ல தனது அதிரடி பேட்டிங் திறமையையும் மெருகேற்றி வரும் நிலையில், தேர்வுக்குழுவினர் பார்வையும் விரைவில் சாய் சுதர்சன் பக்கம் திரும்பும் என்று நிச்சயமாக நம்பலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com