உலக இசை தினம்: நம்பிக் 'கை' மாற்றுத்திறனாளி டிரம்ஸ் கலைஞர் தான்சேன்!

உலக இசை தினம்: நம்பிக் 'கை'  மாற்றுத்திறனாளி டிரம்ஸ்  கலைஞர் தான்சேன்!

இன்று உலக இசை தினம். தினமும் தான் இசை கேட்டுக் கொண்டும், அதைக் கொண்டாடிக் கொண்டும் இருக்கிறோமே? தனியாக அதற்கென்று ஒருநாளை ஒதுக்கி கொண்டாட வேண்டிய அவசியமென்ன என்று தோன்றலாம். அதற்கான பதில் கீழே;

உலக இசை தினம் ஏன் கொண்டாடப்படுகிறது?

உலக இசை தினம் இசையின் பன்முகத்தன்மையை மேம்படுத்துவதையும், உலகளாவிய இசையின் மூலம் சமூக உணர்வை வளர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. அதை முன்னிறுத்தியே 1982 ஆம் ஆண்டு ஜூன் 21 ஆம் நாள் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் முதல் உலக இசை தினம் கொண்டாடப்பட்டது. 1000 க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் மற்றும் பாடகர்கள் தெருக்களிலும் பூங்காக்களிலும் இசை நிகழ்ச்சிகளை நடத்தினர், உலக இசை ரசிகர்களைக் குளிரக் குளிர இசை மழையில் நனைய வைத்த இந்த நிகழ்வானது மாபெரும் வெற்றியைப் பெற்றது. எனவே அந்த தினத்தையே உலக இசை தினமாக அறிவிட்து விட்டால் என்ன என்று யோசித்தார் அன்றைய ஃப்ரெஞ்சு கலாச்சார அமைச்சராக இருந்த ஜாக் லாங். அப்படி கலாச்சர அமைச்சர் மற்றும் பிரபல ஃப்ரெஞ்சு பத்த்திரிகையாளரும், இசை தயாரிப்பாளருமான மாரிஸ் ஃப்ளூரெட் ஆகியோரால் உருவாக்கப்பட்டது தான் உலக இசை தின விழா கருத்தாக்கம்.

இசையை ரசிக்க மொழி தேவை இல்லை என்பதற்கேற்ப அவர்கள் தொடங்கி வைத்த நிகழ்வு இன்று உலகம் முழுவதும் பரவி அனைவராலும் கொண்டாடப்படும் விழாவாகியிருக்கிறது. இன்றைய தினம் உலகின் பல்வேறு இசை வடிவங்களைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள முயற்சிக்கலாம். புதிதாக இசை கற்றுக் கொள்ளத் தொடங்கலாம். இசைக்கருவிகளை இயக்க ஆர்வம் கொள்ளலாம். அது தவிர, உலகம் முழுவதிலும் உள்ள அனேக பள்ளி கல்லூரிகளில் பிரபல இசைக்கலைஞர்கள் முதல் தன்னம்பிக்கை மிகுந்த இசைக்கலைஞர்கள், இசையில் சாதித்த மூத்த இசைக்கலைஞர்கள் உள்ளிட்டோரை சிறப்பு விருந்தினர்களாக அழைத்து இந்நாளில் கெளரவிக்கிறார்கள். அவர்கள் மூலமாக இசை கற்றுக் கொள்ளும் மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கிறார்கள்.

அப்படி இம்முறை உலக இசைவிழாவை முன்னிட்டு என் மகளின் பள்ளிக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருப்பவர் மாற்றுத் திறனாளி டிரம்ஸ் இசைக்கலைஞர் தான்சேன். பள்ளியின் இசை விழா குறித்த அறிவிப்புகளில் அவரது புகைப்படத்தை பார்த்ததும் அவரைப் பற்றி கல்கி ஆன்லைன் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளத் தோன்றியது.

அக்பரின் அவையை அலங்கரித்த உலகப்புகழ் மிக்க இசைக்கலைஞர் தான்சேனின் பெயரை வைத்துக் கொண்டிருப்பது மட்டுமே இவருக்கான சிறப்பு இல்லை. டிரம்ஸ் இசைக்கருவியை வாசிக்க இன்றியமையாத தேவையான இரண்டு கைகளுமே இவருக்கு இல்லை என்பது தான் இவருக்கான மிகப்பெரிய சிறப்பு. கைகளை இழந்தவர் எப்படி டிரம்ஸ் வாசிக்கிறார்? எல்லாம் தரவல்ல தன்னம்பிக்(கை)யின் துணை கொண்டு வெகு அருமையாக டிரம்ஸ் வாசிக்கிறார் தான்சேன். டிரம்ஸ் மட்டுமல்ல கீ போர்டு கூட வாசிக்கிறார்.

மின்சார விபத்தால் பறிபோன கைகள்:

பிறக்கும் போது நானும் எல்லோரையும் போல இரண்டு கைகளுடன் தான் பிறந்தேன். 10 வயதில் ஒரு மின்சார விபத்தில் சிக்கியதால் அதற்கான சிகிச்சையின் போது என் இரண்டு கைகளையும் மருத்துவர்கள் எடுத்து விட்டார்கள். ஆரம்ப நாட்களில் உலகமே இருண்டு விட்டதாகத் தோன்றியது. என் அம்மாவும், நண்பர்களும் எனக்கு ஊக்கமளித்தார்கள். என் அம்மா எனக்கு மிகப்பெரிய பலம். அவர்கள் மூலமாக நான் படிப்படியாக என் சோகத்தில் இருந்து மீ்ண்டு டிரம்ஸ் கற்றுக் கொள்ளத் துவங்கினேன். அதற்கு எனக்கு டான்ஸ் மாஸ்டர் ராகவா லாரன்ஸ் பெரிய அளவில் உதவி செய்தார். என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து அவரது காஞ்சனா 3 திரைப்படத்தில் இரு கைகளையும் இழந்த என்னை பைக் ஓட்ட வைத்து ஓரிரு காட்சிகளில் நடிக்க வாய்ப்பும் கொடுத்தார். இன்று எனக்கு மனைவியும், 3 வயது மகளும் உண்டு. படம் வாயிலாக மட்டுமல்ல விருது விழாக்கள் மற்றும் திரைப்படம் பார்த்து விட்டு சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க பல பள்ளி, கல்லூரி விழாக்களில் அழைக்கிறார்கள். இதற்கு காரணமான அனைவருக்கும் என்றென்றும் நான் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.

ஒரு விருது விழாவில் டிரம்ஸ் இசைத்து விட்டுப் பேசும் தான்சேன். தான் கைகளை இழந்த நிலை பற்றியும், தன்னம்பிக்கையால் முயன்று கற்றுக் கொண்ட தனது டிரம்ஸ் இசைத்திறன் கொண்டு இசை ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்ட கதையை இவ்விதமாக உருக்கமாகத் தெரிவிக்கிறார்.

அவரைப் பற்றிய தேடலில் எனக்குக் கிடைத்த சுவாரஸ்யங்கள் இவை.

இப்படி அடையாளம் கண்டு நாம் முன்மாதிரியாகக் கொள்ளத்தக்க மாற்றுத்திறனாளி இசைக்கலைஞர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் உலக இசை தினமான இன்று நம் வணக்கங்களை உரித்தாக்குவோம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com