
மனிதனின் அன்றாட வாழ்க்கையில் பெரும் பங்கு வகிப்பது சைக்கிள். அப்போதெல்லாம் நடந்து போன பழக்கம் மாறி, மிதிவண்டியில் போகும் பழக்கம் வரத்தொடங்கியது. சைக்கிள் நடுத்தர வர்க்கத்தினர்களுக்கு பொிய வரப்பிரசாதம். நடைப்பயிற்சி போலவே சைக்கிளில் செல்வதும் ஆரோக்கியத்திற்கு வழி வகை செய்யும். மூலை முடுக்குகளில் எல்லாம் புகுந்து வரும் அளவிற்கான வசதிகளைக் கொண்டதே சைக்கிள். ஒரு வீட்டிற்கு ஒரு சைக்கிள் இருக்கும்.
இதைக்கற்றுக்கொள்ள எவ்வளவு ஆா்வம்! குரங்கு பெடல் போட்டு கீழே விழுந்து உடலில் சிராய்ப்புகள் கடந்து கற்றுக்கொண்ட விதமே தனி. மிதி வண்டி மனித வாழ்வின் ஒரு அங்கம்!
தற்போது பல மாடல்களில் பொியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஓட்டுவதற்கு இலகுவாக சந்தைப்படுத்தப் படுகிறது. இப்போது காலம் மாற மாற இருசக்கர நான்கு சக்கர வாகனங்கள் வந்தாலும், மிதி வண்டியின் பயன்பாடு குறையாமல் இருந்து வருவது மிதி வண்டிக்கான பெருமை என்றே சொல்லலாம்.
ஹம்பர், ராலி, பின்னர் ஹொ்குலர், அட்லஸ், போன்ற பலவகை பெயர்களில் உலாவருவது நடைமுறையில் உள்ளது. எளியவர்களின் வண்டி மிதிவண்டி. இன்றைய தினம் வரை நம்மோடே நமக்காக வாழ்ந்து வரும் மிதிவண்டியின் பெருமையை உணர்த்துவதே, ஜூன் 3 ம் நாள் உலக மிதிவண்டி தினமாகும்.
சரி அதன் வரலாறை பாா்க்கலாம்.
உலகில் முதன் முதலில் மிதி இயக்கி (பெடல்) மிதிப்பதன் மூலம் இயங்கும் வகையிலான மிதி வண்டியை 'கிா்க் பாட்ரிக் மேக்மில்லன்' என்பவர் வடிவமைத்தாா். ஆகவே இன்று மிதி வண்டியை கண்டு பிடித்தவராக அவர் அடையாளப்படுத்தப்படுகிறாா்.
ஸ்காட்லாந்து நகரில் பட்டறை ஒன்றில் கொல்லராக வேலை பாா்த்து வந்த இவர் திசைமாற்றி, தடை மற்றும் மிதிஇயக்கி, ஆகிய அனைத்து பாகங்களையும் உள்ளடக்கி முழுமையான மிதி வண்டி ஒன்றை 1839ம் ஆண்டில் வடிவமைத்தாா், இதில் பின்சக்கரம் முன்புற சக்கரத்தைவிட சற்று பொியதாக இருந்தது. முன் சக்கரத்தோடு திசைமாற்றி, தடை, மற்றும் மிதி இயக்கி ஆகியவை இணைக்கப்பட்டிருந்தது. தையல் இயந்திரத்தில்உள்ள மிதிஇயக்கியை போன்று கீழ்நோக்கி அழுத்தும்போது, பின்புற சக்கரம் முன்னோக்கி இழுக்கப்பட்டு மிதி வண்டி இயங்கியது.
அதனைத்தொடர்ந்து 'ஏா்னெஸ்ட் மிசாக்ஸ்' என்ற பிரான்ஸ் நாட்டைச்சோ்ந்த கொல்லர் தயாாிக்க முன்வந்தாா். அவரது கடுமையான முயற்சி மற்றும் உழைப்பின் காரணமாக, 1863ம் ஆண்டு 'கிராங்ஸ் 'மற்றும் 'பால் பியரிங்' கொண்டு வடிவமைக்கப்பட்ட மிதி இயக்கியை தயாாித்து வெற்றியை நிலைநாட்டினாா்.
முன்புற சக்கரத்தோடு இணைக்கப் பட்டிருந்த இந்த இயக்கியை மிதித்து சுற்றும்போது முன்புறசக்கரம் முன்னோக்கி தள்ளப்பட்டு மிதிவண்டி இயங்கும் படி வடிவமைக்கப்பட்டிருந்தது, இந்த வகை மிதி வண்டிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது, 1868 ம் ஆண்டு 'மிசாக்ஸ் கம்பெனி' என்ற பெயரில் மிதி வண்டி நிறுவனம் ஒன்றைத் துவக்கினாா்.
இது உலக அளவில் முதன்முதலான மிதிவண்டி நிறுவனமாகும். அதன்பின்னர் சர் எட்மணட்கிரேன் என்பவர், சான் கொம்பு இசுட்டோ்லியுடன் சான் பாய்டு தன்லப்புடன், ஓா் ஒப்பந்தம் ஏற்படுத்தி 1910ம் ஆண்டு இங்கிலாந்து நாட்டிலுள்ள ஆசுடன் (Aston) நகரில் எா்குலிசு (Hercules) என்ற மிதிவண்டி நிறுவணத்தைத்துவக்கிய பத்தே ஆண்டுகளில் உலகில் மூலை முடுக்குகளில் சாலைகளில் எல்லாம் தடம் பதித்தது. அதன் வரிசையாக பலநிறுவனங்கள் பல பெயர்களில் சந்தைக்கு வந்தாலும் ஹொ்குலஸ் தனக்கென ஒரு நிலையான இடத்தில் உள்ளது.
எனவே மிதிவண்டியை நடுத்தர வர்க்கத்தினர்களின் தோழன் என்றே சொல்லுவோம். உலக மிதிவண்டி நாளில் மிதி வண்டியை மிதிப்பதோடு அதனை மதிப்போம்.