சிலர் அழுவார்! சிலர் சிரிப்பார்! நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்!

சிலர் அழுவார்! சிலர் சிரிப்பார்! நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்!
Published on
காலச்சக்கரம் நரசிம்மா
காலச்சக்கரம் நரசிம்மா

சிலர் அழுவார்! சிலர் சிரிப்பார்! நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்!

சிலர் அழுவார் --- அமரர் கல்கியின் அமரகாவியம் 'பொன்னியின் செல்வனை படித்தவர்கள், திரைப்பட உலகத்திடம்,  கல்கியின் பொன்னியின் செல்வன்,  சிக்கி சீரழிகிறதே என்று அழுவார்கள்! 

சிலர் சிரிப்பார் --  பொன்னியின் செல்வன் என்னும் அமுதத்தை பருகாதவர்கள், ''PS  அல்லவோ சோழர்களின் சரித்திரம்'' என்று அந்த ஒப்பனை செய்யப்பட்ட பிரம்மாண்டத்தை சிலாகித்து சிரிப்பார்கள்.

நான் அழுதுகொண்டே சிரிப்பதற்கு காரணம், ஒரு திரைப்பட இயக்குனரின் மகனாக, திரைப்பட துறை ஒரு சரித்திர காவியத்தை திரைப்படமாக துணிவுடன் எடுத்திருக்கிறதே -- என்று மனமகிழ்ந்து சிரிக்கிறேன். 

அதே சமயம், ஒரு சரித்திர ஆர்வலனாக, சரித்திர ஆய்வுகளை செய்து, புதினங்களை எழுதுபவனாக திகழும் நான், PS-1 மற்றும் (PS-2 ?), வரலாற்றை மதிக்க தவறிவிட்டதே என்பதனால் வருத்தப்படுகிறேன். 

மக்கள் சரித்திரத்தை கற்றால், நாட்டு பற்று வளரும். நாட்டு பற்று வளர்ந்தால் அரசியல் செய்ய இயலாது, என்பதனால் அரசியல்வாதிகள் சரித்திரத்தை மதிப்பதில்லை. ஆனால் அரசாங்கம் செய்ய வேண்டிய பணிகளை, தனி ஒரு மனிதனாக, அமரர் கல்கி, பயணங்களை செய்து, ஆதாரங்களை திரட்டி,  சோழ சரித்திரத்தை ஆவணப்படுத்தி இருக்கிறார்.  அவருக்கு துணையாக சென்றது, அவரது ஆத்ம பலம் மற்றும் ஆஸ்துமா தொல்லைதான். 

உதாரணத்திற்கு, வானவன்மாதேவி, சுந்தர சோழரின் சிதையில் உடன்கட்டை ஏறினாள் என்பதற்கு ஆதாரம் உள்ளது என்று பொன்னியின் செல்வனில் எழுதி இருந்தார். பொன்னியின் செல்வன் எழுதப்பட்ட காலம், 1950-54. ஆனால் அவர் தீர்க்கதரிசி என்பதற்கு அடையாளமாக, ராஜ ராஜா சோழனின் 1000 ஆண்டு விழாவுக்காக திருக்கோவலூர் வீரட்டேஸ்வரர் கோவிலில் திருப்பணிகளை செய்த போது, வானவன்மாதேவி உடன்கட்டை எறியதற்கான ஆதார கல்வெட்டு கிடைத்தது.  இப்படி அவர் சிரமப்பட்டு தேடி தொகுத்த சரித்திர சான்றுகள்தான் பொன்னியின் செல்வனுக்கு அழகு சேர்த்தது. 

சரித்திரம் மட்டுமா? பூகோளம்,  விண்வெளி சாத்திரம், காதல், நகைச்சுவை, வீரம், மனிதநேயம், கோட்பாடுகள், என்று அனைத்தையும் காக்டெயில் செய்து அல்லவா, பொன்னியின் செல்வனை வழங்கினார். 

PS -1 இதை ஒன்றுமே பிரதிபலிக்கவில்லை.  நடிக, நடிகையர் கதாபாத்திரங்களின் ஆழத்தை உணர்ந்து நடிக்கவில்லை. கிளியோபாட்ரா ரோம் நகரினுள் பிரவேசிக்கும் காட்சி ஒன்று போதும், கிளியோபாட்ரா படத்தில், வரலாற்றுக்கு எவ்வளவு மரியாதை கொடுத்தார்கள் என்பதற்கு சான்ராக  PS 1ல் . நடிக நடிகையரும், fancy Dress போட்டியில் பங்கேற்பது போல வந்து நின்றார்கள், சென்றார்கள். 

முதல் பாகத்தில் பாத்திர அறிமுகங்களோடு கதை நிற்கிறது. அடுத்த பாகத்திற்கு எதிர்பார்ப்பு வேண்டும் என்று, ஐஸ்வர்யா ராயை ஊமை ராணியாக காட்டி நீரில் நீந்த வைத்திருக்கிறார்கள். ஆதித்த கரிகாலன் கொலையை எப்படி கையாள போகிறார்கள் என்பதில்தான் படத்தின் வெற்றி இருக்கிறது.

பொன்னியின் செல்வன் என்கிற ஆபரணத்துக்கு, வைர பதக்கம், கோடியக்கரைதான். PS- 1 ல் கோடியக்கரை என்னும் பெயரே உச்சரிக்கப்படவில்லை. சோழர்களின் நிலபரப்பான (Topography) வீராணம் ஏரி, கடம்பூர், குடந்தை, அரசிலாறு, கோடியக்கரை, சூடாமணி விஹாரம், எதுவுமே காட்டப்படவில்லை. இது பெருத்த ஏமாற்றம்.

மேலும், அமரர் கல்கி  பொன்னியின் செல்வனில் எங்கேயும், இலங்கை என்று குறிப்பிட்டிருக்கமாட்டார். ஈழம் என்றுதான் இலங்கை அழைக்கப்பட்டது. இம்மாதிரி விஷயங்களில் திரைப்படம் அக்கறை செலுத்தியிருக்கலாம்!

முதல் பாகம். போனால் போகிறது. இரண்டாவது பாகத்திலாவது, வரலாற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுமா? – கேள்வி எழத்தான் செய்கிறது. ஆனால் அது குறித்து நிலவும்  பேச்சுக்கள், படம் வரலாற்றின் முக்கியத்துவத்தை உணர்த்துவதுதான ரீதியில் இல்லை.

ஒன்று மட்டும் உறுதியாக சொல்லலாம்.

தொழில் ரீதியாக, பண ரீதியாக PS பெரிய வெற்றியை கண்டுள்ளது. ஆனால்,  மக்களின் குருதியில் கலந்துவிட்ட, பொன்னியின் செல்வன் காவியத்திற்கு, திரைப்படம், நீதியை வழங்கி இருக்கிறதா ?

1950-54 காலகட்டத்தில் எழுதப்பட்ட, பொன்னியின் செல்வன், காலத்தை கடந்து, எழுபது வருடங்களுக்கும் மேலாக மக்கள் மனதில் பசுமையாக உள்ளது. ஆனால் 70  வருடங்களாக நிலைத்து நின்ற  காவியம், திரைப்படமாக எடுக்கப்பட்டதும், அதனை பற்றிய பேச்சுகள்  ஒரு சில வருடங்களுக்காகவாவது  நிலைத்து நிற்க வேண்டுமல்லவா? PS-2 பாகத்தை பற்றியாவது பரபரப்பு பேச்சுகள் இருக்க வேண்டும். முதல் பாகத்திற்கு இருந்த பரபரப்பு இரண்டாவது பாகத்திற்கு இல்லை என்றுதான் கூற தோன்றுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com