
பொதுவாக எல்லோருக்கும் இசை பிடிக்கும். இசை கேட்பது, சந்தோஷமளிப்பதற்குக் காரணம் என்ன தெரியுமா? அந்த நேரத்தில் மூளையில் "டோபமைன்" என்ற ரசாயனம் சுரப்பது தான் காரணம் என்கிறார்கள் விஞ்ஞானிகள். இசை என்றால் குரல் தேவையில்லை, இசைக் கருவிகளில் இருந்து எழும் நாதங்கள் கூட "டோபமைன்"சுரக்கச் செய்கிறது என்கிறார்கள் மான்ட்ரியல் மெக்கில் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.
மன அழுத்தத்தை குறைக்க, ஒரு வேலையை சுறுசுறுப்பாக செய்ய, வேலைத் திறனை அதிகரிக்க என பல விஷயங்களில் இசை நமக்கு உதவுகிறது. மூளையின் செயல்களை தூண்டச் செய்யும் ஆற்றல் இசைக்கு உண்டு என்கிறார்கள். இசைப்பிரியர்களுக்கு ஐ.கியூ அளவு அதிகரிக்கும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
இரவில் தூங்குவதற்கு முன் இசை அல்லது பாடல்களை கேட்பவர்களின் தூக்க அளவு மற்றும் தரம் உயருகிறது. அதாவது ஆழ்ந்த நீண்ட தூக்கத்தைப் பெறுகிறார்கள். குறிப்பாக வயதானவர்களுக்கு இது பொருந்தும் என்கிறார்கள் அமெரிக்க ஜெரியாட்ரிக்ஸ் சொசைட்டி ஆராய்ச்சியாளர்கள். இசையை கேட்காதவர்களை விட கேட்ட வயதானவர்கள் நன்றாக தூங்கினர்.
துள்ளல் இசையை கேட்டவர்களை விட மெல்லிய இசையைக் கேட்டவர்கள் நன்றாக தூங்குவதாக ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.
இளவயதில் படிக்கும் போது கூடவே இசைப் பாடங்களையும் கற்று வரும் குழந்தைகள் மற்ற குழந்தைகளை விட அதிக நினைவுத் திறனுடனும், ரிசனிங் மற்றும் திட்டமிடல் திறமைகளுடன் இருப்பதோடு மற்ற பாடங்களிலும் நல்ல மதிப்பெண்கள் பெறுவதை நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டம் பல்கலைக்கழக ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.
ஏழு வயதிற்கு முன்பே இசையை கற்கத் தொடங்கினால் அது குழந்தைகளின் மூளையை வலிமையடைச் செய்கிறது என்று கன்கார்டியா பல்கலைக்கழக ஆய்வில் கண்டறிந்துள்ளனர். இந்த இசை பயிற்சி மூளை நரம்புகளை தூண்டி முன் கூட்டியே திட்டமிடல், முன்னேற்றத்திற்கான மன எழுச்சி ஆகியவற்றை உருவாக்கும் என்று கூறுகிறார்கள்.
ஆபரேஷன் செய்யப் போகும் நோயாளிகள் மயக்க மருந்து கொடுக்கப்படும் முன் சிறிது நேரம் பிடித்த இசையை கேட்பதன் மூலம் அவர்களின் நரம்புகள் தளர்ச்சி அடைந்து அவர்களின் மனநிலையில் இறுக்கம் குறைவதாக அமெரிக்க விஞ்ஞானிகள் ஆய்வில் கண்டறிந்துள்ளனர். உங்களின் ஆரோக்கிய மேம்பாட்டிற்கு பலவகைகளில் இசையை பயன்படுத்தலாம் என்கிறார்கள் பிரிட்டிஷ் அசோசியேஷன் ஆஃப் மியூசிக் தெரபி ஆராய்ச்சியாளர்கள்.
அதிகப்படியான உடல் சோர்வு ஏற்பட்டிருக்கும் நிலையில் சிறிது நேரம் உங்களுக்கு பிடித்த இசையை கேட்டு மகிழ்ந்தால் அது உங்கள் உடலின் தசைகள் மற்றும் நரம்புகளை தளர்த்தி உங்களை சுறுசுறுப்படையச் செய்கிறது.
உங்கள் மூடு சரியாக இல்லாமல் அவதிப்படுகிறீர்களா? இசை உங்கள் மனநிலையை மாற்றும். தீராத வலிகளால் அவதிப்படுகிறீர்களா? இசை சிகிச்சை சரியான தீர்வாக இருக்கும் என்கிறார்கள். இந்த வகையில் "பாப்" மியூசிக் முதல் இடத்தில் உள்ளதாம். இது கிளாசிக்கல் மியூசிக்கை விட நீண்ட நாள் கழுத்து வலி, முதுகு வலி போன்றவைகளுக்கு நல்ல நிவாரணம் தருகிறது. மனதை ஒரு முகப்படுத்த யோகா, தியானம் உதவுவது போல இசையும் உதவுகிறது என்கிறார்கள்.
சாப்பிடும் போது இதமான கிளாசிக்கல் இசையை கேட்டபடி சாப்பிடுபவர்கள் குறைந்த கலோரி மற்றும் கொழுப்பு குறைந்த உணவுகளையே எடுத்துக் கொள்கிறார்கள். மாறாக ஜாஸ், ராக் போன்ற இசையை கேட்டபடி சாப்பிடுபவர்கள் தான் பாஸ்ட் புட் மற்றும் ஜங்க் புட் போன்ற அதிக கலோரிகள் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்கிறார்கள் என்கிறார்கள் லண்டன் யுனிவர்சிட்டி ஆராய்ச்சியாளர்கள்.
உலக மக்களின் கவலையை தீர்க்கும் மாமருந்தாக இசை உள்ளது. குறிப்பாக பெண்களின் மனநிலை மாற்றத்திற்கு இசை பெரும்பங்கு வகிக்கிறது. சீரற்ற எண்ண ஓட்டம், அதீத சிந்தனை, கவலை, எதிர்பார்ப்பு, ஏமாற்றம் போன்ற உணர்வு சிக்கல்களில் இருந்து மீள்வதற்கு இசை உதவுகிறது. சூழ்நிலைகள் ஏற்படுத்தும் பாதிப்புகளில் இருந்து பெண்கள் விரைவாக மீள்வதற்கும் இசை சிறந்த வழியாகும் என்கிறார்கள். இசையை கேட்டுக் கொண்டிருக்கும் போது நாம் அதிகமாக மற்றவர்களை புரிந்து கொள்ள முயற்சிப்போம் என்றும், அதிகப்படியான தயாள குணமும் வரும் என்று ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.